காயல்பட்டினத்திலுள்ள - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பொதுமக்களின் மருத்துவ சிகிச்சைக்காக, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை - கே.எம்.டீ. மருத்துவமனை இணைந்து, “மருத்துவ நிவாரணத் திட்டம் - Medical Relief Scheme (MRS) எனும் பெயரில் சலுகை அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இவ்விரு நிறுவனங்களுக்கிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இம்மாதம் 20ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை பொருளாளர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், அறங்காவலர்களான வி.ஐ.புகாரீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, பைத்துல்மால் மேலாளர்,
கே.எம்.டீ. மருத்துவமனை சார்பில் அதன் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், மேலாளர் கே.அப்துல் லத்தீஃப் ஆகியோர் முன்னிலையில் நிறைவேறியது.
MRS மருத்துவ சலுகை அட்டை அறிமுக நிகழ்ச்சி இன்று (மார்ச் 31 செவ்வாய்க்கிழமை) 20.30 மணியளவில், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, பொருளாளர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், MRS அட்டை குறித்த விபரங்களை விளக்கிப் பேசினார்.
பின்னர் அவரும், டூட்டி சுஹ்ரவர்த்தி, எஸ்.ஏ.ஜவாஹிர், எம்.எல்.ஷேக்னா லெப்பை, எஸ்.ஏ.சி.முஹம்மத் ஷாஃபிஈ, எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் ஆகிய - காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை அறங்காவலர்களும் இணைந்து, MRS மருத்துவ சலுகை அட்டையை அறிமுகப்படுத்தினர்.
துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை மேலாளர்களான ஜரூக், சிந்தா மதார் ஆகியோர் செய்திருந்தனர்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த MRS சலுகை அட்டைகள், காயல்பட்டினத்திலுள்ள - தகுதியான 25 குடும்பங்களுக்கு வினியோகிக்கப்படவுள்ளதாகவும், வருங்காலங்களில், இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமுள்ளதாகவும்,
ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் ஓர் அட்டையின் கீழ் அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவர் - ஆண்டொன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் வரை மருத்துவ சிகிச்சை செலவினங்களில் பயன்பெறலாம் என்றும்,
ஒவ்வொரு சிகிச்சையின்போதும் ஆகும் மருத்துவ செலவினத்தில் 25 சதவிகிதத்தை MRS அட்டையைப் பயன்படுத்துவோரும், கே.எம்.டீ. மருத்துவமனை 25 சதவிகிதத்தையும், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை 50 சதவிகிதத்தையும் செலுத்துவர் என்றும் வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைத்துல்மாலுக்கு இதுநாள் வரை நன்கொடைகளை வழங்கி வருவோரும், புதியவர்களும் - இத்திட்டத்தின் நன்மைகளைக் கருத்திற்கொண்டு, தாராளமாக நன்கொடைகளை வழங்கி ஒத்துழைக்குமாறு பொதுமக்களை பைத்துல்மால் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கே.எம்.டி. மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |