ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் ‘காயலர் சங்கமம்‘ நிகழ்ச்சி, அம்மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் 30.08.2011 அன்று (நேற்று) 19.00 மணிக்கு நடைபெற்றது.
இதுகுறித்து அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
மகிழ்வான ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, எமது சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் ‘காயலர் சங்கமம்‘ நிகழ்ச்சி, மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் 30.08.2011 அன்று (நேற்று) 19.00 மணிக்கு நடைபெற்றது. ஆர்வத்துடன் வருகை தந்த அனைவருக்கும் துவக்கமாக குளிர்பான வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது. ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் தொழுகையை வழிநடத்தினார்.
பின்னர், நீண்ட இடைவெளிக்கும் பின் சந்தித்துக்கொண்ட காயலர்கள் அனைவரும் தமக்குள் மகிழ்ச்சியுடன் கதைத்தனர்.
பின்னர், ‘பெற்றோர் மீது பிள்ளைகளின் கடமைகள்‘ என்ற தலைப்பில் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் இரத்தினச் சுருக்கமாக உரையாற்றினார்.
பொருள் சேர்ப்பதற்காக குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து வந்திருக்கும் நாம், நம்மைப் பிரிந்திருக்கும் பெற்றோரின் மனதைக் குளிர்விக்கும் வகையில் நமது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்… அன்றாடம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்துக்கொள்ள நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்...
அவர்களின் தேவைகளையறிந்து இயன்றளவுக்கு அதை நிறைவேற்றித் தர ஆவன செய்திட வேண்டும்...
காலையில் விழித்ததிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை இயந்திரத் தனமாக உழைத்துக்கொண்டு, ஓய்வைத் தேடி அலையும் சிங்கை காயலர்களாகிய நீங்கள், ஒரு திட்டம் வகுத்து, அனைவரும் ஒரே இடத்தில் தங்கும் வகையில் உங்கள் சூழலை அமைத்துக்கொண்டால், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் இருக்க அது வழிகோலும் என்பது மட்டுமின்றி, வயது முதிர்ச்சியடையும் காலத்தில் நமது உடல் நலனைப் பாதுகாக்கும் ஒரு கருவியாகவும் அது அமையும்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
பின்னர், ‘தாருத்திப்யான் நெட்வர்க்‘ நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.
புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி செவ்வனே செய்து முடிப்பதில் சிங்கை காயல் நல மன்றத்தின் நேர்த்தி, இக்ராஃவின் தலைமைப் பொறுப்பை அனைவரும் பாராட்டும் வகையில் அலங்கரித்த பாங்கு ஆகியவற்றைப் பாராட்டிப் பேசிய அவர், இன்னும் பல நல திட்டங்களைத் தீட்டி, நகர்நலப் பணிகளை தொய்வின்றி செய்ய விரும்பும் இம்மன்ற நிர்வாகத்திற்கு, கருத்து வேறுபாடுகளின்றி அனைத்து காயலர்களும் எல்லா ஒத்துழைப்புகளையும் மனமுவந்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஹாஃபிழ் அஹ்மத் துஆவுடன் அந்த அமர்வு நிறைவுற்றது.
பின்னர், இரவு உணவு விருந்துபசரிப்பு துவங்கியது. ஹாஜி ‘அமைப்பு‘ ஷம்சுத்தீன் அவர்களின் சமையல் மேற்பார்வையில், ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், செய்யித் முஹ்யித்தீன், உதுமான், ஹஸன் உள்ளிட்ட மன்ற அங்கத்தினர் உணவு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
அனைவருக்கும் ஸஹன் முறையில் காயல்பட்டினம் களறி சாப்பாடு பரிமாறப்பட்டது. முற்கால நடைமுறைப்படி ஸஹனுக்கு மூவர் என்ற முறையில் விருந்துபசரிப்பு நடைபெற்றது.
நிறைவாக, பெருநாளை முன்னிட்டு சிரமம் பாராமல் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளை ஆர்வத்துடன் செய்து தந்தமைக்காக, ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர். அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
உணவுண்ட பின்னரும் சிறிது நேரம் கலந்துரையாடிய காயலர்கள், மீண்டும் சந்திக்கும் நாளை எதிர்பார்த்தவர்களாக 22.00 மணிக்கு அவரவர் இல்லம் சென்றனர்.
இந்நிகழ்வில், சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ, அதே பள்ளியின் இமாமும், அப்பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் மத்ரஸா மிஃப்தாஹுல் உலூம் பாடசாலையின் தலைமையாசிரியருமான மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ, ஹாஜி அஹ்மத் ஃபுஆது, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பைச் சார்ந்த ஹாஜி ஷாஜஹான் உட்பட திரளான காயலர்கள் பங்கேற்றனர். குடும்பத்துடன் வசிக்கும் காயலர்கள் தம் மனைவி, மக்களுடன் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காயலர்கள் நேற்று காலை 08.00 மணிக்கு சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளி, ஹாஜ்ஜா ஃபாத்திமா பள்ளி, மஸ்ஜித் அப்துல் கஃபூர், மஸ்ஜித் பென்கூலன் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
ஜாமிஆ சூலியா பள்ளியில் பெருநாள் தொழுகையை நிறைவுசெய்த பின் காயலர்கள் தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-
படங்கள்:
ஹாஜி அஹ்மது ஃபுஆது,
மற்றும்
S.I.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ,
சிங்கப்பூர். |