தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் 01ஆம் நாளன்று ப்ளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கும் தடை விதிக்கப்படும் என அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, மாவட்டம் முழுக்க - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பரவலாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் 06.07.2018. வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், நகராட்சியால் தயாரித்து விற்பனை செய்யப்படும் நுண்ணுயிர் உரம் குறித்தும் – நகர வணிகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நகராட்சி ஆணையர் ப்ரேம் ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் – ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு அரசு விதித்துள்ள தடைச் சட்டம் குறித்து விளக்கிப் பேசி, வணிகர்கள் தமது வணிக நிறுவனங்களில் ப்ளாஸ்டிக் கேரி பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று வலியுறுத்திப் பேசினார்.
தொடர்ந்து, தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாதிருப்பதற்கான உறுதிமொழியை ஆணையர் முன்மொழிய, பங்கேற்ற அனைவரும் வழிமொழிந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
காயல்பட்டினம் நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகளைப் பிரித்தெடுத்து, அதன் மூலம் உற்பத்தி செய்து விற்கப்பட்டு வரும் நுண்ணுயிர் உரம் குறித்தும் வணிகர்களுக்கு விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் வணிகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில், ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடை செய்யும் அறிவிப்புப் பலகை நிறுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|