செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து, கடந்த ஜனவரி மாதம் 07, 08, 09 ஆகிய மூன்று நாட்களில், ‘சங்க இலக்கியத்தில் தொழில்கள்’ எனும் கருப்பொருளில் கருத்தரங்கத்தை நடத்தின.
அக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘சங்க இலக்கியத்தில் தொழில்கள்’ எனும் தலைப்பில் புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா, கல்லூரி கேளரங்கில், 28.03.2015 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், கல்லூரியின் நிறுவனர் தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் இரா. அருணாஜோதி வரவேற்புரையாற்றினார். வாசிப்பின் அவசியம், அதன் நன்மைகள் குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் வே.சசிகலா விளக்கிப் பேசினார்.
இவ்விழாவில், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா.முஹம்மத் ஃபாரூக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘சங்க இலக்கியத்தில் தொழில்கள்’ நூலை வெளியிட, கல்லூரி நிறுவனர் அதைப் பெற்றுக்கொண்டார்.
செம்மொழி தொடர்பான கருத்தரங்குகள் பல கல்லூரிகளில் நடைபெற்றன என்றாலும், அதன் கட்டுரைகளை இப்படியொரு நூலாகத் தொகுத்து வெளியிட்டிருப்பது வாவு வஜீஹா வனிதையர் கல்லூரிதான் என்றும், இந்நூலைத் தொகுத்து வெளியிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் சிறப்பு விருந்தினர் பாராட்டிப் பேசினார்.
மற்றொரு சிறப்பு விருந்தினரான - அதே கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன், சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட காயல்பட்டினத்தைச் சேர்ந்த தமிழார்வலர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளருக்கு, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் மற்றும் கல்லூரி நிறுவனர் தலைவர், முதல்வர் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கி கண்ணியப்படுத்தினர்.
கல்லூரியின் தமிழத்துறை பேராசிரியர் சு.ஏஞ்சல் லதா நன்றி கூற, இரண்டாமாண்டு தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்டுன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியையர், மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |