எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் சாதகமான இடங்களில் போட்டியிட, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
மனிதநேய மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் 05.09.2011 திங்கட்கிழமை காலையில், காயல்பட்டினம் கொச்சியார் தெருவில் உள்ள த.மு.மு.க. நகர துணைத் தலைவர் தமீமுல் அன்சாரி இல்லத்தில் நடைபெற்றது.
த.மு.மு.க. மாநில துணைச் செயலாளர் காதர் மெய்தீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத், மாவட்ட பொருளாளர் முஹம்மத் நெய்னா, மாநில மருத்துவ அணி செயலாளர் முஹம்மத் கிதுர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி, உடன்குடி, காயல்பட்டினம், கயத்தாறு, கேம்பலாபாத், ஆத்தூர் மற்றும் பல பகுதிகளிலிருந்து ம.ம.க. நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பின்வரும் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பகுப்பாய்வு:
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பஞ்சாயத் மற்றும் ஊராட்சியில் உள்ள எந்தெந்த தொகுதிகளில் ம.ம.க போட்டியிட சாதகமான சூழ்நிலையுள்ளது என்பது குறித்து கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, பகுப்பாய்வு செய்து தலைமைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டது.
தீர்மானம் 2 – உள்ளாட்சித் தேர்தலில் தீவிர களப்பணி:
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் ம.ம.க போட்டியிடும் அனைத்து உள்ளாட்சி தொகுதிகளிலும் தீவிர களப்பணி ஆற்றி, வெற்றி பெற உழைப்பது என ஏகமனதாக தீர்மானிக்கபட்டது.
தீர்மானம் 3 – காவல்துறை அத்துமீறலுக்குக் கண்டனம்:
காயல்பட்டினத்தில் உள்ள சமூக நல்லிணக்க மையத்தில் (தஃவா சென்டரில்) அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும். அதை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |