தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் 01ஆம் நாளன்று ப்ளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கும் தடை விதிக்கப்படும் என அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, மாவட்டம் முழுக்க - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், திடீர் சோதனைகளும் பரவலாக நடத்தப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் திடீர் சோதனை – நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தலைமையில், காயல்பட்டினம் முதன்மைச் சாலை, கூலக்கடை பஜார், திருச்செந்தூர் சாலை பகுதிகளிலுள்ள சுமார் 63 வணிக நிறுவனங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனையின் நிறைவில் சில கடைகளிலிருந்து 14 கிலோ - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களுக்கு மொத்தம் 3 ஆயிரத்து முன்னூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி, ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
இவ்வகையான திடீர் சோதனை நகரில் இனி அடிக்கடி நடத்தப்படும் என்றும், வணிகர்கள் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமலும், வாடிக்கையாளர்கள் சிரமம் பாராமல் துணிப் பைகளைக் கொண்டு சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறும், சுகாதார ஆய்வாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
|