கல்வியில் பின் தங்கிய சிறுபாண்மையினரான நம் சமுதாய மக்கள் கல்வியறிவு பெற வேண்டும், சமூகத்தில் அறிவாற்றல் மிக்கவர்களாகவும் கற்றுத்தேர்ந்து கடைநிலையிலிருந்து முன்னுக்கு வர வேண்டும் எனும் உன்னத நோக்கில் தன் சொந்த நிலங்களையெல்லாம் தானமாகத் தந்து, சொத்துக்களை விற்று, பள்ளிக்கூடங்கள் கட்டி, அவற்றை கண்ணியத்தோடும், கட்டுப்பாடுகளோடும் கட்டிக் காத்து வந்தனர் நம் நகரின் கல்வித் தந்தைகள் பலர். இன்றும் அப்புனிதர்களின் பெயர் தாங்கி நிற்கும் கல்விச்சாலைகள் உள்ளன.
ஏழைகளுக்கு இலவசக் கல்வியோடு சீருடை, புத்தகங்கள் வழங்கி அவர்களும் சமுதாயத்தில் உயர வழிவகை செய்து தம் வாழ்நாள் முழுவதையும் கல்விக்காக அர்பணித்த எத்தனையோ தியாகிகள் மண் மறைந்து விட்டாலும் நம் மனதில் என்றும் மறையாமல் இருப்பது அவர்கள் செய்த சேவை மற்றும் சீர்திருத்தமும் அன்றி வேறேது?
சமீப காலமாக கல்விக்கூடங்கள் திரையரங்குகளாக மாறி வரும் கலாச்சார சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத்தான் நம்மால் பார்க்க முடிகின்றது. ஆண்டு விழாக்கள் எனும் பெயரில் அரங்கேறி வரும் அவலங்களும், ஆட்டபாட்டங்களும் முகம் சுளிக்கச் செய்யும் விதமாக அமைந்து விடுகின்றன. இத்தகைய செயல்பாடுகளை ஆசிரிய பெருமக்கள் உதவியோடு, நிர்வாகமும் இணைந்து கொண்டு வழி நடத்தி வருவது ஒரு நல்ல தலைமுறையினரை உருவாக்க உகந்ததல்ல என்பதுவே இக்கட்டுரையின் நோக்கம்.
மாணவர்களை ஊக்குவித்து மதிப்பு மிக்க நன்மக்களாக உருவாக்க எத்தனையோ நல்ல பல வழிகள் இருக்கின்றபோதிலும் அவற்றையெல்லாம் வெறும் ஒப்புக்காக மட்டும் வைத்துக் கொண்டு, தரங்கெட்ட சினிமாப் பாடல்களுக்குத் தக்கவாறு சின்னஞ் சிறார்களை ஆட வைத்து அழகு பார்க்கும் இக்கலாச்சாரம் எங்கிருந்து வந்தது? மாறுவேடப் போட்டிகள், வினா விடை, தனித்திறமை, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டி, ஓவியம், சாகசம், என ஆரோக்கியமான விஷயங்களை நடத்தும் இப்பள்ளிகள் சினிமாப் பாடல்களுக்கு சிறார்களை ஆட்டம் போட வைப்பதில் அப்படி என்னதான் பெருமையைக் கண்டார்களோ? அதைத்தான் நம்மால் இன்னும் புரிந்துகொள்ள இயலவில்லை! நிர்வாகத்தைக் கேட்டால் பெற்றோர்களே முன் வந்து என் பிள்ளையை டான்ஸ் போட்டிக்கு சேருங்கள் என வற்புறுத்துவதாகக் கூறி நழுவிக் கொள்கின்றனர்.
நாட்டுப் பற்றையும், நல்ல விஷயங்களையும் வலியுறுத்தும் சினிமாக்களை நாம் புறந்தள்ளி விட முடியாது. நான் படிக்கும் காலத்தில் கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டிய கட்டபொம்மன், நல்ல தங்காள் போன்ற சினிமாக்களுக்கு எங்களை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துச் சென்றுள்ளார்கள். அதற்கே பல விதமான எதிர்ப்புக்களை மார்க்கம் அறிந்தவர்களிடமிருந்து நிர்வாகத்தினர் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு!
பெரும்பாலும் இன்றைய சினிமாக்கள் வன்முறையையும், பாலியல் பகிரங்கத்தையும், களவு, கொள்ளை, கடத்தல், கொலைகள் என பார்க்கக் கூடாத பல விஷயங்களையும் படம் பிடித்து, தெள்ளத்தெளிவாக வெள்ளித்திரைகளில் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எனவேதான் இத்தகைய தரங்கெட்ட சினிமாக்களில் வரும் விரசமான பாடல் காட்சிகளுக்கு பச்சிளம் குழந்தைகளை ஆட வைத்துப் பழக்காதீர்கள் என நாம் பல முறை பல்வேறு கல்விக் கூடங்களுக்கு எச்சரித்துள்ளோம்.
மேலோட்டமமாகப் பார்க்கும்போது, “இதில் என்ன தவறு இருக்கின்றது? ஆண்டு முழுவதும் படிப்பில் மூழ்கிக் கிடக்கும் மாணவ-மாணவியருக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வல்லவா இது? இந்த ஒரு நாள் அவர்கள் சுதந்திரமாக வானில் சிறகடித்துப் பறக்கட்டுமே? அதை ஏன் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றீர்கள்?” என விபரீதத்தின் ஆழம் தெரியாமல் சிலர் ஆதரவு தெரிவித்து ஆதங்கப்பட்டுக் கொள்கின்றனர்.
தாராளமாக அந்த மழலைச் சிட்டுக்கள் சிறகடித்துப் பறக்கட்டும். அதற்குப் பல வழிமுறைகள் இருக்க, விரும்பத்தகாத சினிமாப் பாடல்களுக்கு ஆடல் என்று ஆண்டு விழாக்களில் கட்டயப்படுத்துவதைத்தான் நாம் கண்டிக்கின்றோம்.
இது குடம் பாலில் துளி விஷம் கலப்பதற்குச் சமம். பண்பாடுச் சீர்குலைவை ஏற்படுத்தி மாணவர்கள் பாதை மாறி பயணிப்பதற்கு ஏதுவாக அமைந்து விடக்கூடும். இத்தகைய செயல்கள் பெற்றோர்களைக் கவர்வதற்காகவும், தமது பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் அன்றி இதில் வேறென்ன காரணம் இருக்க முடியும்? இதை வலியுறுத்துவோர் பழமைவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.
ஒரு சினிமா பாட்டை மாணவன் தனது வகுப்பறையில் முனுமுனுத்தாலே மூக்குக்கு மேல் கோபம் வரும் ஆசிரியருக்கு. ஆனால் அதே பாடல்களை மேடை போட்டு அதற்கேற்றவாறு ஆடை அலங்காரமும், ஒப்பனையும் பூசி இளந்தளிர்களை, மொட்டு மலர்களை, சின்னஞ்சிறார்களை அணிவகுக்கச் செய்து ஆட வைத்து ரசிப்பது எவ்விதத்தில் நியாயம்? ஒழுக்கத்தையும், உயர்வான நன்னெறிகளையும் போதிக்கும் கல்விக்கூடங்கள் இன்று திரையரங்குகளாக மாறி வருவதேன்?
முழுக்க முழுக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாட சாலைகள் கூட தாம் நடத்தும் ஆண்டு விழாக்களில் அருள் மறையாம் திருமறையின் தூய வசனங்களை ஓதித் துவங்குகின்றனர். அதே மேடையில் அனாச்சரத்தின் உச்சகட்டமாய் கேடு கெட்ட சினிமாப் பாடல்களுக்கு ஆட்டம் போட வைப்பதை எப்படி நாம் பொறுத்துக் கொள்ள இயலும்?
மலரும் மொட்டுக்களான வளரும் நம் இளைய தலைமுறையினரை நெறிப்படுத்தி, நேரான பாதையில் வழி நடத்திச் செல்லும் தலையாய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அப்பள்ளிக் கூடங்களின் நிர்வாகிகளுக்கும் உள்ளது என்பதை உணர்ந்து இனி வருங்காலங்களில் இத் தீய வழக்கத்தை விட்டொழித்து வருங்காலத்தின் தூண்களை வளையாமல் நிமிந்து நிற்க்க வழி வகுப்பார்கள் என நம்புவோமாக!
|