2006 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தமிழகத்தல் நடந்த உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு முன் - காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு (QYSS) அறிக்கை ஒன்று வெளியிட்டது. தேர்தல் குறித்து நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக வெளியிடப்பட்ட அவ்வறிக்கை செப்டம்பர் 24, 2006 இல் செய்தியாக (எண் 654) - Kayalpatnam.com இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஒரு நினைவூட்டல்:-
செப்டம்பர் 24, 2006
மறந்து விடாதீர்கள் மக்களுக்கான அந்நாளில்...?
பேரன்புக்குரிய காயல் மாநகரப் பெருமக்களே! இறையருள் நம்மீதும் நம் நகர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! நமது காயல் நகரின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல் மக்களின் மேலான நலன்களுக்காகவும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில் சேவைகளையும் பல்வேறு உதவிகளையும் நமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு ஆற்றி வருவதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். கடந்த காலங்களில் ஊரில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நல்ல காரியங்களுக்கு எங்களின் முயற்சிகளும், தூண்டுதல்களும் காரணமாக அமைந்து வெற்றிகள் கிடைத்ததே நல்லதோர் உதாரணம். இதோ! தற்போது நமது காயல்நகரின் நலனை கவனத்திற் கொண்டு மிகவும் முக்கியமானதோர் விஷயத்திற்கு உங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த முயன்றுள்ளோம். ஆம்! எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலைப் பற்றிய கருத்துக்கள்தான் அது!
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! நமது காயல்மாநகரம் ஒழுக்கத்திலும், கலாச்சார மேம்பாடு விஷயங்களிலும் மற்ற பகுதிகளுக்கு முன்னுதாரனமாக தொன்று தொட்டு திகழ்ந்து வந்ததை நாம் யாவரும் அறிவோம். இதற்காக நமது முன்னோர்கள் ஆற்றிய சேவைகள், அதற்காக எடுத்த முயற்சிகள், பட்ட துயரங்கள் எதுவும் சொல்லி மாளாது எனும் அளவுக்கு அளப்பரியவை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அனைத்து சமுதாய மக்களும் உறவுமுறை சொல்லிப் பழகிக் கொள்ளும் அளவுக்கு நமது, எண்ணங்கள் பரந்து விரிந்தவை. ஆனால் சமீப காலமாக நமதூரில் உள்ள அனைத்து மக்களுக்கிடையிலும் இனம் புரியாத சில கசப்புணர்வுகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இது களையப்படுவதற்கு பதிலாக அதிகரிக்கப்படுவதை காண்கிறோம். காரணம் சிலரின் சுயநலப் போக்குகள்தான்.
அது மட்டுமல்ல நமதூருக்குள் பல மதங்களைப் பின்பற்றுவோர், பல அரசியல் கட்சிகள் இருக்கின்ற போதிலும், நமக்கிடையே இருந்து வந்த பொதுவான கருத்து ஒற்றுமை இன்று கொஞ்சம் ஆட்டம் காணத்துவங்கியுள்ளதை இங்கே வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதன் காரணமாக இதுகாலம் வரை நமக்கு உடமையாயிருந்த பல்வேறு உரிமைகள் இன்று நம்மை அறியாமலேயே பறிக்கப்பட்டு வரும் கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
உதாரணமாக கடந்த காலங்களில் நமதூர் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நமக்கிடையேயுள்ள உட்பூசல் எதையும் பாராது, ஊர் நலனில் உளத்தூய்மையான அக்கறை கொண்டு நமக்கு முன் சென்றவர்கள் எடுத்த முடிவுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியவை.
ஆனால் இன்று அந்நிலை மாறிவருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் வழமைக்கு மாற்றமாக மக்கள் நலனில் ஆர்வமில்லாதவர்களும், அரசியல் கட்சிகளும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண உள்ளதாக அறியப்படுகிறது. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் இனி வருங்காலங்களில் நமதூருக்குத் தேவைப்படும் அடிப்படை விஷயங்களுக்காக சமூக நல ஆர்வலர்கள் கூடி முடிவெடுக்க முடியாமல் எல்லாவற்றிக்கும் அரசியல் கட்சிகளின் முக்கிய பொறுப்பாளர்களே முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும். இதில் மக்கள் நலனைவிட அவரவர்களின் கட்சி நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். இது இன்று பல ஊர்களில் கண்கூடாக நடைபெறுவதைக் காண்கிறோம். இதனால் நமதூர் கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையை பெரிதும் பறித்துவிடும் என்பது மட்டுமல்ல நமது தேவைகள், உரிமைகள் கிடைக்கப் பெறாமல் தடைபட்டுப் போகும் அபாயமும் உள்ளது என்பதை நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் புரியும்.
இன்றுவரை பஞ்சாயத்து மூலம் பெறப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், தேவைகள் ஏராளம் உள்ளன. இவையெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் திருப்திகரமாக செயல்படுத்தப்பட்டதா என்பதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். இது மட்டுமல்ல இலட்சக்கணக்கான மக்கள் கூடும் தலைநகர் சென்னை மெரீனா கடற்கரையிலேயே கட்டணம் வசூலிக்காத போது நமதூர் கடற்கரையிலே "கடற்கரை பூங்கா" என்று மக்கள் கேட்காத ஒன்றை கட்டாயமாகத் திணித்து, கலாச்சார சீரழிவுகளையும் உருவாக்கி அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை. ஆண்கள் பகுதி, பெண்கள் பகுதி என்று கூட பிரிக்கப்படாமல் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு வித்திட்டுள்ளதைக் கண்டுகொள்ளாத நமது பஞ்சாயத்து மக்கள் பிரதிநிதிகள் பற்றியும் குடிதண்ணீர் சரியான முறையில் தேவைக்கேற்ப கிடைக்கச் செய்யாமல் குடிநீர் கட்டணத்தை மட்டும் அதிகரிக்கச் செய்தபோது எதிர்ததுக் குரல் கொடுக்காத நமது பஞ்சாயத்து மக்கள் பிரதிநிதிகளைப் பற்றியும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
நமது தேவைகள் நிறைவேற்றப்படுமானால், அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெற வேண்டுமானால் பஞ்சாத்துக்காக தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் (கவுன்சிலர்கள்) மக்கள் நலன் நாடுபவர்களாக, சமூக நல ஆர்வலர்களாக, நேர்மையானவர்களாக, லஞ்ச லாவண்யங்களுக்கு அப்பாற்பட்ட அப்பழுக்கற்றவர்களாக, "மனிதருக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை" எனும் சிந்தனையுடையவராக இருக்க வேண்டும். இத்தகைய நல்ல பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இதோ இன்னொரு வாய்ப்பு நம்மைத் தேடி வருகிறது, உள்ளாட்சித் தேர்தல் என்ற பெயரிலே!
ஆம். எதிர்வரும் அக்டோபர் மாதம் 13ந் தேதி உள்ளாட்சி (பஞ்சாயத்து) தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இத்தேர்தலில் நிற்க ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். பொதுமக்கள் எதனை அடிப்படையாக வைத்து தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்? இதோ உங்கள் சிந்தனைக்காக சில :
மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் நிற்பவர் என்றால் இவர் கடந்த ஐந்தாண்டில் ஊருக்கு அல்லது தன் பகுதி(வார்டு) மக்களுக்கு செய்தது என்ன?
தங்கள் பகுதியிலுள்ள ஜமாஅத் மற்றும் அமைப்புகளின் நன்மதிப்பைப் பெற்றவரா?
சேவை மனப்பான்மை உள்ளவரா? அல்லது தன்னுடைய தேவையை பூர்த்தி செய்பவரா?
பணப்பெட்டிக்கு அடிமையாகாதவரா? அல்லது பணத்தையே குறிக்கோளாக கொண்டவரா?
பொது வாழ்வில் தூய்மை உள்ளவரா? அல்லது தீமைகளுக்கு துணை செல்பவரா?
உங்கள் பகுதியிலுள்ள குறைகளை உடனே தீர்ப்பவரா?
வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர்களில் யாருக்கு வாக்களிப்பார் என்று தேர்தல் முடிவு வருமுன்னரே அறிவிப்பாரா?
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தண்ணீர் கட்டணத்தை குறைப்பாரா? (அல்லது) தட்டுப்பாடின்றி தேவைக்கேற்ப குடிதண்ணீர் கிடைத்திட முயற்சிப்பாரா?
பொதுமக்களில் ஏழை-எளியோர்களும் இலவசமாக சென்றுவந்த கடற்கரை இன்று காசு வசூலிக்கும் கடற்கரையாகவும், கலாச்சாரத்தை சீரழிக்கும் கலாச்சாலையாகவும் மாறி உள்ளதே! அதனை மாற்றுவாரா?
பதவி கிடைக்கும் வரை பணிவு காட்டி பதவி பெற்றபிறகு பகட்டு (திமிரு) காட்டுபவரா?
காயல் நகரப் பெருமக்களே! சமுதாய நலனில் ஆர்வமுள்ள ஜமாஅத்தார்களே! சமூக நல அமைப்புகளின் அங்கத்தினர்களே! நன்றாக சிந்தியுங்கள்! மக்களின் ஊர் நலனில் கவனம் செலுத்தும் சமூக சேவகர்களை, சமூக சேவகிகளை இத்தேர்தலில் போட்டியிடச் செய்து அவர்களை தேர்ந்தெடுக்கச் செய்யுங்கள். இத்தேர்தலில் போட்டியிடும் சுயநலவாதிகளை புறக்கணிப்பதோடு அவர்களைப் பற்றி பிறருக்கும் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அது மட்டுமல்ல இத்தேர்தலில் போட்டியிடுபவர் சேவையுணர்வு கொண்டவர் அல்ல என்றாலும் தனது உறவினர், நண்பர், நெருக்கமானவர் என்பதற்காக அவருக்கு வாக்களித்து சமுதாய நலனுக்கு துரோகமிழைத்துவிடாதீர்கள். காரணம் நல்ல பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தால் தான் அவர்கள் மூலம் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். நல்ல தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் அவர் மூலம் நல்ல பல காரியங்கள் மக்களுக்காக நிறைவேற்ற முடியும். எனவே மேலே கூறப்பட்டவைகளை சிந்தித்து, சீர்தூக்கிப்பார்த்து செயலாற்றுங்கள். வாக்குரிமை பெற்ற அனைவரும் இத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுங்கள். இதன் மூலம் நமதூர் பலன்பெறட்டும், கட்சி, ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையும், மனித நேயமும் வளரட்டும். இறைவன் அதற்கருள்புரியட்டும். நன்றி.
இவண்,
ஊர் நலன் நாடும்,
காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு,
நெய்னார் தெரு, காயல்பட்டணம்.
அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
சதுக்கைத்தெரு, காயல்பட்டணம்.
|