நெய்தல் திணையை மையக் கருவாகக்கொண்டு வெளிவர இருக்கும் ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் சிறப்புப் பதிப்பிற்காக, காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடமிருந்து, பல்சுவை ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ‘பதியம்’ சிறார் இலக்கியத் தளம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை கீழ் வருமாறு:
அன்புடையீர்,
இறைவனின் அமைதி உங்கள் அனைவரின்மீது என்றென்றும் நிலவட்டுமாக!
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சிறார் பிரிவாக இயங்கும் கண்ணும்மா முற்றமும், காயல்பட்டினம் அரசு பொது நூலகமும் இணைந்து உருவாக்கியுள்ள ‘பதியம்’ சிறார் இலக்கியத் தளம்), நமதூர் குழந்தைகளை இலக்கிய உலகோடு இணைத்திடும் பெருமுயற்சியை செய்துவருவதை தாங்கள் அறிவீர்கள்.
அதன் ஒரு பகுதியாக, ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழில் பதிப்பிக்க, காயல்பட்டின பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் ஆக்கங்களை தருமாறு வேண்டுகிறோம்.
குட்டி ஆகாயம்
கோவையை சேர்ந்த வானம் அமைப்பின் வெளியீடாக வரும் இந்த சிறு இதழ், குழந்தைகளின் உலகை அச்சுமொழியில் அழகுற தருகிறது. மழலைகளின் மொழியில் உருவாகும் கதைகள், பாட்டு, ஓவியம் என பல நல்ல ஆக்கங்களை தாங்கி வரும் இந்த காலாண்டு வெளியீடு, இதுவரை ஆறு இதழ்கள் வந்துள்ளன.
இதன் ஆசிரியர்களுள் ஒருவரான வெங்கட் நிழல், 24.11.2017, 25.11.2017 ஆகிய தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றமைக் குறிப்பிடத்தக்கது.
சிறார் இலக்கிய ஆர்வலரான இவர் - கதை அமர்வுகள், சிறுவர் நூல்களின் அறிமுகம், நூல் மதிப்புரை அமர்வுகள், குழந்தைகள் குறித்த உரையாடல்கள் என பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்திவருகின்றார்.
நெய்தல் திணைக் குறித்த சிறப்பிதழ்
குட்டி ஆகாயத்தின் ஆறாவது இதழ், மேற்குதொடர்ச்சி மலையை மையக் கருவாகக்கொண்டு, நீலகிரி மாவட்ட குழந்தைகளின் ஆக்கங்களோடு சிறப்பான முறையில் வெளிவந்துள்ளது.
பெரும் வரவேற்பைப்பெற்ற இவ்விதழைத் தொடர்ந்து, நெய்தல் திணையை மையக் கருவாகக்கொண்டு, ஒரு சிறப்பு இதழை உருவாக்க உள்ளனர். கடலையும், கடல்-சார்ந்த நிலப்பரப்பையும், அதனையொட்டிய மக்களின் வாழ்க்கை முறையையும், குழந்தைகளின் பார்வையில் சொல்லும் ஊடகமாக இந்த இதழ் வடிவமைக்கப்பட உள்ளது.
காயல் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
நெய்தல் திணையை காட்சிப்படுத்தும் இந்த சிறப்பு இதழுக்கு, காயல்பட்டினத்தின் நிலப்பரப்பையும், வாழ்க்கையையும், மொழியையும், மரபையும், தொன்மையையும், பண்பாட்டையும் அழகுற விளக்கும் குழந்தைப் படைப்புகளை, நமதூர் பள்ளிச் சிறார்களிடம் திரட்டிட உள்ளோம்.
இந்த முயற்சிக்காக, மழலைப் பள்ளிகள் முதல் உயர்நிலைப்பள்ளிவரை, நகரின் அனைத்து பள்ளிக்கூடங்களின் மாணவ/மாணவியருக்கும், இவ்வறிக்கையின் மூலம் அழைப்புவிடுக்கிறோம்.
பல்சுவை ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன!
>> 3 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்கள் மட்டும் பங்கேற்கலாம்.
>> குட்டிக் கதை, கட்டுரை, கவிதை, பாட்டு, ஓவியம், கடிதம், நாடகம்,
உரையாடல், துணுக்கு, பயணக்கட்டுரை போன்ற ஆக்கங்களை அனுப்பலாம்.
>> கடல், கடல்வாழ் உயிரினங்கள், நெய்தல் திணை, திணை சார்ந்த மரங்கள், சுற்றுசூழல் சீர்கேடு, நம் மக்களின் மரபு சார்ந்த வாழ்க்கைமுறை என பரந்து விரிந்த பெருந்தலைப்புகளுள் சிறந்தவற்றை மாணவர்களே தேர்வுசெய்யலாம்!
>> மாதிரி தலைப்புகள் கீழே: கடல் குறித்த புரிதல், காயல்பட்டினம் கடற்கரையின் அழகு, கடற்கரை விளையாட்டுகள், கடற்கரையின் சுத்தம், கடலில் கொட்டப்படும் அமிலக் கழிவு, கடலில் குவியும் ஞெகிழி, தொழிற்சாலைகளின் தாக்கம், இவற்றால் பாதிப்புக்குள்ளாகும் கடல்வாழ் உயிரினங்கள், பனை மரங்கள், பனைப்பொருட்கள் (பதநீர், நுங்கு, கிழங்கு), பனைப் பொருட்களில் ஆயத்தமாகும் உள்ளூர் பலகாரங்கள், பனை கைவினைப்பொருள்கள், உப்பளம், தாமிரபரணி ஆறு கடலில் சேருதல் குறித்து, காயல்பட்டினம் குறித்த தலைப்புகள் (மொழி, கட்டிடவியல், பண்பாடு, தொன்மை), காயல் வரலாற்றுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பு, பண்டைய கடல் வழி வாணிபங்கள், கடற்கரை மணலில் பெருநாள் ஒன்றுகூடல் போன்ற தலைப்புகளிலோ அல்லது இன்ன பிற பொருத்தமான தலைப்புகளிலோ ஆக்கங்கள் இருந்தால் சிறப்பு!
>> மேலுள்ள தலைப்புகள் அனைத்தும் மாதிரி தலைப்புகள் மட்டுமே! குழந்தைகளின் சிந்திக்கும் திறனை, இவை சுருக்கிவிடக் கூடாது. இவற்றையும் தாண்டி, பொருத்தமான தலைப்புகளை மாணவர்களே தேர்வுசெய்யலாம்!
>> சொல் வரம்பு ஏதுமில்லை.
>> ஆக்கங்களை மின்னஞ்சல் மூலமாகவோ (emmayyamtn@gmail.com) அல்லது நேரடியாகவோ (காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில்) ஒப்படைக்கலாம்.
>> ஆக்கங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: செவ்வாய், 31 ஜுலை 2018
>> ஒருவர் எத்தனை ஆக்கங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
>> ஓவியங்களை வெண்ணிறக் காகிதத்தில் மட்டுமே வரைந்திட வேண்டுகிறோம். மின்னஞ்சலில் அனுப்பினால், தெளிவுமிக்க ஒளிப்படமாக இருத்தல் கட்டாயம்.
சேகரிக்கப்படும் ஆக்கங்களில் தேர்வுசெய்யப்பட்ட சில ஆக்கங்களை மட்டும், குட்டி ஆகாயம் ஆசிரியர் குழுவிற்கு அனுப்பவுள்ளோம். கூடவே, உள்ளூர் ஒளிப்படக் கலைஞர்களான சகோதரர்கள் சுப்ஹான் பீர் முஹம்மது, முஹம்மது ரஃபீக் ஆகியோரின் சேகரிப்பு குவியல்களில் இருந்து சில கண்கவர் ஒளிப்படங்களையும் இணைக்கவுள்ளோம்.
இவை அனைத்தையும் நெய்தல் திணைக்கான சிறப்பிதழில் பதிப்பிக்குமாறு வேண்டிட உள்ளோம்.
இந்த சிறப்பு இதழுக்காக தேர்வுசெய்யப்படாத ஆக்கங்களை, வேறு சிறார் தளங்களில் பதிப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு!
இந்த முயற்சிக் குறித்த கூடுதல் தகவலுக்கு, ஜனாப் முஜீப் (நூலகர், காயல்பட்டினம் அரசு பொது நூலகம்; 9894586729), ஜனாப் கே.எம்.டீ சுலைமான் (துணை செயலாளர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி; 9486655338), ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் (ஒருங்கிணைப்பாளர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு; 9962841761) ஆகியோரில் ஒருவரை அணுகலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1> “பதியம்” – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி!! அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம்!! எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்!!
(22.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19944)
2> ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசிரியர் வெங்கட் நிழல் பங்கேற்ற இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள்!!
(24.11.2017, 25.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=20003)
3> “கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பின் கீழ், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று தனி பிரிவு துவக்கம்!!
(15.09.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19700)
|