காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகளைச் செய்யும் வணிக நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்திடுமாறு - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி ஹாஜியப்பா பள்ளி - எல்.கே.மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை இணைக்கும் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாக உள்ளன. இது சம்பந்தமாக புகார்கள் கொடுக்கப்படும் போது எல்லாம் - அவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறும் நகராட்சி, எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இது சம்பந்தமாக கடந்த பிப்ரவரி மாதம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கப்பட்டது. அந்த புகார் மனுவினை, மேல் நடவடிக்கைக்காக - திருச்செந்தூர் வட்டாட்சியர், காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பியிருந்தார். காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றாமல், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாக - மாவட்ட ஆட்சியருக்கு மார்ச் மாதம் பதில் வழங்கியுள்ளார்கள்.
தற்போது மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் - போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. மேலும் - இந்த குறுகிய சாலையின் தென் பகுதியில், சாலைக்கு நடுவே - குடிநீர் வால்வு தொட்டி உள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள - அந்த தொட்டியை அகற்றிடவும், தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான வியாபார உரிமத்தை ரத்து செய்திடவும் கோரி காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் இன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 12, 2018; 1:00 pm]
[#NEPR/2018071202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|