பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, இம்மாதம் 02ஆம் நாள் (நேற்று) வியாழக்கிழமையன்று, கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு, திரும்பி வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே அவர்களது வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில், அக்கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர், பணியாளர் மற்றும் வாகன ஓட்டுநர் என மொத்தம் 9 பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவர் மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் பாவப் பிழைபொறுப்பிற்காகவும், சிகிச்சை பெற்று வருபவரின் பூரண உடல் நலனுக்காகவும், இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
தொழுகையை வழிநடத்திய - மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் துஆ பிரார்த்தனை செய்தார்.
அதுபோல, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின், இவ்விபத்து குறித்த விபரங்களை - பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ விளக்கிப் பேசி, பலியானவர்களுக்காகவும், காயமடைந்தவருக்காகவும் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் இப்பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
சிறிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 22:25 / 05.04.2015] |