Re:...மனதை வாட்டுகிறது..! posted byvakil.ahmed (chennai)[10 April 2015] IP: 14.*.*.* India | Comment Reference Number: 40092
மதங்களை கடந்து மக்களை ஈர்த்த கணீர் குரல்
மறைந்தது மனதை வாட்டுகிறது..!
இசை முரசு ஹனிபாவின் பாடல்கள் காலத்தால் அழியாத நல்ல தமிழ் இஸ்லாமிய பாடல்கள். அவரது பாடல்களின் சொல் அழகு, தமிழ், அரபு சொல் உச்சரிப்பு, அது அவருக்கே உரிய தனித்துவம். தமிழ் பேசும் இஸ்லாமிய உலகிற்கு அவர் தந்த பாடல்களில், இன்று என் நினைவை வருடுடியவைகளில் சில..
" அருள்மழை பொழிவாய் ரஹ்மானே !" ; "பெரியார் பிலாலின் தியாக வாழ்கை" ; "சென்று வரலாம் மதீனா" ; "காணக்கண் கோடி வேண்டும் கபாவை" ; "அதிகாலை நேரம்" ; " கன்னியரே, அன்னையரே" ; "அஸ்ஸலாமு அலைக்கும்" ; “ஒருநாள் மதீனா நகர் தனிலே" ; "பாத்திமா வாழ்ந்த முறை" ; " தாயுப் நகரத்து விதியிலே" ; "கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே" ; இப்படி , அவர் பாடிய இஸ்லாமிய பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாய், அலையலையாய் நினைவுக்கு வருகிறது.
ஹனிபா, தி.மு.கவின் ஆரம்பகால உறுப்பினர், கலைஞரின் கூட்டாளி. தி.மு. கழகத்திற்கு இவரது கம்பீர கானக்குரல் மிகவும் வலிமை சேர்த்தது. "ஓடி வருகிறான் உதய சூரியன்" , "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" ஆகிய இவரது கழக பாடல்கள் பிரசித்தி பெற்றவை. தி.மு.கழகத்தின் விசுவாசியான இவருக்கு 2002ம் ஆண்டு நடைபெற்ற வாணியம்படி இடை தேர்தலில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தார். தி.மு.கழகத்தின் ஆட்சியின் போது, 2007ம் ஆண்டு இவர் தமிழ் நாடு வக்ப் வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
"பாவ மன்னிப்பு" திரை படத்தில் TMS சௌந்தர்ராஜனுடன் இணைந்து பாடிய " எல்லோரும் கொண்டாடுவோம்" என்ற பாடலும், " ராமன் அப்துல்லா " என்ற திரை படத்தில் "உன் மதமா, என் மதமா " என்ற அவரது பாடலும், திரைபடத்தின் பிரபல பாடல்கள். "
“ இறைவனிடம் கையேந்துங்கள் " என்ற இவரது பாடல் தேனீர் கடைகள், சுபநிகழ்சிகள், ஆம்னி பஸ்கள், உலகெங்கும் உள்ள தமிழ் வானொலிகளிலும், FMரேடியோக்களிலும், அனைத்து இடங்களிலும் இன்றும் ஜாதி, மத, பேத மின்றி ஒலித்து கொண்டிருகிறது.
இஸ்லாத்தின் வரலாறுகளை தன் தமிழ் பாடலால் கணிரென கர்ஜித்தவர் ஹனிபா. அவர் மறைந்தாலும், எங்கெல்லாம் அவரது பாடல் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் அவர் நியாபகத்துக்கு வருவார். உலக நாடுகள் பலவற்றிலும் பல்லாயிரம் இஸ்லாமிய இசை கட்சேரிகளை நடத்தியுள்ள ஹனிபா தமிழ் இஸ்லாமிய பாடல் உலகின் ஒரு சரித்திர சகாப்தம். தமிழ் இஸ்லாமிய பாடல் விரும்பிகளின் மனங்களில் நிறைந்த வானம்பாடி, மகத்தான தீன் பாடல் நாயகர். இறைவன் இவரது பாவங்களை மன்னித்து சுவனத்தை தந்தருள்வானாக. ஆமீன்.
அன்னாரின் மறைவால் விளைந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை அவரது மகனார், எம் இனிய நண்பர் நௌஷாத் அலி மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு இறைவன் தந்தருளட்டும். வல்ல இறைவனின் கருணை அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கட்டும்.
Re:...பிளாஸ்டிக் குப்பைகள் posted byvakil.ahamed (chennai)[02 February 2015] IP: 14.*.*.* India | Comment Reference Number: 39141
புத்தி ஜீவிகளே சொல்லுங்கள்....
இங்கே இணைக்கப்பட்டுள்ள நிலைப்படங்கள், நாம் குப்பைகளுக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மிக தெளிவாக காட்டுகிறது.
தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் குவளைகள், புட்டிகள் ஒரு குட்டி மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. தேங்காய் நம் பண்பாட்டு, கலாச்சரதோடு தொண்டுதொட்டு தொடர்ந்து வரும் உணவுக்கு பயன்படும் பொருள். டயர் இல்லாமலும் வாகனங்கள் ஓடமுடியாது. ஆனால் இந்த பிளாஸ்டிக் எப்படி நம்மோடு இவ்வளவு அதிகமாக ஒட்டிக்கொண்டு வந்தது. கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவிற்கு பிளாஸ்டிக் ஆதிக்கம் நம்மிடம் இல்லை.
இன்று பிளாஸ்டிக் குப்பை இல்லாத இடமே இல்லை. நம் வாழ்விலும் சுற்றுப்புறச் சூழலிலும் பிளாஸ்டிக் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது. நம் வீட்டின் உள்ளேயும், வீட்டைச் சுற்றிலும், ஆற்றில், குளத்தில், சாக்கடையில், கால்நடையின் கழிவுகளில், வயலுக்குப் போடும் தொழு உரத்தில், விலங்குகளின் குடலில், யானையின் லத்தியில், பறவைகளின் கூட்டில், கடல் அலையில், தேங்கிக் கிடக்கும் நீரில், வற்றிய ஆற்று மணலில், பச்சைப் பசேலன பரந்து விரிந்திருக்கும் வயல்வெளியில், தனியே நின்றுகொண்டிருக்கும் கருவேல மரத்தின் முள்ளில் மாட்டி காற்றில் படபடத்துக்கொண்டு, முள்வேலிக் கம்பியில் சிக்கி சலசலத்துக்கொண்டு, எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் குப்பை.அவற்றைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாகவும், கோபமாகவும் வருகிறது. யார் மீது கோபப்படுவது என்று புரியவில்லை. யாரைக் குற்றம் சொல்லவதென்று புரியவில்லை.
அந்தக் காலத்தில் மளிகைக் கடைகளில் செய்தித்தாள்களினால் ஆன உறையில் அரிசியையும், பருப்பையும், புளியையும், பலசரக்குகளையும் கட்டித்தந்தார்கள். எண்ணெய், நெய் போன்ற திரவ பொருட்களை வாங்க மூடி போட்ட பாத்திரத்தையோ, கண்ணாடி பாட்டிலையோ எடுத்துச் சென்றனர். அரிசிவாங்க, நெல்லு, மசாலா திரிக்க கடவாய் பெட்டியை எடுத்து சென்றனர். கதம்பத்தை, முல்லையை, மல்லிகை அரும்பை, முழம்போட்டு நீர்தெளித்து வைத்த தாமரை இலையில் கட்டிக்கொடுத்தார்கள். ஹோட்டலில் வாழை இலையில், சன்னமான ஈர்குச்சியால் ஒன்று சேர்த்து தைக்கப்பட்ட மந்தாரை இலையிலும் சாப்பாடு போட்டார்கள். (இப்போது சில இடங்களில் வாழை இலை போன்ற வடிவிலமைந்த மேலே மெல்லிய பிளாஸ்டிக் உறைகொண்ட பேப்பரால் ஆன இலை!)
தள்ளு வண்டியில், தலையில் கூடையை சுமந்து தெருவில் காய்கறி விற்பவர்கள் பிளாஸ்டிக் பை கொடுக்கவில்லை. மாறாக, வாங்க வந்தவர்கள் பிண்ணப்பட்ட ஒயர் கூடைகளை எடுத்துச் சென்றனர். எடுக்க மறந்த பெண்கள் தங்கள் முந்தானையில் வாங்கி கட்டி எடுத்துச் சென்றனர். கறி, பனை ஓலை பட்டையிலும், மீன், தேன் கூடு போன்ற பனை ஓலை கீற்று கூடையிலும் வைத்து தருவார்கள். பலசரக்கு கடைக்கு போகும் போது மஞ்சள் பையை எடுத்துச் சென்றனர்.
எந்தத் துணிக்கடைக்குச் சென்றாலும் அவர்கள் தந்ததும் துணிப் பையையே. இந்த மஞ்சள் பை அதன் மவுசை இப்போது இழந்துவிட்டது. அதை ஏந்திச் செல்வோரையும் இந்த உலகம் கேலி செய்கிறது. விசித்திரமாக பார்க்கிறது. எத்தனைபேர் பிளாஸ்டிக் பைகளையோ, குவளையையோ உபயோகிக்காமல் இருக்கிறோம்? அவற்றை நமக்குக் கொடுக்கப்படும்போது வேண்டாம் என்கிறோம்?
அந்த காலத்தில் லாலா மிட்டாய் கடைகளில் பனை ஓலை பெட்டியில் தான் முறுக்கு, மைசூர்பா, லட்டு இன்னும் எல்லா இனிப்பு, காரமும் அடைத்து தருவார்கள். அதனாலேயே அதற்கு மிட்டாய் பெட்டி என்று பெயரும் வந்திருக்கு. நமதூரில் அந்த காலத்தில் வீடுகளில் விசேஷங்கள் நடைபெறும்போது பிலாபெட்டியில் (பனை ஓலை பெட்டி) சோறுவைத்து கொடுப்பார்கள். இப்போது அது ஒருவிதமான சூடுதாங்கி சருகை கவரில் வைத்து கொடுக்கப்படுகிறது. கலதி விருந்தில் மண் கலசத்தில் தண்ணீர் பரிமாறப்படும். தண்ணீர் இபோது பிளாஸ்டிக் பாக்கெட்டில் கொடுக்கப்படுகிறது. கலதி சாப்பாட்டில் கத்தரிக்காய் மாங்காய் பருப்பு, கறி, புளியாணம், மண் சிட்டியில் வைத்து விளம்பப்படும். இப்போது ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் கிண்ணங்கள் பயன்படுத்துறாங்க. சாப்பாடு முடிந்ததும் வெளியில் கொட்டிகுவிக்கப்படும் இந்த பிளாஸ்டிக் கிண்ணங்கள் ஒரு சின்ன மலையளவு உயரும. அது நம்ம நிலத்திலேயே ஒதுக்குபுறமாக கொட்டப்படும். அது நம் நிலத்தடிநீரை பாதிக்கும்தானே?
நமது ஊரை, நம் மண்ணை பற்றி, சுற்றுப்புறச்சூழலைப் பற்றி நாம் அக்கறை கொள்ள வேண்டாமா? வல்ல இறைவன் நமக்களித்த இந்த பூவுலகை எந்த வித சேதாரமும் இல்லாமல் நம் வருங்கால சந்ததிகள் வாழ்வதற்கு விட்டு செல்லவேண்டாமா? புத்தி ஜீவிகள் நிறைந்த பட்டினத்தில் யாராவது இதற்கெல்லாம் மாற்றாய் ஒரு வழிசொல்லுங்களேன்.
சமூக அக்கறையோடு...
வக்கீல்.அஹ்மத்,
பணிப்பாளர், துளிர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross