இரண்டு வருடங்கள் இருக்கும்... அரக்கப் பறக்க வேலைகளை முடித்துவிட்டு, அவசர அவசரமாக ரெடியாகி, அமெரிக்கன் கவுன்சலேட் ஏற்பாடு செய்திருந்த ஆங்கிலப் பயிற்சி வகுப்பொன்றுக்கு வியர்க்க விறுவிறுக்க போய் நிற்கிறேன். எங்க டீச்சர் Mrs. Conie Greenleaf (நம்ம ஊரு வெத்தலையைத்தான் அங்கே பேரா வச்சிடுறாங்க போல!) “என்ன லேட்?” என்பது போல வாட்ச்சைப் பார்த்து மானத்தை வாங்குவாங்களேன்னு... லே…சா உள்ளுக்குள்ளே பதட்டம்!
ஆனா... அங்கே போனதும், “வாவ்! யூ லுக் வெரி நைஸ் டுடே!” என்று எனக்கு மட்டும் கேட்பது போல என் காதருகில் கிசுகிசுத்துவிட்டுப் போக, எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று கூட தெரியாமல் ஒரு நிமிடம் நான் சிலையாகிவிட்டேன். “நம்மைத்தானா அல்லது வேறு யாரையுமா?” என்று நான் சுற்றுமுற்றும் திருட்டு முழி முழிக்க, “உன்னைத்தான்” என்பதைப் போல ஒரு புன்னகை! பின்னர் சுதாரித்துக் கொண்டு, எனக்கே கேட்காத குரலில் “தேங்க்ஸ் Conie” என்றேன். இதழோரம் ஓர் அசட்டுப் புன்னகையோடு (அந்தம்மாவுக்கு 62 வயசாகுது... ஆனாலும் நாங்க அவங்கள ‘கோனி’ன்னு பெயர் சொல்லித்தான் கூப்பிடனும்!) அன்று முழுக்க இந்த உலகமே திடீரென ரொம்...ப அழகாயிட்டாப்புல மனசு முழுக்க ஒரு எக்ஸ்ட்ரா எனர்ஜி! மேலே... உயரே... உச்சியிலே... என என் மனம் அலைபாய்ந்தது. ஒன்னுமில்ல... இதுபோன்ற வார்த்தைகளை நாம் கேட்டதேயில்லையா...? அதான் எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம தவிச்சு போயிடறோம்.
பெரியவர்களோ, சிறியவர்களோ... சிறு சிறு அங்கிகாரங்களுக்கும், “மாஷாஅல்லாஹ்...”, “Superb”, “வெரிகுட்” போன்ற சின்னச் சின்ன மோட்டிவேஷன் வார்த்தைகளுக்கும் (பாராட்டு என்பதைத்தான் இப்படி ஜிகினா பேப்பரில் சுத்தியிருக்கேன்) ஏங்குவது இயல்பான ஒன்று. பாராட்டு என்றவுடன், முகத்துக்கு நேரே ஓவராகப் புகழ்வது என்று பொருள் கொண்டு விட வேண்டாம். அது “காக்கா பிடிப்பது!” இஸ்லாம் விரும்பாத செயல் அது.
நான் சொல்ல வருவது...
தோழி உடுத்தியிருக்கும் அழகிய ஆடையைப் பார்த்து, “வெரி நைஸ்” என்று சொல்லும்போது...
பக்கத்து வீட்டு ஆண்ட்டி பராமரிக்கும் தோட்டத்தின் அழகை ரசித்து ஒரு சின்...ன கமெண்ட் செய்யும்போது...
மாடி வீட்டு மாமியின் வத்தக்குழம்பை “சிம்ப்ளி சூப்பர்ப்” என்று பாராட்டும்போது...
கணவரின் புதிய ஹேர்கட்டைப் பார்த்து ஒரு புன்னகையுடன் ‘தம்ப்ஸ் அப்’ உயர்த்தும்போது...
மகளின் ஓவியத்தை... மகனின் சுறுசுறுப்பை... உம்மாவின் சமையலை... லாத்தாவின் ரசனையை... தங்கையின் கிராஅத்தை... மாமியாரின் பொறுமையை... மாமனாரின் அக்கறையை... நாத்தனாரின் பிள்ளைகளை... என்று நாம் பார்க்கின்ற - ரசிக்கின்ற - வியக்கின்ற சிற்சிறு விஷயங்கள் தொடர்பாக சிம்பிளான சில வார்த்தைகளில் நம் உள்ளத்தை வெளிப்படுத்தும்போது...
அவர்களது கண்களில் பூக்கும் ஒரு கோடி மின்னல்கள் இருக்கே... அதற்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடாகாது.
ஒரு படி மேலே சொல்வதென்றால், இவ்வாறு பாராட்டுவது ஸுன்னத் (நபிவழி) என்றும் கூட நான் சொல்வேன். “உனக்கு ஒருவரைப் பிடித்தால் அதை அவரிடம் வெளிப்படுத்தி விடு!” எனும் கருத்திலான நபிமொழி நமக்கு அதைத்தானே உணர்த்துகிறது?
“தம்பி! உன்னோட ஸ்பீட் வேற யாருக்கும் வராதுடா! சூப்பர்!!” என்ற ஒரு வாசகம் வெற்று வாசகமல்ல! உங்கள் தம்பியின் திறமைகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் மிகப்பெரிய உந்துசக்தி அது!.
அருமையாக துணி கப்போர்டுகளை அடுக்கித் தந்த தேவி அக்காவிடம், “அக்கா! சூப்பரா ஷெல்ஃப அடுக்கிட்டீங்க...! ரொம்ப தேங்ஸ்க்கா...” என்று (அவருக்குரிய கூலியையும் கொடுத்துவிட்டுதான் :-) ) நாம் சொல்லும் வார்த்தைகள் அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாது, பணியாள் என்பதையும் தாண்டி அவர்கள் நம்மோடு உணர்வுப்பூர்வமான ஓர் உறவைக் கொண்டாடவும் அது காரணமாகிவிடுமல்லவா?
‘வெரிகுட்’டும், ‘ஸ்டாரு’மாய் டீச்சரிடம் அங்கீகாரம் எதிர்பார்ப்பது மாணவர்களது இயல்பு. அதே நேரம், “மேம்! நீங்கதான் என்னோட ஃபேவரைட் டீச்சர்... நீங்க சொல்லித் தர்றது நல்லா புரியுது மேம்...” என்ற ஒரு மாணவனின் அங்கீகாரம், அடுத்தடுத்த நாட்களில் ஆசிரியர்கள் பாக்காவாக prepare பண்ணி வகுப்பறைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான ஒரு ஊக்க மருந்து என்பது ஆசிரியர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்!
நாங்க நல்ல மூட்ல இருந்த ஒரு நாள்... இன்னிக்கு ஏதாச்சும் புது விதமா ஒரு ரெஸிப்பி செஞ்சி அசத்திப்புடனும்னு, மாங்கு... மாங்குன்னு நெட்டுல தேடி... உம்மாக்கு ஃபோன் போட்டு கேட்டு... ஃப்ரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் ஐடியாஸ் வாங்கி... ரசனையோடு சமைச்சு... புதுப் பாத்திரங்களா... பார்த்து தேடியெடுத்து... சாப்பாட்ட எடுத்து வச்சா...... ஒன்னையுமே கவனிக்காம... என்னைக்கும் போல அன்னைக்கும் அள்ளிப்போட்டுவிட்டு போயிருந்தா கூட பொறுத்துக்கலாம்ங்க...
“இன்னைக்கி என்ன? சாம்பார் வேற மாதிரி இருக்கு?”
என்று நாங்க சமைச்சு வச்ச - வாயில நுழையாத வட மாநில ரெசிப்பிய சாம்பாரா மாத்திட்டு போவாங்க பாருங்க... அப்ப பெண்களுக்கு ஏற்படுற உணர்வை, ‘பாம்பின் கால் பாம்புதான் அறியும்!’ அழுகையா... கோபமா... ஏமாற்றமா...? என்னன்னு எங்களுக்கே புரியாது...
அது என்னான்னா, இந்த பாராட்டுதல், அங்கீகாரங்கள் இதையெல்லாம் எதிர்பார்க்குற க்ரோமோசோம்கள் இயற்கையாகவே பெண்களுக்குத்தான் அதிகமாம்... 44 சதவிகித பெண்கள் தன் உறவுகளுக்குள்ளோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ தனக்கான அங்கீகாரங்கள் கிடைப்பதேயில்லை என்று திருப்தியின்றியே இருக்கிறார்களாம்...
இத எல்லாம் வேல மெனக்கெட்டு கண்டுபிடிச்சி சொன்ன புண்ணியவான், இந்த மாதிரி பாராட்டக்கூடிய இயல்புகளைக் கொண்ட க்ரோமோசோம்கள் ஆண்களுக்கு ரொம்...ப கம்மின்னும் சேர்த்து கண்டுபிடிச்சி சொல்லியிருந்திருக்கலாம்... நாம இயல்பாகவே கவனிச்சிருப்போம்...
ஒரு புடவைய பார்த்தவுடனே, நகைய பார்த்தவுடனே ஓ...டிப்போய், அது தெரியாதவங்களா இருந்தாலும்... “சூப்பரா இருக்கு! எங்க வாங்குனீங்க?”ன்னு கேக்குற பெண்கள காலங்காலமா கிண்டல் பண்ணிட்டிருக்கோம்... எந்த ஈகோவும் இல்லாம வெள்ளந்தியா அவங்க இருப்பதைத்தான் இது காட்டுது!
“ஆகா... பேஷ்! பேஷ்! ரொம்...ப நன்னாருக்கு... சமைச்ச கைக்கு வைர மோதிரம்தான் போடனும்” என்கிற நரசுஸ் காப்பி பாராட்டையெல்லாம் நாங்க எதிர்பார்க்கல! “ம்... இன்னைக்கு என்ன சமையல்? கொஞ்சம் டிஃப்ரண்டா இருக்கு?” என்று அந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிச்சாலே எங்களுக்குப் போதும்!
அதுக்காக பெண்கள் மட்டும்தான் எப்போதும் வாங்குபவர்களாக இருக்க வேண்டும்... ஆண்கள் வழங்குபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல!
“இன்னைக்கி இந்த ஷர்ட்டுல நீங்க ரொம்...ப யங்கா தெரியறீங்க...!”
“நீங்க மட்டும் இல்லைன்னா... இந்தப் பிரச்சினைய இவ்ளோ ஈஸியா solve பண்ணியிருக்க முடியாது...”
“நீங்க மட்டும் எப்படி எப்பவும் கூ...லா இருக்கிறீங்க...?”
என்று அவ்வப்போது (சும்மாவாச்சும் ) பாராட்டப்படும் கணவர்கள் அவர்களது மனைவியரின் முந்தானைக்குள்தான் தஞ்சப்பட்டுக் கிடப்பார்கள்.
இதுக்கு ‘ஐஸ்’ன்னு நீங்க பேர் வச்சாலும் சரி! பல பேரோட வண்டியே இந்த மாதிரி ‘ஐஸ்’லதான் ஓடுது... அயர்ன் பண்ண ஷர்ட் கொண்டு வரும்போதே, “உன்ன மாதிரி நீட்டா அயர்ன் பண்ண எனக்கு வராது...” என்பதிலிருந்து, “உன்னைப் போல பொறுமையா பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க எனக்குத் தெரியாதுமா... என்பது வரை ஐஸ் வைக்கப்படுகிறோம் என்று தெரிந்தும் உருகிப் போய்விடும் அப்பாவிகள்தான் பெண்களாகிய நாங்கள்!
அப்ப மத்ரஸா படிச்சிட்டிருந்த டைம்... ஒரு ப்ரோக்ராமுக்காக வெட்றது... ஒட்றது... எழுதுறது... வரையறது...ன்னு ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டு செய்துகொண்டிருந்தேன்... அப்போ பார்த்து இன்னும் ரெண்டு மூனு சார்ட்டுகளோட வந்த தோழிங்க கிட்ட, “அதெல்லாம் முடியாது... வேற யாராவது செய்ங்க... இங்கேயே ஏகப்பட்டது குவிஞ்சி கிடக்குது...” என்று நான் டென்ஷனாக... பின்னாலிருந்து குசுகுசுவென்று ஒரு குரல்...
“அவகிட்ட உன்னத் தவிர வேற யாரும் இத பெர்ஃபெக்டா பண்ண முடியாது...ன்னு கொஞ்சம் ஐஸ் வச்சு கேளுங்க... எப்படி சரி முடிச்சி தந்துடுவா...” என - என் காதில் விழாது என்று நினைத்து ஒரு தோழி மற்றவளிடம் சொல்ல, அதைக் கேட்ட நான் “அடப்பாவிகளா...! இத்தன நாளா இப்டித்தான் என்னை ஏமாத்திட்டிருந்தீங்களா...” என்று நான் செல்லமாகக் கோபப்பட்டுக் கூற... அனைவரும் சிரிக்க... அன்று நடந்த இந்த ரகளைய இன்று எழுதும்போது எனக்கு மீண்டும் சிரிப்புதான் பீறிடுகிறது!
ஐஸ் வைத்து வேலை வாங்கச் சொன்ன அந்த ‘அட்வைஸ் அம்புஜமும்’ இதைப் படிப்பாள் என்று நினைக்கிறேன்... பசுமை நிறைந்த நினைவுகள்... ம்....... அது ஒரு காலம்!
அங்கீகாரம் வேண்டும் என்பதில் - அதாவது appreciate பண்ணப்பட வேண்டும் என்பதில் நாம் எல்லோருமே குழந்தைகள்தான்!
எனது மகனுக்கு நான் ஓதிக்கொடுக்கும்போதெல்லாம்... ஒவ்வொரு வார்த்தையையும் அவன் சரியாகச் சொல்லிவிட்டால்... நான் வெறுமனே “ம்...” என்றோ, “வெரிகுட்” என்றோ சொன்னால், “உம்மா...! ஸே மாஷாஅல்லாஹ்மா...!!” என்று அவன் கேட்கும் அழகிற்காகவே, “ம்...”, “ம்...” என்று மட்டும் சொல்லி அவனைக் கலாய்ப்பதுண்டு!
மாஷாஅல்லாஹ் சொல்லிவிட்டால் போதும்... சிரிப்பும், உற்சாகமுமாய் - அன்றைக்குள்ள பாடத்தைப் பிசிறில்லாமல் ஓதி விடுவான். “இளவரசியின் உயிர் பறவைக்குள் உள்ளது” என்ற அம்புலிமாமாவின் கதை போல, இவனது எனர்ஜி “மாஷாஅல்லாஹ்”வில்தான் ஒளிந்துள்ளது என்பேன்.
அது மட்டுமல்ல! அவன் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும், “உம்மா...! குட்பாய்ன்னு சொல்லு...” என்று நான் மறந்தாலும் மறக்காமல் கேட்டு வாங்கிவிடுவான்.
குழந்தைகள்... உள்ளத்தில் உதித்ததை உள்ளபடி சொல்லிவிடும் சுபாவம் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் தயங்காமல் கேட்டு வாங்கிவிடுகிறார்கள்... ஆனால் நாம் அப்படியல்ல! எதிர்பார்த்து... எதிர்பார்த்து... ஏமாந்துவிடுகிறோம்.
எழுத்தாளர்கள் (என்று எங்களை நினைத்துக்கொள்ளும்) நாங்கள் தொடர்ந்து எழுதுவதா அல்லது மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, உருப்படியாக வேறு வேலைய பார்ப்பதா என்பதை வாசகர்களின் கருத்துக்களை வைத்துதான் முடிவெடுக்க முடியும்... ஆயிரம் நபர்களுக்கும் மேல் கட்டுரையை வாசித்திருப்பதாகக் கணக்கு காட்டுகிறது இந்த இணையதளம்! ஆனால், ஏதோ ஒன்றிரண்டு பேரிடமிருந்து மட்டும்தான் கமெண்ட் வருகிறது... அந்த வகையில், “எங்க எட்டாப்பம்மா” கட்டுரைக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று கமெண்ட் அனுப்பியிருந்த சகோதரர் யூனுஸ் என் பார்வையில் ‘ஆயிரத்தில் ஒருவன்’. (என்னிடமும், என் வீட்டுக்காரரிடமும் தொலைபேசியில் பாராட்டிய / விமர்சித்த உள்ளங்கள், அந்தக் கருத்தை கட்டுரையின் கீழ் இரண்டு வரி எழுதிவிட்டால் என்ன குறைந்துவிடப் போகிறதோ தெரியல!)
இப்படி நான் எழுதுவதற்கு ஏ.எல்.எஸ். மாமாதான் இன்ஸ்பிரேஷன்! மாமாவுடைய எழுத்துல... ஆதங்கத்துல... ஒரு நியாயம் இருந்தது... அதன் விளைவுதான் இந்தக் கட்டுரையே!
ராப்பகலா முழிச்சு... வருஷக்கணக்குல சிரமப்பட்டு ஒரு புத்தகம் எழுதுறோம்... குழந்தையைப் பிரசவிப்பதற்கிணையான மகிழ்வோடும், பதட்டத்தோடும் அதை வெளியிடுகிறோம்... நல்லதோ, அல்லதோ! நாலாப்புறமிருந்தும் கூட வேண்டாம்! ஒரு நாலு கமெண்ட்டடாவது வரும்னு... ‘நாஞ்சில் சம்பத்’ மாதிரி காத்திருந்தா... யாருகிட்டேயெல்லாம் புக்க படிக்க கொடுத்தோமோ... அவங்கள்லாம்... கிணத்துல போட்ட கல்லு மாதிரி அமைதியாயிடுறாங்க... ஆர்வக் கோளாறுல நாமே போயி கேட்டா... “படிக்க இன்னும் டைம் கிடைக்கல!” என்று எஸ்கேப் ஆயிடுறாங்க... “சரி, எழுதுனது போதும்! வேற வேலையப் பாரு”ன்னு மனசு முடங்கிப் போயிடுது!
நாஞ்சில் நாடன் போன்ற பெரிய எழுத்தாளர்களே கூட இதுபோன்ற தங்கள் வலிகளைப் பதிவுசெய்துள்ளனர் என்றால் நாமெல்லாம் ஆளில்லாத கடையில உக்காந்து டீ ஆத்த முடியுமா சொல்லுங்க...?
பள்ளிவாசலுக்கு அழகிய ஆடையுடுத்தி வந்த உம்மு ஹாலித் என்ற சிறுமியைப் பார்த்து, “ஆகா! ஆகா! அழகு! அழகு!” என்று பாராட்டிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா? ஹஸ்ஸான் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு, இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்களின் தனித்திறமைகளை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, அவர்களின் திறமைகள் மேலும் அதிகரிக்க அவர்களுக்காகப் பிரார்த்தித்த அண்ணலாரிடம் நமக்குப் படிப்பினை இல்லையா?
பரீட்சையில் அறுபது சதவிகித மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துவிட்டு... அம்மா திட்டுவாளே... என மருண்டு நிற்கும் குழந்தையை அள்ளியணைத்து... அந்த அறுபது சதவிகித மதிப்பெண்களுக்காகவே அதை உச்சிமுகர்ந்து ஒரு தாய் உற்சாகப்படுத்தும்போது... குழந்தையின் கண்களில் ஒரு உயிர்ப்பூ பூக்கிறதே... அதற்கு ஈடு இணையே இல்லை!!!
அந்த உயிர்ப்பூவை நம் ஒவ்வொருவருக்குள்ளும் விதைக்கும் உந்துசக்தியாக நாம் ஒருவருக்கொருவர் இருப்போம்... முஃமின்கள் என்ற உணர்வால் ஒன்றிணைவோம் - இன்ஷாஅல்லாஹ்! |