காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), நஹ்வியப்பா நற்பணி மன்றம் இணைந்து, உடன்குடி இறையருள் அக்குபஞ்சர் வைத்திய சாலை மூலம் - அக்குபஞ்சர் இலவச சிகிச்சை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 10.00 மணி முதல் 13.00 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு 50 பயனாளிகளுக்கு டோக்கன் வினியோக முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் துவக்க நிகழ்ச்சி இன்று (மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மற்றும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் துஆ பிரார்த்தனை செய்து, சிகிச்சை நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், 18 ஆண்கள், 42 பெண்கள் என மொத்தம் 60 பேர் பங்கேற்று, மூட்டு வலி, இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றனர். உடன்குடி இறையருள் அக்குபஞ்சர் வைத்தியசாலையின் அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர் ஏ.வி.ஃபாயிஸ் முஹ்யித்தீன் சிகிச்சையளித்தார்.
முகாம் ஏற்பாடுகளை எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நஹ்வியப்பா நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |