ஆறுமுகனேரியிலிருந்து புறப்பட்ட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலம் காயலபட்டினம் வழியாக 03.09.2011 சனிக்கிழமை மாலையில் அமைதியாக நடைபெற்றது.
ஆறுமுகனேரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்து விழாவினை இந்து எழுச்சி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, சுமார் 25 விநாயகர் சிலைகள் ஆறுமுகநேரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சனிக்கிழமை மதியம் முதல், ஆறுமுகனேரியில் பல்வேறு இடங்களிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும், நாசரேத், குரும்பூர் பகுதியிலிருந்து 15 விநாயகர் சிலைகளும், சோனகன்விளை, மூலக்கரை, ராணிமகராஜபுரம், காணியாளன்புதூர் மற்றும் கூர்ந்தாவிளை, வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், தலைவன்வடலி மற்றும் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த விநாயகர் சிலைகள் ஆறுமுகனேரி பஜார் ஸ்ரீசெந்தில் விநாயகர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்து அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மங்களகுறிச்சி முத்துசுவாமி அடிகளார் கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
துவக்க விழாவிற்கு இந்து முன்னணி நகர தலைவர் ஜி.ராமசாமி தலைமை வகித்தார்.இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், பா.மல்லிகா வரிஷினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் துணை தலைவர் காந்தி என்ற சண்முக சுந்தரம், நகர் நல மன்றத் தலைவர் பூபால்ராஜன், பக்த ஜன சபை செயலாளர் பி.கே.எஸ்.கந்தையா, வியாபாரிகள் ஐக்கிய சங்கம் தலைவர் த.தாமோதரன், மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சு.ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
04.14மணிக்கு துவங்கிய ஊர்வலம் காயல்பட்டினம் மகாத்மா காந்தி வளைவை 05.34 மணியளவில் கடந்தது.
அதன் பின்னர் காயல்பட்டினம் சிவன் கோவில் தெரு, உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளும் இணைந்து ஊர்வலமாக விசாலட்சுமி அம்மன் கோவில் தெரு வழியாகச் சென்று, மன்னராஜா கோவில் தெருவில் உள்ள விநாயகர் சிலையை அங்கே இணைத்தவாறு, பூந்தோட்டம் வழியாக ஓடக்கரை சென்று, அங்குள்ள விநாயகர் சிலையையும் இணைத்து ஊர்வலம் 06.45க்கு காயல்பட்டினத்தைக் கடந்து திருச்செந்தூருக்கு விஜர்சனத்திற்கு சென்றது. ஊர்வலத்தின் முன்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர நாயர் பாதுகாப்பு பணிகளை கண்காணித்து ஊர்வலம் கூடவே சென்றார்.
தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமி துரை வேலு தலைமையில் 4 துணை கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் 300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். |