வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழாவில், 270 மாணவியர் பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளனர். விழா நிகழ்வுகள் குறித்து, அக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 6-வது பட்டமளிப்பு விழா 21.03.2015 அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளரும் கல்லூரி நிர்வாகிகளும், கல்லூரி முதல்வரும், பேராசிரியர் பெருமக்களும் மெல்லிசை பின்னணியில் அணிவகுத்து அரங்கத்துக்கு வந்தனர். கல்லூரி மாணவி ஜொஹாரா ஃபாயிகா இறைமறை ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர் ரஹ்மான் இந்நிகழ்சிக்கு தலைமையேற்று பட்டமளிப்பு நிகழ்வை துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் வாவு. எம்.எம்.மொகுதஸீம் வாழ்த்துரை வழங்கினார்.
முதல்வர் முனைவர். திருமதி. வே. சசிகலா M.A., M.Phil., Ph.D., சிறப்பு விருந்தினரான நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் சு. பெருமாள்சாமி அவர்களை அறிமுகப்படுத்தியும், வருகை புரிந்தோரை வரவேற்றும் உரை நிகழ்த்தினார்.
''போதகர் முதல் துணைவேந்தர் வரை, கல்விப்பணியிலும் நிர்வாகப்பணியிலும் பல்வேறு நிலைகளை கடந்து வந்தவர். சமூக அக்கறையோடு கல்வியின் மேம்பாட்டிற்காக பல்கலைக்கழக மானியக் குழுவினரால் இந்தூர், விக்ரம் பல்கலைக்கழகம், மத்தியபிரதேசம் ‘ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்’ கொச்சி, ‘அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம்’ போன்ற பல்கலைக்கழகத்தின் பணி நியமன தேர்ந்தெடுப்பில் கவனிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக 9 ஆண்டு காலம் பணியாற்றி கல்வி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தவர். தமிழ்நாடு கல்லூரி முதல்வர் கழகத்தின் தலைவராக இருந்து அலுவலகச் செயல்பாடுகளை நெறிபடுத்திய தன்மையின் சிறப்பினால் இந்திய கல்லூரி முதல்வர்கள் கழகத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராக மேன்மைப் படுத்தப்பட்டுள்ளவர். இத்தகைய சிறப்பு வாய்ந்தவர் சிறப்பு விருந்தினர் முனைவர்.சு.பெருமாள்சாமி என கல்லூரி முதல்வர் அவருக்கு புகழாரம் சூட்டினார்''.
சிறப்பு விருந்தினர் முனைவர்.சு.பெருமாள்சாமி மாணவியருக்கு பட்டச்சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.
2011-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை பிரிவில் 257 மாணவியரும், 2011-2014 ஆம் ஆண்டிற்கான முதுகலை பிரிவில் 13 மாணவியரும் ஆக 270 பேர் பட்டம் பெற்றனர்.
இவர்களுள் பகுதி I தமிழில் 3 மாணவியரும், பகுதி I அரபிக் துறையில் 4 மாணவியரும், வணிக நிர்வாகவியல் துறையில் 4 மாணவியரும், வணிகவியல் துறையில் ஒரு மாணவியும், கணிப்பொறியியல் துறையில் 2 மாணவியரும், தகவல் தொழில் நுட்பத் துறையில் 7 மாணவியரும், முதுகலை ஆங்கில இலக்கியத்தில் ஒரு மாணவியும், முதுகலை வணிகவியல் துறையில் ஒரு மாணவியும், பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் (University Rank) இடம் பெற்றுள்ளனர்.
இம்மாணவியருள் J.S. சுபைதா மபாசா பகுதி I அரபித் துறையில் தங்கப் பதக்கத்தை (Gold Medal) தமிழக ஆளுனர் மாண்புமிகு திரு.ரோச்சையா அவர்களிடமிருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைச் சார்ந்த 23 மாணவியர் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.
பட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாக சிறப்பு விருந்தினர் விழாப் பேருரை நிகழ்த்தினார். அவரது உரையில் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற வஜிஹா கல்லூரி மாணவியரை வாழ்த்தினார்.
பட்டமளிப்பு விழாவில் பேணப்பட வேண்டிய நெறிமுறைகளை இக்கல்லூரி மிகச்சரியாக பேணியிருப்புதாகப் பாராட்டுத் தெரிவித்தார்.
கடின உழைப்பே மேன்மை தரும் என்றும் கல்வி, சமூக மேம்பாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்றும் மாணவியரிடையே அவர் வலியுறுத்தினார். பெண்கள் குடும்பத்தின் மதிப்பை பேணிக்காக்கும் பொறுப்பினை ஏற்க வேண்டியவர்கள் என்றும் நினைவு கூர்ந்தார்.
கல்லூரி படிப்பும், பட்டங்களும் கல்வியின் துவக்கமே தவிர முடிவல்ல என்றம் சுட்டிக்காட்டினார். கண்துஞ்சும் முன்னர் கடக்க வேண்டும் காத தூரம் (Miles to Go Before I Sleep) என்ற Robert Frost எனும் ஆங்கில கவிஞனின் கவிதை வரிகளை அவர் நினைவுகூர்ந்தார்.
பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
கல்லூரி துணைச் செயலாளர் அல்ஹாபிழ். வாவு. எஸ்.ஏ.ஆர். அஹ்மது இஸ்ஹாக் ஆலிம் நன்றியுரை வழங்கினார். கல்லூரி மாணவியின் இறை பிராத்தினைக்கு பின்னர் நாட்டுப்பண்ணுடன் பட்டமளிப்பு விழா இனிதே நிறைவு பெற்றது.
கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும், துணைமுதல்வருமான பேரசிரியர் திருமதி. அருணாஜோதி தலைமையில் கல்லூரி பேராசிரியைகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |