எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் குறித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று (செப்டம்பர் 8) காலை 11 மணி அளவில் - ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து - நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:-
1) 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகராட்சியில் சுமூகமாக தேர்தல் நடைபெற, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மேற்கொண்டுள்ள முயற்சியை இக்கூட்டம் வரவேற்பதோடு பேரவையின் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கி இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2) நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு விருப்ப மனு அனுப்ப வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3) காயல்பட்டினம் நகராட்சிக்கு தலைவராக வரத்தகுதியுடையவர் என பொதுமக்கள் விரும்பும் நபர்களை, பெயர் குறிப்பிட்டு பரிந்துரை செய்யும் (சிபாரிசு) மனுவையும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு அனுப்ப வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
4) காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு அனுப்பப்படும் தலைவர் பதவிக்குரிய விருப்ப மனு மற்றும் சிபாரிசு மனு ஆகியவைகளை பரிசீலித்து இறுதி முடிவெடுக்கும் தேர்வு குழுவை அமைப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு ஜமாஅத்திலிருந்தும் தலைவர் மற்றும் உதவி தலைவர் ஆகிய இருவர் அல்லது ஜமாஅத்தின் அனுமதிபெற்ற யாரேனும் இருவர், மற்றும் ஊரின் பொதுநல அமைப்புகளின் ஒவ்வொன்றில் இருந்தும் ஒருவர், மேலும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையால் தேர்வு செய்யப்படும் நகர பிரமுகர் 25 நபர்கள் ஆகியோர்கள் கொண்ட தேர்வு குழுவை அமைப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இத்தேர்வுக் குழுவில் இடம் பெறுவோர் நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்புக்கு விருப்ப மனு கொடுப்பவராக இருக்கக்கூடாது என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
5) நகராட்சி வார்டு உறுப்பினர்களாக போட்டியிட விரும்புவோர், தங்கள் வார்டுக்குட்பட்ட ஜமாஅத் நிர்வாகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
6) நகராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வு பெற தகுதியுடையவரென பொதுமக்கள் கருதும் நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு பரிந்துரை (சிபாரிசு) செய்யும் மனுக்களையும் வார்டுக்குட்பட்ட ஜமாஅத்திற்கு அனுப்ப வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
7) நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான விருப்ப மனு மற்றும் பரிந்துரை (சிபாரிசு) மனுக்களை ஜமாஅத்களுக்கு அனுப்புவோர், தங்கள் வார்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத்துக்கள் இருப்பின் அந்த வார்டில் உள்ள அனைத்து ஜமாஅத்துக்களுக்கும் மனுக்களை அனுப்புமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
8) நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மனுக்களை தனியாக ஒரு ஜமாஅத்தோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத்துக்கள் இணைந்தோ பரிசீலனை செய்யும் போது முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டால், சுமூகமாக இறுதி முடிவெடுக்கும் பொருட்டு, நகராட்சி தலைவரை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டுமென இக்கூட்டம் ஜமாஅத்துக்களுக்கு கனிவோடு பரிந்துரை செய்கிறது.
9) நடைபெற உள்ள நகராட்சி தேர்தல் சுமூகமாக நடைபெறவும், பொருத்தமானவர்கள் தேர்வு பெறவும் தங்களது விருப்பத்தை தெரிவிக்கும் இளைஞர்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், தேர்தலுக்கென அமைக்கப்படும் ஒருங்கிணைப்பு குழுக்களையும், அக்குழுவினரால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் இக்கூட்டம் மதிக்கிறது. நல்லெண்ணத்தோடு நகர நலனை முன்னிறுத்தும் இவர்களின் உணர்வை உள்ளத்தில் கொண்டு இவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று இத்தேர்தலை சந்திப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
10) அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் கட்சி சின்னங்களில் போட்டியிடாமல், விருப்ப மனுக்களின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமென காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை விடுத்த வேண்டுகோளை ஏற்று, நகராட்சி தேர்தலில் பேரவை எடுக்கும் நடவடிக்கைகளை ஏற்பதாக எழுத்து மூலம் தெரிவித்து கையெழுத்திட்ட, நகரின் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு, ஊர் மக்களின் சார்பில் இதயமார்ந்த நன்றியினை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. அரசின் நிதிகளும், திட்டங்களும் நமதூருக்கு வந்து சேர்ந்திடவும், நகராட்சியில் தூய நிர்வாகம் தொடர்ந்து நிலைபெற்றிடவும் முனைப்போடும், விழிப்போடும் செயல்பட வேண்டுமென நகரின் அனைத்து அரசியல் கட்சிகளையும் உரிமையோடும், அன்போடும் இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
11) நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடும், தூய உள்ளத்தோடும், தூர நோக்கோடும் செயல்பட்டு நமதூரின் ஒற்றமையையும், எதிர்கால நலனையும் பேணி பாதுகாத்திட வேண்டுமென, வேட்பாளர்களாக நிற்க விரும்புவோரை இக்கூட்டம் பணிவோடு கேட்டுக் கொள்கிறது.
மேல்காணும் தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தகவல்:
எஸ்.ஆர்.பி. ஜஹாங்கிர்
|