செய்தி எண் (ID #) 7155 | | |
வெள்ளி, செப்டம்பர் 2, 2011 |
தஃவா சென்டரில் அனுமதியின்றி நுழைந்த காவல்துறை: ஜும்மாவில் கண்டனம்! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 4715 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய |
|
கடந்த சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 27) காயல்பட்டினம் தஃவா சென்டரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் நிர்வாக அனுமதியின்றி நுழைந்து, அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை - நிர்வாக அனுமதியின்றி - அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து - இன்று நடந்த ஜும்மா தொழுகையின் போது, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் கத்தீப் மௌலவி, எம்.ஐ. அப்துல் மஜீத் மஹ்ழரி - காவல்துறையினரை வன்மையாக கண்டித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 27.08.2011 நள்ளிரவில் ஆறுமுகநேரி காவல்துறையினர் மகளிர் காவலர்களுடன் தஃவா சென்டரில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு 22 வயதைச் சேர்ந்த சிநேகா என்ற கிறித்தவ மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேடுவதாகவும், அவர் அங்கு இருப்பதாகவும் தங்களுக்கு கம்பளயின்ட் வந்திருப்பதாகவும் அதன்பேரில் அவரை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் கூறி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சென்னை, பொன்னேரியைச் சேர்ந்த சிநேகா என்ற கல்லூரி மாணவி தனது சுயவிருப்பத்தின் பேரில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று தனது பெயரை ஆயிஷா சித்தீக்கா என மாற்றிக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் தனது இஸ்லாமியக் கல்வியைப் பெறுவதற்காக தஃவா சென்டர் வந்துள்ளார். அவர் தாமாக விரும்பி இஸ்லாத்தை ஏற்றுள்ளார். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் அவர் 18 வயதைக் கடந்தவர். அவர் விரும்பிய கொள்கையை ஏற்றுச் செயல்பட அவருக்கு உரிமை உள்ளது. இதற்கான எல்லா ஆவணங்களையும் முறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரும் தான் விரும்பியே இஸ்லாத்தைத் தழுவியதாகவும், தன்னை யாரும் நிர்பந்திக்கவில்லை.
இதை முறையா விசாரிக்கச் சென்ற நிர்வாகிகளிடமும் காவல்துறையினர் தகாத முறையில் பேசியதுடன், அவர்களையும் நடவடிக்கை எடுத்து கைது செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். ஒருவர் தனது மார்க்கத்தை பிறருக்குக் கற்றுக்கொடுப்பதும் போதிப்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை என்பதை உணர்ந்து தஃவா சென்டர் பன்னெடுங்காலமாக காயல்பட்டிணத்தில் செயல்பட்டுவருகிறது. இதன் எந்தவொரு செயல்பாடுகளும் வெளிப்படையானவை; சட்டத்திற்குட்பட்டவை. இவ்வாறு நாட்டின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்தில் காவல்துறையினர் இவ்வாறு அத்துமீறி செயல்பட்டதை இனி எப்போதும் பொறுத்துக்கொள்ள இயலாது. சட்டத்தை மதித்துச் செயல்படுவதால், நாங்கள் கோழைகள் அல்லர் என்பதை காவல்துறையினருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்றதொரு செயலை இன்னொரு முறை அனுமதிக்கமாட்டோம்.
இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார்.
இப்பிரச்சனை குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துவருவதாக தஃவா சென்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|