செய்தி எண் (ID #) 7172 | | |
ஞாயிறு, செப்டம்பர் 4, 2011 |
ரெட் ஸ்டார் சங்கத்தில் நகர்மன்ற தேர்தல் குறித்து சிறப்பு கூட்டம்! முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 5071 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய |
|
எதிர்வரும் நகர்மன்ற தேர்தலில் மரைக்கார்பள்ளி - அப்பாபள்ளி ஜமாஅத்தின் நிலைபாடு குறித்து சிறப்பு கூட்டம் நேற்று (செப்டம்பர் 3) ரெட் ஸ்டார் சங்கத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கூட்டத்திற்கு ஹாஜி எம்.எம். இப்ராஹீம் தலைமை தாங்கினார். சங்கத்தலைவர் ஹாஜி எம். சேகு அப்துல் காதர், துணைத்தலைவர் எம்.ஏ.எஸ் ஜரூக் மற்றும் செயலாளர் ஒ.ஏ. நசீர் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கமாக ஹாஜி ஏ.எம். இஸ்மாயில் நஜீப் குர்ஆனில் இருந்து சில வசனங்களை ஓதினார்.
அக்கூட்டத்தில் - மரைக்கார்பள்ளி, அப்பாபள்ளி, கொச்சியார், சொளுக்கார் தெருக்களை உள்ளடக்கிய வார்டு 8, வார்டு 9 உறுப்பினர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு - வார்ட் உறுப்பினர்களை ஜனநாயக முறையில் தேர்வுசெய்யவேண்டும் என்றும், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிக்ககூடாது என்றும், நகர்மன்ற தலைவர்
தேர்வு அனைத்து ஜமாஅத்துகளையும் முறையாக கலந்து நடைபெறவேண்டும் என்றும் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களின் முழு விபரம் வருமாறு:-
(1) எதிர்வரும் நகர் மன்ற தேர்தலில் 9ஆம் வார்டில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பங்களை செப்டம்பர் 8 முதல் வழங்குவது எனவும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள், தேர்தல் அதிகாரியான ரெட் ஸ்டார் சங்க தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது
(2) பெறப்பட்ட விண்ணப்பதாரரின் விபரங்களை ஜமாஅத்தினர் அனைவருக்கும் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் அறிவிப்பு செய்யப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது
(3) ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால் அக்டோபர் 2 (ஞாயிறு) அன்று ஜமாஅத் கூட்டத்தினை கூட்டி சிறு தேர்தலை நடத்தி அதிகாரப்பூர்வ பொது வேட்பாளரை அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது
(4) அரசியல் கட்சி சார்பாக கட்சி சின்னங்களில் நிற்பவர்களுக்கு வாக்களிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது
(5) 8 ஆம் வார்டில், கொச்சியார் மற்றும் சொளுக்கார் தெருக்களில் - நம் ஜமாஅத்தினரும், குருவித்துறைபள்ளி ஜமாஅத்தினரும் கலந்திருப்பதால் - அந்த (குருவித்துறைபள்ளி) ஜமாஅத்தினையும் அணுகி, பொது வேட்பாளரை முறையாக தேர்வு செய்ய ஆலோசிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதற்க்கான 7 பேர் கொண்ட குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
(a) ஹாஜி எம். சேகு அப்துல் காதர்
(b) ஹாஜி எம்.எம். இப்ராஹீம்
(c) ஹாஜி எம்.ஏ. காதர் அலி
(d) ஹாஜி எம்.ஏ.எஸ். ஜரூக்
(e) ஹாஜி எஸ்.எம். காதர் (சின்னத்தம்பி)
(f) ஜனாப் ஒ.ஏ. நசீர் அஹ்மத்
(g) ஜனாப் எஸ். அப்துல் வாஹித்
(6) நகர்மன்ற தலைவர் தேர்வு விசயத்தில் - அனைத்து ஜமாஅத்தினரும் முறையாக கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அனைத்து ஜமாஅத்திர்க்கும் தெரிவிக்க வேண்டும். அதற்காக அனைத்து ஜமாஅத் தலைவர்கள் கூட்டத்தினை ஏற்பாடு செய்ய வேண்டிக்கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
(7) நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர், லஞ்சம் வாங்காதவராகவும், மக்களுக்கு உழைக்கும் எண்ணம் கொண்டவராகவும், ஒழுக்கமானவராகவும், மார்க்கப்பற்றுள்ளவராகவும் இருக்கவேண்டும் என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புகைப்படங்கள் உதவி:
எம்.டி முஹம்மது காசிம்
|