திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவியர் 40 பேர் - மன வளர்ச்சிக் குறைபாடு, மூளை முடக்குவாதம், புறவுலகச் சிந்தனையற்ற குழந்தைகளை அடையாளங்கானல், அவர்களது நிலையறிதல் குறித்து பயிற்சி பெறுவதற்காக, கல்லூரியின் பேராசிரியர்களான மெர்பா க்றிஸ்டி, செல்வகுமாரி ஆகியோர் வழிகாட்டலில் - இம்மாதம் 23ஆம் நாளன்று காயல்பட்டினம் தளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு வருகை தந்தனர்.
துளிர் காணொளிக் கூடத்தில் பயிற்சி வகுப்பு - பள்ளிக் குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. பள்ளி செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்றோர் தம்மை அறிமுகம் செய்துகொண்டனர்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அடையாளங்காணல், அவர்களைப் பயிற்றுவிக்கும் முறைகள் குறித்து, துளிர் பள்ளி ஆசிரியை ரேவதி உதாரணங்களுடன் விளக்கிப் பேசினார்.
புறவுலகச் சிந்தனைகள் அற்ற (ஆட்டிஸம்) குழந்தைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களைக் கையாளும் முறைகள், நடத்தை ஒழுங்குமுறைகள் குறித்து ஆசிரியை பாக்கியலட்சுமி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - துளிர் பள்ளி நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத், பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விளக்கியதோடு, மன வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகளின் இன்றைய சமூக நிலைகள், அவர்களிடம் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள், இக்குறைபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து காணொளி மூலம் விளக்கிப் பேசினார்.
நோயாளியொருவர், மருத்துவரைக் காணும் முன்பே அவர்களை அணுகி, அரவணைத்து, நம்பிக்கையூட்டி, நோயின் தீவிரத்தை முதலில் கண்டறிந்து, சேவையாற்றுவோர்தான் செவிலியர் என்று கூறிய அவர், பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவியரின் வருங்காலம் சிறக்க வாழ்த்தினார்.
பின்னர், பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவியர், துளிர் பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் மற்றும் இயல்முறை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றை நேரடியாகக் கண்டு தெரிந்துகொண்டதோடு, தமக்கேற்பட்ட சந்தேகங்களுக்கும் துளிர் பள்ளி ஆசிரியையர் மூலம் உரிய விளக்கங்களைப் பெற்றனர்.
பின்னர் அவர்கள் துளிர் பள்ளி குழந்தைகளுடன் இணைந்து இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்தனர்.
பின்னர் நடைபெற்ற இறுதியமர்வில், செவிலியர் கல்லூரி பேராசிரியை மெர்பா க்றிஸ்டி பேசினார். துளிர் பள்ளியின் செயல்பாடுகள் தங்களை நெகிழச் செய்துள்ளதாகவும், சிறப்புக் குழந்தைகள் பற்றி பல விஷயங்களைத் தெரிந்துகொண்டதாகவும் கூறி, துளிர் நிர்வாகத்திற்கும், பயிற்சிக்காக துளிர் பள்ளியைத் தேர்வு செய்த கல்லூரி முதல்வருக்கும் நன்றி கூறினார்.
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |