புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் – USC அணி கோப்பையை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
புன்னைக்காயலில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி இறுதிப்போட்டியில் வென்று சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.
அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான - மாவட்ட அளவிலான 46ஆவது கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி 08.06.2019 அன்று துவங்கி, 16.06.2019 நிறைவுற்றது.
- Youngster FC, தூத்துக்குடி
- பட்டணம் இளைஞர் மன்றம், வீரபாண்டியபட்டணம்
- DCW FC, சாஹுபுரம்
- St. Joseph FC, புன்னக்காயல்
- ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC), காயல்பட்டிணம்
- Spirited Youth FC, தூத்துக்குடி
- SDAT Sports Hostel, தூத்துக்குடி
- Friends Club, தூத்துக்குடி
- MRC FC, நாசரேத்
- South Coast FC, தூத்துக்குடி
- காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC), காயல்பட்டிணம்
ஆகிய அணிகள் சுற்றுபோட்டியில் பங்குபெற்றன.
12-06-2019 அன்று நடைபெற்ற போட்டியில், Spirited Youth, தூத்துக்குடி அணியை எதிர்த்து களம் கண்ட ஐக்கிய விளையாட்டு சங்கம், பஷீர் அவர்கள் கோல் அடிக்க, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்குத் தகுதிபெற்றது.
14-06-2019 அன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில், St. Joseph, புன்னக்காயல் அணியை எதிர்த்து களம் கண்ட ஐக்கிய விளையாட்டு சங்கம், பஷீர் அவர்கள் கோல் அடிக்க, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. தொடர்ந்து, 15-06-2019 அன்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் காயல் ஸ்போர்டிங் கிளப், காயல்பட்டிணம் அணியை வென்று SDAT Sports Hostel, தூத்துக்குடி அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
16.06.2019 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும், SDAT Sports Hostel, தூத்துக்குடி அணியும் களம் கண்டன. இப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஐக்கிய விளையாட்டு சங்க வீரர் அமீர் கோல் அடிக்க 1-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி நிறைவுற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தில், தூத்துக்குடி அணி 1 கோலும், ஐக்கிய விளையாட்டு சங்க அணியின் வீரர்கள் தாவூத் மற்றும் ஷாஹுல் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். பின்னர், ஆட்டம் நிறைவடையும் வரை ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், 3-1 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றிபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஈரணி வீரர்களுக்கும் தனிப்பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் வீற்றிருந்தோர் அப்பரிசுகளை வழங்கினர்.
பின்னர், இரண்டாமிடம் பெற்ற SDAT Sports Club, தூத்துக்குடி அணிக்கு- வெற்றிக்கு முனைந்த அணிக்கான சுழற்கோப்பையையும், இறுதிப் போட்டியில் வென்று முதலிடம் பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு வெற்றி பெற்ற அணிக்கான - அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பையையும் வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில், புன்னைக்காயல், நாசரேத், காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி:
‘கோடாக்கா’ ஃபைஸல்
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
|