காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, நகரின் 3 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதோடு, சாலைப் பழுதுகளில் சிலவும் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (#176) பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது என்றும், மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு - முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கவேண்டும் என்றும் பல வாரங்களாக நடப்பது என்ன? குழுமம் - நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்து வருகிறது.
மேலும் - இந்த முக்கிய சாலையை, முற்றிலும் புனரமைக்கவேண்டும் என்றும் கடந்த மே மாதம் - சென்னையில், இத்துறையின் உயர் அதிகாரிகளிடம் - நடப்பது என்ன? நேரில் வலியுறுத்தியது.
அதன் பயனாக, CRIDP திட்டத்தின் கீழ், ரூபாய் 80 லட்ச மதிப்பீட்டில், முற்றிலும் புனரமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், வேகத்தடைகளும், தற்காலிக புனரமைக்கும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திரு பாலசுப்ரமணியம், நடப்பது என்ன? குழுமத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக - திருச்செந்தூர் உட்கோட்ட பொறியாளர் திரு செந்தில்குமார் மற்றும் உதவி பொறியாளர் திரு பிரேம் சங்கர் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு கள ஆய்வுகளும் மேற்கொண்டனர்.
சேக் ஹுசைன் பள்ளி வாயில் அருகில், தைக்கா தெரு - பேருந்து நிலையம் சந்திப்பு அருகில் மற்றும் தாயம்பள்ளி வாயில் அருகில் - வேகத்தடைகள் இன்று நெடுஞ்சாலைத்துறை மூலம் போடப்பட்டது.
மேலும் - பேருந்து நிலையம் சந்திப்பு அருகில், ஐ.சி.ஐ.சி.ஐ சந்திப்பு அருகில், ஹாஜியப்பா தைக்கா சந்திப்பு அருகில், அல்ஜாமியுல் அஜ்ஹர் சந்திப்பு அருகில் - பழுதடைந்துள்ள சாலைகள் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 10, 2018; 7:30 pm]
[#NEPR/2018071002]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|