காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் வரவு - செலவு குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசிடமிருந்து விபரங்கள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில், பேருந்து நிலைய வளாகத்தின் தென் கிழக்கு பகுதியில் மே 26, 2015 முதல் இயங்கிவருகிறது அம்மா உணவகம்.
குறைந்த விலையில் - காலை மற்றும் மதியம் உணவு - இந்த உணவகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த உணவகத்திற்கான செலவு, நகராட்சியின் பொது நிதியில் (GENERAL FUND) இருந்து வழங்கப்படுகிறது.
தற்போது காலை 7 மணி முதல் 8:30 மணி வரை, ரூபாய் 1 க்கு இட்லி விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, ரூபாய் 3 க்கு தயிர் சாதம், ரூபாய் 5 க்கு சாம்பார் சாதம் - விற்பனை செய்யப்படுகிறது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்பெறும் இந்த உணவகம் குறித்த பல்வேறு தகவல்களை நடப்பது என்ன? குழுமம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RIGHT TO INFORMATION ACT) மூலம் பெற்றுள்ளது.
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தின் தென் கிழக்கில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில், வேலைமாற்று (SHIFT) முறையில் - காலையில் 6 நபர்கள், மதியம் 6 நபர்கள் என - அன்னம் மகளிர் சுயஉதவிக்குழு சார்ந்த 12 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான தினசரி ஊதியம் நபர் ஒன்றுக்கு ரூபாய் 250. மாதம் ஒன்றுக்கு சுமார் 93,000 ரூபாய் வரை!
அம்மா உணவகத்திற்கு தேவையான - காய்கறி வகைகள் மாதம் ஒன்றுக்கு சுமார் 90,000 ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்படுவதாக, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட - பல மாதங்களுக்கும் மேலான வரவு செலவு கணக்கு - விபரங்களை பார்வையிட்டதில் அறியமுடிகிறது.
மேலும் - அம்மா உணவகத்திற்கு தேவையான எரிவாயு உருளை (GAS CYLINDER) - மாதத்திற்கு சுமார் 45,000 செலவில் கொள்முதல் செய்யப்படுவதாகவும் - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட - பல மாதங்களுக்கும் மேலான வரவு செலவு கணக்கு விபரங்கள் - தெரிவிக்கின்றன.
மேலே சேகரிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் பார்க்கையில் - காயல்பட்டினம் நகராட்சியில் செயல்படும் அம்மா உணவகத்திற்கான மாதாந்திர செலவு - சுமார் 2,25,000 ரூபாய்; வரவு - சுமார் 90,000 ரூபாய். அதாவது - மாதம் ஒன்றுக்கு சுமார் 1,35,000 ரூபாய் இழப்பில் (ஆண்டுக்கு சுமார் 16 லட்சம் ரூபாய் இழப்பில்) அம்மா உணவகம், மக்களுக்கான தன் பணியினை செய்து வருவதாக தெரிகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 7, 2018; 12:30 pm]
[#NEPR/2018070702]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|