முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்து அப்துர் ரஹ்மான் - நகராட்சிக்கு தானமாக தந்த (சர்வே எண் 278இல் உள்ள) 5.5 ஏக்கர்
நிலத்தின் ஒரு பகுதியில் - கடந்த புதனன்று ரகசியமான முறையில், தமிழக அரசின் 90 லட்ச ரூபாய் மதிப்பிலான பயோ காஸ் திட்டத்திற்கான பூமி பூஜை நடந்த செய்தியை காயல்பட்டணம்.காம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. நகராட்சி அலுவலர்கள் மற்றும் இந்த பணிகளை டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரை தவிர்த்து எவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் - கடந்த மூன்று மாதங்களில் இரு முறை நிராகரித்த இடத்தில் இந்த பூமி பூஜை நடந்தது சில புருவங்களை உயர்த்தினாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்க மறுத்தது குப்பைக்கொட்ட (COMPOST YARD / LANDFILL) அனுமதியே அன்றி, அந்த இடத்தில் பயோ காஸ் திட்டம் அமைத்திட அல்ல என்ற புரிந்துணர்வில் நகராட்சி நிர்வாகத்துறை அலுவலர்கள் உள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் - CRZ எல்லைக்குள் நடைபெறும் அனைத்து கட்டுமானங்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளின் முன் அனுமதி தேவை என்றே COASTAL REGULATION ZONE NOTIFICATION 2011 தெரிவிக்கிறது. எனவே - சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி பெறாமல், பணிகளை துவக்குவது சட்டப்படி குற்றமாகும்.
இதன் காரணமாகவே, பூமி பூஜை நடந்திருந்தாலும், சட்டப்பிரச்சனைகளில் சிக்காமல் இருக்கவே - நகராட்சி ஆணையர், காயல்பட்டணம்.காம்
இணையதளத்திடம் - பூமி பூஜை நடக்கவில்லை என்று தெரிவித்தார் என தெரிகிறது.
நகரின் மையப்பகுதியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள இந்த இடத்தினை, பயோ காஸ் திட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்த முக்கிய
காரணங்களில் - குப்பைக்கொட்டும் இடத்திற்கு அருகிலேயே பயோ காஸ் திட்டம் இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. தற்போது
குப்பைக்கொட்டுவதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், பயோ காஸ் திட்டத்திற்கான பூமி பூஜை மட்டும் அந்த இடத்தில நடந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
சர்வே எண் 278இன் பழைய FIELD MEASUREMENT BOOK (FMB) நகல்
சர்வே எண் 278 நிலத்தின் மொத்த பரப்பளவு - சுமார் 25 ஏக்கராகும். இந்த நிலம் - மூன்று உட்பிரிவுகள் கொண்டது. அதில் உட்பிரிவு 278(1) -
சுமார் 24.5 ஏக்கர் அளவிலானதாகும்; உட்பிரிவு 278(2) - 39 சென்ட் அளவிலானதாகும்; உட்பிரிவு 278(3) - 42 சென்ட்அளவிலானதாகும்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் அக்டோபர் மாதம் பதிவு செய்த ஒரு பத்திரம் மூலம், நகராட்சிக்கு - 4 ஏக்கர் நிலத்தை - 278(1) உட்பிரிவின், தென் மேற்கு கோடியில் வழங்கியுள்ளார். ஆனால் - இந்த இடத்தினை அடைந்திட, பாதை எதுவும் இல்லை.
இந்த சர்வே எண்ணின் - 278(2) உட்பிரிவில் தான் - நிலவியல் பாதை உள்ளது. குப்பைக்கொட்டுவதற்கும், பயோ காஸ் திட்டத்திற்கும் வழங்கப்பட்ட
4 ஏக்கர் நிலத்தை அடைய, இந்த நிலவியல் பாதையில் இருந்து - மேற்கு நோக்கி - சுமார் 400 மீட்டர் பயணம் செய்யவேண்டும்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் - கிழமேல் 466 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம், தென்வடல் 140 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் அளவில் (1.5 ஏக்கர்) - சாலைக்கு என தனி பத்திரம் மூலம் இடம் வழங்கினார். ஆனால் - இந்த பத்திரத்தை, திருச்செந்தூர் தாலுகா அலுவலகம், இன்றைய தேதி வரை, ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் - அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தூரம், கடலுக்குள் செல்வதாக உள்ளது என்பதாகும்.
இதன் காரணமாகவே, பத்திரப் பதிவுகளை தொடர்ந்து, இந்த சர்வே எண்ணுக்கு புதிய உட்பிரிவுகள் வழங்கும் போது, சாலைகளுக்கான உட்பிரிவை -
திருச்செந்தூர் தாலுகா அதிகாரிகள் வழங்கவில்லை என தெரிகிறது. 278(1) நிலத்தை, 278(1A) என்றும், 278(1B) என்றும் பிரித்த அதிகாரிகள்,
சாலைக்கான பகுதியினை பிரிக்கவில்லை.
பத்திரப்பதிவுகளுக்கு பிந்தைய சர்வே எண் 278இன் FMB; சாலைக்கான உட்பிரிவு ஏற்படுத்தப்படவில்லை
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள Coastal Zone Management Plan வரைபடம்
சாலைக்கு என முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய நிலத்தின் பெரும்பகுதி CRZ - 1 வரைமுறைக்குள் உள்ளது என காயல்பட்டணம்.காம்
ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது. CRZ - 1 பகுதிக்குள், புதிய சாலைகள் அமைக்க - CRZ NOTIFICATION 2011 அனுமதிக்க வில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. எனவே -
முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கியுள்ள 4 ஏக்கர் நிலத்தினை அடைய - கிழக்கில் இருந்து, நிலவியல் சாலை
வழியாக - அனுமதிக்கப்பட்ட பாதை - தற்போது கிடையாது. சாலைக்கு என வழங்கப்பட்ட இடமும், தனியார் பட்டா (எண் 2071) நிலமாகவே உள்ளது என்பதே தற்போதைய நிலை.
இந்த நிலையில், இந்த இடத்தினை அடைய - தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாதை உள்ளதாக, தவறான தகவல்களை - அனுமதி பெற,
அதிகாரிகள் வழங்கி வருவதாக தெரிகிறது. அவர்கள் குறிப்பிடும் பாதை, கொம்புத்துறை மீனவ கிராமத்தில் உள்ள தேவாலையத்தை (சர்வே எண்
315) ஒட்டி செல்வதாகவும் கூறபபடுகிறது. அவ்வாறு - அப்பகுதியில், எந்த பொது பாதையும் இல்லை என்பதே உண்மையாகும்.
முறையான சாலைகள் இல்லாமல் - எந்த அடிப்படையில் இந்த இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது என்ற கேள்விக்கான பதில்கள் அடுத்த சில நாட்களில் தெரிய வரலாம்.
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 5:30 pm / 31.3.2015] |