முந்தைய தி.மு.க. தலைமையிலான அரசால் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்‘ நடப்பு அ.தி.மு.க. தலைமையிலான அரசால் குறை காணப்பட்டு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ‘விரிவாக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்‘ என்ற பெயரில் புதிய திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களிலுள்ள ஏழைகளுக்கும் தரமான - சிறப்பான மருத்துவ வசதி கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வரால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இத்திட்டம் குறித்த விபரங்களாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கிராமங்களிலுள்ள ஏழை மக்களுக்கும் சிறப்பான தரமான மருத்து வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உயரிய சிந்தனையில் உருவாக்கப்பட்டதே ‘விரிவாக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்‘ ஆகும்.
ஏழை-எளிய மக்கள் உடனுக்குடன் பயன் பெறும் பொருட்டும், முந்தைய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்தி இந்த இடைக்கால மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 22.08.2011 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்குரிய தகுதிகள்:
தமிழ்நாட்டிலுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வாழும் ஏழை-எளிய மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர்.
ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
வருமான சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
குடும்ப அட்டை மற்றும் முந்தைய காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை.
சிறப்பம்சங்கள்:
காப்பீட்டுத் தொகை ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ.1,00,000 ஆகும்.
முந்தைய காலங்களில் இத்திட்டத்தின் மூலமாக காப்பீட்டுத் தொகை எவ்வளவு பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போதும் அவர்கள் ரூ.1,00,000 வரை பயனடையலாம்.
சிகிச்சையளிக்கப்படும் நோய்கள்:
(1) இருதயம் மற்றும் நெஞ்சக நோய் சிகிச்சை
(2) தைராய்டு அறுவை சிகிச்சை
(3) இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான சிகிச்சை
(4) பித்தப்பை மற்றும் மண்ணீரல் சிகிச்சை
(5) மகளிர் புற்றுநோய் சிகிச்சை
(6) புற்றுநோய்க்கான கதிர்வீச்சு மற்றும் மருத்துவ சிகிச்சை
(7) குழந்தைகள் அறுவை சிகிச்சை
(8) சிறுநீரக நோய் சிகிச்சை
(9) எலும்பு முறிவு சிகிச்சை
உள்ளிட்ட 204 வகையான நோய்களுக்கு இத்திட்டத்தின் மூலமாக இலவச சிகிச்சையளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள்:
(1) சிட்டி மருத்துவமனை - தூத்துக்குடி
(2) பாத்திமா சிறப்பு மருத்துவமனை - புதுக்கோட்டை
(3) சங்கர் மருத்துவமனை - ஆத்தூர்
(4) B.G. மருத்துவமனை - திருச்செந்தூர்
(5) சுபிக்ஷா பிரபு மருத்துவமனை - கோவில்பட்டி
(6) ஸ்ரீ முரளி மருத்துவமனை - கோவில்பட்டி
(7) வெங்கடேஷ்வரா மருத்துவமனை - கோவில்பட்டி
(8) ஸ்ரீநிவாசா மருத்துவமனை - கோவில்பட்டி
(9) துளசி மருத்துவமனை - கோவில்பட்டி
மேலும் பொதுமக்கள் இது சம்பந்தமான சந்தேகங்களை www.healthsprint.com/tnhsp என்ற இணையதளத்தின் மூலமாகவும், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அணுகி விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த ஏழை-எளிய மக்கள் இந்த இடைக்கால விரிவாக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடனடியாக பயனடைந்து நல்வாழ்வு வாழ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆஷிஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |