புன்னைக்காயலில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் – KSC அணி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 45 வது மாவட்ட கால்பந்தாட்டப் போட்டி புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகம் சார்பில் அதன் மைதானத்தில் ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் புன்னைக்காயல் புனித ஜோசப் அணி, காயல்பட்டினம் KSC, USC,DCW அணிகள், பட்டனம் இனைஞர் மன்றம் வீரபாண்டியன்பட்டணம், மர்காசியஸ் நாசரேத், தூத்துக்குடி சவ்த் கோஸ்ட், பிரண்ட்ஸ் கிளப், SDAT Sports Hostel,செல்வம் சாக்கர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் KSC அணி வீரபாண்டியன்பட்டணம் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கிலும், புன்னக்காயல் அணியை USC அணி சமனுடைப்பு முறையிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதி போட்டி ஜூலை 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் KSC மற்றும் USC அணிகளுக்கிடையே நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில் KSC அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இறுதி போட்டியின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் திரு.பிரிங்ஸ்டன், முன்னால் பொருளாளர் திரு.ஆல்டிரின் மிராண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பையும், வீரர்களுக்கு பரிசும் அளித்து வாழ்த்தி பேசினர். இப்போட்டி தொடரின் சிறந்த வீரர்களாக KSC அணியின் கோல் கீப்பர் அப்துல் காதர், ஹனீபா,USC அணியின் கோல் கீப்பர் அபூபக்கர்,சுலைமான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு அளித்து கவ்ரவித்தனர்.
இறுதி போட்டியை காண்பதற்காக காயல்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான கால்பந்து ரசிகர்கள் நேரில் வந்து கண்டு ரசித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
வாவு முத்து இப்றாஹீம் |