தென்காசியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மின்னணு ஊடக பயிலரங்க விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ‘கவிமகன்’ காதர் ‘சிறந்த மின்னணு ஊடகவியலாளர் விருது’ பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மின்னணு ஊடகப் பிரிவின் சார்பில், மின்னணு ஊடகப் பயிலரங்க விழா, நெல்லை மாவட்டம் தென்காசியில் இம்மாதம் 28ஆம் நாள் சனிக்கிழமையன்று 10.00 மணி முதல் 17.30 மணி வரை நடைபெற்றது.
கட்சியின் மாநில - மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இவ்விழாவில், மின்னணு ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெ.ஏ.ஜமால் முஹம்மத் இப்றாஹீம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கல்விப் பணி செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் துவக்கவுரையாற்றினார்.
சன் தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் நெல்சன் சேவியர், நக்கீரன் வாரமிருமுறை இதழின் தலைமைச் செய்தியாளர் சி.என்.இராமகிருஷ்ணன், கேப்டன் தொலைக்காட்சியின் அரசியல் ஆய்வாளர் இல.வேந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சமூக வலைதளங்கள் உள்ளிட்ட நவீன ஊடகங்கள் எவ்வாறெல்லாம் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பன குறித்து அவர்களது உரைகள் அமைந்திருந்தன.
முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான், நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய மாநில செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் கருத்துரையாற்ற, விழாவிற்குத் தலைமை தாங்கிய முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுப் பேருரையாற்றியதோடு, செய்தியாளர் சந்திப்பிலும் பேட்டியளித்தார்.
அவரது உரை விபரம் வருமாறு:-
தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மின்னணு ஊடகவியல் பயிலரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆண்டு சென்னையில் 2 நாள் மாநாடாக இது நடைபெறவேண்டும். இதில் பிரபல ஊடகவியலாளர்கள் பலரையும் பங்கேற்க செய்வதன் மூலம் ஏராளமான விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும். அதே சமயம் முஸ்லிம் சமுதாய இளைஞர்களின் உணர்வு என்ன என்பதையும் பத்திரிகைத் துறையிலே உள்ளவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
இந்தப் பயிலரங்கம் ஊடக சம்மந்தமான பயிலரங்கம். ஊடகங்கள் என்றால் இதுவரை இருந்து வரும் அச்சு ஊடகம், காட்சி ஊடகங்கள் இடையே இன்று மின்னணு ஊடகங்களாக சமுக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. .வெப்சைட் என்றால் இணையதளம் ,இமெயில் என்றால் மின்னஞ்சல் ,பேஸ்புக் என்பதற்கு முக நூல் என்றும் டுவிட்டர் என்றால் சுட்டுரை என்றும் பொருள்.
கட்டுரை எழுதுவது ,குட்டுரை எழுதுவது ,சுட்டிச்சொல்வதை போல் கொட்டி சொல்வது அதாவது தலையில் கொட்டி சொல்வதை போல இப்போது செய்ய முடியாது.ஆனால் ஊடகத்தின் மூலமாக குட்டிச்சொல்லாமல் சுட்டிக்காட்டி சொல்லலாம்.
இவை தனியாக இயங்காது. இவற்றை இயக்க வேண்டும். இயக்குபவர் சரியாக இயக்கினால் எல்லாம் சரியாக இருக்கும். எனவே முஸ்லிம் லீகர்களைப் பொருத்த வரை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது மிகச்சரியாக நம் கொள்கை கோட்பாடுகள், நோக்கங்கள் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். இந்தப் பயிலரங்கிற்கு முஸ்லிம் மாணவர் பேரவை முஸ்லிம் யூத் லீகினர் மட்டுமின்றி முஸ்லிம் லீகின் மூத்தவர்களும் வந்திருக்கின்றனர்.
இன்று இணையதளங்களை எல்லோரும் பயன்படுத்துகின்றனர். இந்த சமூக வலைத்தளங்களை எப்படிப் பயன்படுத்தினால் பண்படுத்தும், எப்படிப் பயன்படுத்தினால் புண்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்தப் பயிலரங்கம்.
விமர்சனங்கள் என்ற பெயரால் வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது வெறுப்பை வளர்க்கக் கூடாது. வார்த்தைகளில் விரோதத்தை வளர்க்கக் கூடாது - துரோகத்தைச் செய்யக்கூடாது.
இன்று எத்தனையோ விஷயங்களைச் சொல்லி வருகிறோம். ஊழல் இல்லாத நிர்வாகம் என்கிறோம். சுரண்டல் இல்லாத பொருளாதாரம் என்கிறோம். இந்தக் கருத்துக்களை வலியுறுத்தும்போது கூட நம் கண்ணியம் தவறாத வகையில் அவை அமைய வேண்டும். இஸ்லாம் நமக்கு அப்படித்தான் கற்றுத் தந்திருக்கிறது.
மதங்கள், நம்பிக்கை சார்ந்தவை என்றும் ஊடகங்கள் அறிவியல் சார்ந்தவை என்றும் இங்கே சிறப்பு விருந்தினர்களால் சொல்லப்பட்டது. அறிவுக்கு எட்டாத அல்லது அறிவுக்கு புலப்படாத அல்லது பகுத்தறிவுக்கு எதிரான எதுவும் இஸ்லாமில் இல்லை. அதனால்தான் இஸ்லாமை அறிவுப்பூர்வமான மார்க்கம் என்கிறோம். விஞ்ஞானப் பூர்வமான மதம் இது என அழைக்கப்படுகிறது.
நான் பல்வேறு மதங்களை ஆய்வு செய்திருக்கின்றேன். மத நூல்களைப் படித்தறிந்திருக்கிறேன். திருக்குர்ஆனை ஓதி உணர்ந்திருக்கிறேன். எல்லா விஷயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இஸ்லாமில் அறிவுக்கு விரோதமாக எதுவுமே கிடையாது. இஸ்லாமிய நம்பிக்கைகள் அறிவார்ந்தவை. இந்த நம்பிக்கை என்பது மூட நம்பிக்கையல்ல.
அப்படிப்பட்ட இஸ்லாத்தை மற்றவர்களிடத்தில் எத்தி வைக்கும்போது பண்பட்ட முறையில் இதமாகச் சொல்ல வேண்டும்.
இன்று காலை அமர்வில் பேசிய மூன்று ஊடகவியலாளர்கள் பேசிய பேச்சின் சாராம்சம் என்னவென்றால், “முஸ்லிம்கள் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுகிறீர்களே ஏன்? உங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொள்கிறீர்களே, உங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறீர்களே ஏன்? குதிரையை பெரிய மைதானத்தில் ஓட்டுங்கள்” என்பதுதான். எனவே ஊடகப் பயன்பாட்டில் உள்ள நீங்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இன்று குர்ஆனை விளக்கிச் சொல்கிறோம் என்ற பெயரால் தவறான அர்த்தங்களுடைய வரம்பு மீறிய வார்த்தைப் பிரயோகங்கள் செய்து விடுகின்றனர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமேயானால் புனித திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் ஜிஹாத் என்ற வார்த்தை 3 இடங்களில் மட்டுமே வருகிறது. ஜிஹாத் என்ற வார்த்தையோடு சேர்த்த விஷயங்கள் 22 இடங்களில் வருகின்றன. ஜிஹாதுன் கபீர் என்ற வார்த்தை ஒரே ஓர் இடத்தில்தான் வருகிறது. 25ஆம் அத்தியாயத்தின் 52ஆவது வசனமாகிய ஜிஹாதுன் கபீரின் விளக்கம், குர்ஆனைக் கொண்டு அதனை நன்கு விளங்கி அதை எடுத்துச்சொல்வதுதான். மறுமையின் சிந்தனையை எண்ணி ஷைத்தானுக்கு விரோதமாக மனதை அடக்கி ஆளுவதுதான்.
இந்தக் குர்ஆனுக்கு தவறான விளக்கம் சொல்லப்படுகின்ற காரணத்தாலும், வெறுப்பை வளர்க்கும் விளக்கங்கள் தந்த விளைவுகளாலும் இஸ்லாமிய வளர்ச்சி தடைபடுகிறது.
இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கும் எவரும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம் - இஸ்லாமிய மார்க்கம் வாளேந்தி, யுத்தங்களால் வளரவில்லை என்பதை! இஸ்லாம் வளந்தது மக்கள் விரும்பி ஏற்றதால்தான். எனவே புதிய சிந்தனையோடு இஸ்லாமை விளங்க வைப்போம். நல்ல பண்புகளின் மூலம் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்போம். அதற்கு இந்தப் பயிரலங்கம் பயனளிக்கும் என நம்புகிறேன்.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான நல்ல தகவல்கள் பரிமாற்றம், விவாதங்கள் - விமர்சனங்களுக்கு அழகிய முறையில் விளக்கமளித்தல் உள்ளிட்ட வகைகளில் பங்காற்றியோர் - நடுவர் குழுவால் பட்டியலிடப்பட்டு, சிறந்த பங்கேற்பாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கத்தர் நாட்டில் பணியாற்றி வரும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ‘கவிமகன்’ காதர் அவர்களுள் ஒருவராவார்.
இவர்கள் அனைவருக்கும் ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசும், ‘சிறந்த மின்னணு ஊடகவியலாளர்’ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ‘கவிமகன்’ காதர் சார்பாக, கத்தர் நாட்டிலிருந்து இவ்விழாவில் பங்கேற்க வருகை தந்திருந்த - கத்தர் காயிதேமில்லத் பேரவை தலைவர் கே.வி.ஏ.டீ.ஹபீப் முஹம்மத் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர இளைஞரணி நிர்வாகிகளான எம்.இசட்.சித்தீக், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞரணி - மாணவரணி அங்கத்தினர் என சுமார் 30 பேர் தனி வாகனத்தில் சென்று கலந்துகொண்டனர்.
‘கவிமகன்’ காதர், காயல்பட்டணம்.காம் எழுத்துமேடை ஆசிரியர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் - இ.யூ.முஸ்லிம் லீக்)
தகவல் உதவி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதளம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |