காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த – ‘ஹலீம் ஹாஜியார்’ என்றழைக்கப்பட்ட - ‘சேவைச் செம்மல்’ அல்ஹாஜ் ஏ.கே.அப்துல் ஹலீம், நேற்று (08.07.2018. ஞாயிற்றுக்கிழமை) 20.25 மணியளவில் சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 95. அன்னார்,
மர்ஹூம் அஹ்மத் ஸாலிஹ் ஆலிம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் அப்துல் காதிர், மர்ஹூம் ஜுனைத், தம்மாம் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ் ஆகியோரின் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (09.07.2018. திங்கட்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின், சென்னை அங்கப்பன் தெருவிலுள்ள மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டு, தொழுகை நடத்தப்பட்ட பின், சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனர் காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களுடன் நெருங்கிய நண்பரான அவர், அக்கட்சியின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்துள்ளார். சென்னை மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியின் முன்னாள் தலைவர், சென்னை அங்கப்பன் தெரு தமர்க்கிடங்கு பள்ளியின் தலைவர், சென்னை பெரம்பூர் ஜமாலிய்யா மேனிலைப் பள்ளியின் தலைவர், தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் சென்னை கிளை முன்னாள் தலைவர், காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் - சென்னை அமைப்பின் முன்னாள் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து, தம் வாழ்நாளெல்லாம் சமூக – சமுதாயச் சேவையாற்றி வந்ததும், தனது பொதுச்சேவைகளுக்காக, தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ‘சேவைச் செம்மல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கவை.
அவரது மறைவையொட்டி, முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு தலைவர்களும், பல அரசியல் கட்சிப் பிரமுகர்களும் நேரிலும், தொலைதொடர்புகள் வழியிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தகவல்:
டாக்டர் A.முஹம்மத் இத்ரீஸ் |