காயல்பட்டினம் நகராட்சியில் - 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் - பயோ காஸ் திட்டம் அமைத்திட, சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அனுமதி
வழங்கியது.
இந்த திட்டத்திற்கும், நகரின் குப்பைகளை கொட்டுவதற்கும் - முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான், தனது
சர்வே எண் 278 இடத்தில், 5 ஏக்கர் நிலம் தர முன் வந்ததை அடுத்து, அதற்கு ஆதரவாக நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த இடம் - பயோ காஸ் திட்டம் அமைத்திட பொருத்தமானது இல்லை என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் கருத்து தெரிவித்து வந்தார்.
மேலும் நகரில் - இத்திட்டத்திற்கு தேவையான அளவிலான இடம், அரசு மற்றும் நகராட்சியின் வசம் ஏராளமாக உள்ளது என்றும் அவர் கூறி வந்தார்.
நகர்மன்றத் தலைவரின் ஆட்சேபனையை அடுத்து, திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தை சார்ந்த மண்டல பொறியாளர்
கனகராஜ், பயோ காஸ் திட்டத்திற்கு - சர்வே எண் 278 பொருத்தமானதே என தனது அறிக்கையை அக்டோபர் மாதம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து - நகராட்சி மூலமாக, தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இந்த இடம் குறித்து டிசம்பர் மாதம் விண்ணப்பம்
அனுப்பப்பட்டது. அந்த விண்ணப்பத்தை தொடர்ந்து கள ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், புதிய CRZ அறிவிப்புபடி, சர்வே எண்
278 இடம் - நீர் தேங்கும் இடம் என, நகராட்சியின் விண்ணப்பத்தை - ஜனவரி மாதம் - நிராகரித்தது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்ததை தொடர்ந்து, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் பிரகாஷ் IAS, இத்திட்டத்திற்கு வேறு இடம்
பார்க்க கூறி, திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சீனி அஜ்மல் கானுக்கு அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், சீனி
அஜ்மல் கான், மீண்டும் விண்ணப்பத்தை - மறு பரிசீலனைக்காக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்க - காயல்பட்டினம் நகராட்சி
ஆணையர் காந்திராஜை கூறியதாக தெரிகிறது.
காயல்பட்டினம் நகராட்சியின் மறு விண்ணப்பமும், பிப்ரவரி 19 அன்று மீண்டும் நிராகரிக்கப்பட்டது. அந்த நிராகரிப்பு கடிதத்தில் - மாசு கட்டுப்பாட்டு
வாரியம், திருநெல்வேலியில் உள்ள நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் படியும், சர்வே எண் 278
இடம் - CRZ எல்லைக்குள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பிறகும் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தங்கள் முயற்சியை கைவிடவில்லை.
CRZ குறித்து பரிசீலனை செய்ய, மாவட்ட அளவில் அமைப்பு ஒன்று உள்ளது. DISTRICT COASTAL ZONE MANAGEMENT AUTHORITY (DCZMA) என்ற
இந்த அமைப்புக்கு மாவட்ட ஆட்சியர் தலைவர் ஆவார். விதிமுறைகள்படி, ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் செயல்புரியும் DCZMA
அமைப்புக்கு - CRZ இடத்தில் அமையும் திட்டங்கள் குறித்த விண்ணப்பங்களை பார்வையிட்டு, சென்னையில் உள்ள STATE COASTAL ZONE
MANAGEMENT AUTHORITY (SCZMA) அமைப்புக்கு அனுப்பவே அதிகாரம் உள்ளது. நேரடியாக ஒப்புதல் கொடுக்கும் அதிகாரம் இல்லை.
இருப்பினும் - மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்து, பணிகளை துவக்க - மண்டல இயக்குனர், காயல்பட்டினம் நகராட்சியின்
ஆணையருக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் - சர்வே எண் 278 இடத்தில, மார்ச் 25, புதனன்று காலை 10 மணியளவில், பயோ
காஸ் திட்டத்திற்கு பூமி பூஜை நடந்ததாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் - நகராட்சி ஆணையர் காந்திராஜ், நகராட்சி பொறியாளர் சிவகுமார், நகராட்சி பணிகள் மேற்பார்வையாளர் சுதாகரன், சுகாதார ஆய்வாளர்
பொன்வேல் ராஜ், தொழில்நுட்ப உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரியும் செந்தில் குமார், இப்பணிகளுக்கான டெண்டர் பெற்றுள்ள
சேலத்தை சார்ந்த SK & CO நிறுவனத்தை சார்ந்தவர்கள் ஆகியோர் மட்டும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இது குறித்து - காயல்பட்டணம்.காம், நகராட்சி ஆணையர் காந்திராஜை வினவியது. பூமி பூஜை நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்த அவர், இது
குறித்த விண்ணப்பம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், தனது அடுத்த (DCZMA) கூட்டத்தில், இது குறித்து பரிசீலனை
செய்வதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
நகராட்சி ஆணையர் மறுத்தாலும், புதனன்று பூமி பூஜை நடந்ததை, காயல்பட்டணம்.காம் - நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் - மீண்டும் ஊர்ஜிதம்
செய்துள்ளது.
சர்வே எண் 278 இடத்தில், பயோ காஸ் திட்டம் அமைந்திட, அனுமதி வழங்க கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு - மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் இருந்தும், அரசியல் வட்டாரங்களில் இருந்தும் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
அக்டோபர் 8, 2013இல் பயோ காஸ் திட்டத்திற்கு தோதுவான இடங்களை பார்வையிட்டு, மூன்று இடங்களை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை
செய்திருந்தார். அவற்றில் ஒன்றான - சர்வே எண் 278 குறித்த, மாவட்ட ஆட்சியரின் குறிப்பில் -
"மேற்படி நிலப்பரப்பு கடற்கரைப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால், கடற்கரை மேலாண்மை பகுதி (CRZ) வரையறைக்குள் அமையப்பெறாவண்ணம்
திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம்"
என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க, புல எண் 278இல் இன்று காலையில் பதிவு செய்யப்பட்ட படங்கள் சில:-
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 23:19 / 28.03.2015] |