காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரபியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த, நஹ்வி அஹ்மத் முஹ்யித்தீன் - மர்ஹூமா சொளுக்கு தாஹா மர்யம் தம்பதியின் மகன் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீ (வயது 31). இவருக்குத் திருமணமாகி - மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இம்மாதம் 26ஆம் நாள் வியாழக்கிழமையன்று சென்னை பல்கலைக் கழக செனட் அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இவர் அரபியில் முனைவர் (பி.எச்டி.) பட்டம் பெற்றுள்ளார். சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் தாண்டவன் அவருக்கு முனைவர் பட்டச் சான்றிதழை வழங்கினார்.
“தவ்ருல் மதாரிஸில் அரபிய்யா ஃபீ தமிழ்நாடு ஃபீ தர்வீஜ் அத்துர்ராஸத்தில் அரபிய்யா - தமிழக அரபி மத்ரஸாக்கள் அரபி மற்றும் இஸ்லாமிய பாடங்களில் செய்த பங்களிப்புகள்” எனும் தலைப்பில், சுமார் 520 பக்கங்களைக் கொண்ட ஆய்வு நூலை அரபி மொழியில் இவர் சமர்ப்பித்திருந்தார்.
இந்த ஆய்வு நூலில் - அரபுலகிற்கும், இந்தியாவிற்குமிடையிலான தொடர்பு, காயல்பட்டினத்தில் அரபு மக்களின் குடியேற்றம், இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் (மார்க்க அறிஞர்களின்) பங்களிப்பு, தமிழகத்தில் தோன்றிய அரபி அறிஞர்கள், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மக்தப் (சிறாருக்கான மார்க்க அடிப்படைக் கல்வி), ஹிஃப்ழு (திருக்குர்ஆன் மனனம்), ஜும்றா (மார்க்க அறிஞர் கல்வி) ஆகிய 3 விதமான மத்ரஸாக்கள் பற்றிய வரலாறு, தமிழகத்தின் சுமார் 150 மார்க்க அறிஞர்களின் (உலமாக்களின்) வாழ்க்கைக் குறிப்புகள் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கீழக்கரை அரூஸிய்யா, வேலூர் லத்தீஃபிய்யா, வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், பெரம்பூர் ஜமாலிய்யா, உமராபாத் ஜாமிஆ தாருஸ் ஸலாம், நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா, லால்பேட்டை மன்பஉல் அன்வார், பொதக்குடி நூர் முஹம்மதிய்யு, கிளியனூர் ரஹ்மானிய்யா, காயல்பட்டினம் மஹ்ழரா ஆகிய 10 தொன்மையான அரபிக்கல்லூரிகளையும், பள்ளப்பட்டி உஸ்வத்துல் ஹஸனா, வடநெமிலி பிலாலிய்யா, வண்டலூர் புகாரிய்யா ஆகிய 3 புதிய அரபிக்கல்லூரிகளையும் இவர் ஆய்வுக்காக தேர்ந்தெடுத்திருந்தார்.
மஹான் ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களது குடும்பத்தின் அரபி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்து, ஏற்கனவே சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் அஹ்மத் ஜுபைர் - இந்த ஆய்வில் அவருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீ, துவக்கமாக காயல்பட்டினம் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் பட்டம் பெற்றவர். சென்னை வண்டலூரிலுள்ள கீழக்கரை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
எகிப்து நாட்டிலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் கேரளாவில் நடத்தப்பட்டு வரும் மர்கஸுஸ் ஸகாஃபதிஸ் ஸுன்னிய்யா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் பயின்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கடந்த 15.01.2009 அன்று ஆலிம் அஸ்ஸகாஃபீ அல் அஸ்ஹரீ என்ற பட்டத்தைப் பெற்றார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் மாடர்ன் அரபிக் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி...
சென்னை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் ஆலிம் அல்-புகாரி படிப்பை முடித்து, கல்லூரியில் மூன்றாமிடம்...
அஃப்ஸலுல் உலமா தேர்வில் முதல் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சி...
சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி...
உருது மொழி பட்டயப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி...
அரபி, ஆங்கிலம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள இவர் இம்மொழிகளில் நடத்தப்படும் முக்கியமானவர்களின் உரைகளுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் திகழ்தல்...
ஏற்கனவே தனது எம்.ஃபில். ஆய்வுக்காக காயல்பட்டினத்தின் முக்கிய மார்க்க அறிஞர்கள் மற்றும் மர்திய்யா பாமாலைகள் பற்றிய நூலை சமர்ப்பித்திருக்கிறார்.
காயல்பட்டினத்திலிருந்து ஆயிரக் கணக்கான ஹாஃபிழ்களும், ஆலிம்களும் உருவாகியிருந்தாலும், இத்தனை கல்வித் தகுதிகளோடு கற்றுத் தேறியுள்ள நகரின் முதல் ஆலிம் என்ற பெயரைப் பெற்றுள்ளார் இவர்.
தகவல்:
சிங்கப்பூரிலிருந்து...
நஹ்வீ A.M.ஷெய்க் அலீ ராஸிக்
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீயின் முந்தைய சாதனைகள் குறித்து, “சப்தமின்றி ஓர் இளம் சாதனை ஆலிம்” எனும் தலைப்பில், காயல்பட்டணம்.காம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |