பாசமுள்ள தோழப்பா... posted byS.K.Salih (Kayalpatnam)[13 November 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38150
என் அன்புத் தந்தை மர்ஹூம் எஸ்.கே. அவர்களின் ஒத்த வயதுடைய மிக நெருங்கிய தோழர்களுள் புகாரீ மாமாவும் ஒருவர்.
தன் வாழ்வில் ஆயிரம் அவதிகளைச் சந்தித்தபோதும் சிறிதும் அதை வெளிக்காட்டாத தோழப்பா அவர்கள், தனக்குத் தெரிந்து யாரேனும் சுகவீனப்பட்டாலோ, படிப்புக்கு பணம் கட்ட வழியின்றி அவதிப்பட்டாலோ உடனடியாக களமிறங்கி, அவர்களுக்குத் தேவையான மனுவை அழகாக வடிவமைத்து, அவர்களையும் நேரில் அழைத்து வந்து, பொதுநல அமைப்புகளிடம் வழங்கி, தனது நம்பிக்கையின் அடிப்படையில் பரிந்துரையும் செய்வார். இவ்வாறு, தோழப்பா அவர்கள் மூலமாகப் பயன்பெற்ற ஏழை - எளியோர் நமதூரில் ஏராளம் உள்ளனர்.
உதவிகளை வாங்கிக் கொடுப்பதில் அவர்கள் காட்டிய அதே ஆர்வத்தை, அவ்வுதவிகளைப் பெற அவர்கள் தகுதியானவர்கள்தானா என்று ஆராய்வதிலும் தீவிரமாகக் காட்டினார்.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் துவக்க காலத்தில், ஏழை மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகைக்காக தன் பொறுப்பில் விண்ணப்பமளித்திருந்தார். ஆனால் அம்மாணவிக்குத் திடீரென திருமண ஏற்பாடு ஆனதால், முதலாமாண்டுடன் கல்லூரிப் படிப்பை நிறுத்திக்கொண்டார். அவருக்கு இக்ராஃவிலிருந்து (ஓராண்டுக்கு) ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டிருந்தது.
மாணவி படிப்பை இடைநிறுத்தம் செய்ததையறிந்தவுடன், சிறிதும் தாமதிக்காமல் அவரது இல்லம் சென்ற தோழப்பா அவர்கள்,
“தாயீ, நீ நல்லா படிச்சி, குடும்பத்தைக் காப்பாத்துவாய் என்றுதான் நான் உனக்கு உதவித்தொகைக்கு முயற்சி செய்தேன்... ஆனால் இப்போது நீ இடைநிறுத்தம் செய்துவிட்டதால், உனக்கும் அந்தப் பணத்தால் பயனில்லாமல் போய், இன்னொரு மாணவனுக்கோ, மாணவிக்கோ கிடைக்க வேண்டிய தொகையும் உன்னால் தடுக்கப்பட்டுவிட்டது... எனவே, சிரமம் பாராமல், நீ வாங்கிய 5 ஆயிரம் ரூபாயைத் தந்துவிடுமா... அப்படிச் செய்தால்தான், என்னை பொதுநல அமைப்புகள் நம்பும்... எனக்கும் இன்னும் நான்கு பேருக்கு உதவ முடியும்...”
என்று கூறி, பணத்தைப் பெற்று, இக்ராஃவில் கொடுத்தார்.
என் தந்தையை ஒருமையில் பேசி, உரிமையோடு கண்டித்த தோழப்பாக்களுள் எஞ்சியிருக்கும் ஓரிருவருள் இவர்களும் ஒருவர். இவர்களின் மனைவியார், என் தாயாருடன் பள்ளியில் ஒரே வகுப்பில் பயின்ற நெருங்கிய தோழி.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் புகாரீ தோழப்பா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் உடன்பிறந்த சகோதரரும், நான் சார்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர தலைவருமான வாவு நாஸர் ஹாஜி உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை ஈந்தருள்வானாக...
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross