காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நோன்புப் பெருநாள் காயலர் ஒன்றுகூடல் 31.08.2011 அன்று, மழலையர் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது.
இதுகுறித்து பேரவை நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நோன்புப் பெருநாள் காயலர் ஒன்றுகூடல் 31.08.2011 நோன்புப் பெருநாளன்று இரவு 07.30 மணிக்கு, ஹாங்காங் Middle Road Park என்ற Sindhi Parkஇல் நடைபெற்றது.
நிகழ்முறை:
நிகழ்ச்சிக்கு ஹாஜி மூஸா நெய்னா தலைமை தாங்கினார். பேரவை துணைத்தலைவர் ஜனாப் எம்.செய்யித் அஹ்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்ற உறுப்பினர் ஜனாப் காழி அலாவுத்தீன் அவர்களின் மகன் ஹாஃபிழ் கே.ஏ.அபூபக்கர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர், நிகழ்ச்சி தலைவர் ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா உரையாற்றினார்.
தலைவர் உரை:
அடுத்து, பேரவையின் அண்மைச் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு உதவிகள் கோரி காயல்பட்டினத்திலுள்ள நலிந்தோரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலித்து உதவியமை குறித்து பேரவைத் தலைவர் ஜனாப் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் விளக்கிப் பேசினார்.
மாணவர் நேர்காணல்:
பின்னர், ஹாங்காங்கில் பல்கலைக் கழக படிப்பிற்கு சேர்க்கை பெற்றுள்ள காயல்பட்டினம் மாணவர்களுடன் ஒரு சிறிய நேர்காணல் நடத்தப்பட்டது.
துவக்கமாக, Hong Kong University of Science and Technologyயில் பொறியியல் துறையில் M.S. முதுகலை படிப்புக்கு சேர்க்கை பெற்றுள்ள ஜனாப் எச்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மகன் நஃபாயிஸ் ஹஸன் என்ற மாணவரும்,
அவரைத் தொடர்ந்து, அதே பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ. இளங்கலை பட்டப்படிப்புக்கு சேர்க்கை பெற்ற ஜனாப் டாக்டர் முஹம்மத் லெப்பை அவர்களின் மகன் தஸ்பீஹ் மூஸா என்ற மாணவரும் நேர்காணல் செய்யப்பட்டனர்.
பி.இ. பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்புக்கு சேர்க்கை பெற்ற இலங்கை நஜ்முத்தீன் ஹாஜியார் அவர்களின் மகன் ஸப்ரீ இஸ்மத் கல்லூரியில் இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்ட காரணத்தால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை. எனவே, அவர் குறித்து சிறிய விபரமும் இந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங் பல்கலைக் கழக படிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வையளித்திடும் பொருட்டு, இப்படிப்புகளுக்கான சேர்க்கை முறைமைகள், கல்விக் கட்டணம், ஹாங்காங் பல்கலைக்கழக படிப்புகளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், ஹாங்காங்கில் படிப்பதன் நன்மைகள், அதனால் கிடைக்கவிருக்கும் நல்ல வேலைவாய்ப்புகள் குறித்து நேர்காணலில் கலந்துகொண்ட மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மழலையர் நிகழ்ச்சிகள்:
பின்னர், ஹாங்காங் வாழ் காயலர்களின் மழலைச் செல்வங்கள் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான குழந்தைகள் தமது இனிய மழலை மொழியில் அருள்மறை திருக்குர்ஆனின் சிற்சிறு அத்தியாயங்களை அழகுற ஓதினர்.
இஸ்லாமிய கீதம்:
அதனைத் தொடர்ந்து, ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ் இஸ்லாமிய பாடல் பாடினார். பின்னர், ஹாங்காங் வாழ் மூத்த காயலர் ஜனாப் ஏ.எஸ்.ஜமால் அவர்கள், ஹாங்காங்கில் தாம் பெற்ற அனுபவம் குறித்து சிற்றுரையாற்றினார்.
மகளிர் உரைகள்:
பின்னர், ஹாங்காங்கில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு குறித்து டாக்டர் முஹம்மத் லெப்பை அவர்களின் மனைவியார் சகோதரி சித்தி ஹவ்வா விளக்கிப் பேசினார். அவரைத் தொடர்ந்து, ஹாங்காங் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது தான் பெற்ற அனுபவம் குறித்து ஜனாப் ஹாஜா அரபி அவர்களின் மகள் சகோதரி நஃபீஸா உரையாற்றினார்.
நிறைவாக நன்றியுரைக்குப் பின், பேரவை பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 100 பேர் இந்த ஒன்றுகூடலில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளினிடையே அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பாக,
M.செய்யித் அஹ்மத்,
கவ்லூன், ஹாங்காங். |