திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சுமார் 5 சதவிகித நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை அடிப்படையாக் கொண்டு அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காயல்பட்டினத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், “நடப்பது என்ன?” குழுமத்தை விமர்சித்தும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காயல்பட்டினத்திற்குச் செலவழிக்க – நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தடையாக இருந்ததாகவும் பேசியிருந்தார்.
அதற்குப் பிறகு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பின்வருமாறு செய்தியறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-
எதிர்பார்ப்பது தவறா அண்ணாச்சி அவர்களே...?
அன்புடையீர்,
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
நமதூர் காயல்பட்டினத்தை உள்ளடக்கிய திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான – சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நமதூர் காயல்பட்டினத்திற்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இதுவரை செலவழித்துள்ள தொகை விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று – பொதுமக்கள் பார்வைக்காக நமது “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் வெளியிட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக, 14.07.2018. சனிக்கிழமை மாலையில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா அண்ணாச்சி அவர்கள், தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காயல்பட்டினத்திற்குச் செலவழிக்க – நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்கள் தடையாக இருந்ததாகக் கூறியது கேட்டு உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தோம்.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி கண்ட – நமதூரின் ஜனநாயக விரோத அமைப்பும், நிலபுரபுத்துவவாதிகளும், அதிகாரவர்க்கமும் – தாம் கண்ட தோல்வி தாளாமல் இத்தனை நாட்களாக என்ன சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கிறார்களோ அதுவே அண்ணாச்சி அவர்களின் வாயிலிருந்தும் வெளிப்படும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.
உண்மை என்னவெனில், அண்ணாச்சி அவர்கள் இதுவரை காயல்பட்டினத்திற்குச் செலவு செய்ததிலேயே நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களது பொறுப்புக் காலத்தில்தான் கூடுதலாக செலவழித்திருக்கிறார். அவர் தடையாக இருந்திருந்தால் கூடுதலாகச் செலவழித்திருக்க வாய்ப்பில்லையே...?
ஐ.ஆபிதா ஷேக் அவர்கள் பொறுப்பேற்பதற்கு முன் 2011 – 2012 பருவத்தில் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சிறு தொகையைக் கூட செலவு செய்யவில்லை.
அப்படியானால், அப்போதைய நகர்மன்றத் தலைவர் தடுத்தார்களா...?
ஐ.ஆபிதா ஷேக் அவர்களது பொறுப்புக் காலம் முடிந்த பிறகு 2016 – 2017 காலகட்டத்தில் – சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக அவர் பெற்ற 2 கோடி ரூபாய் மொத்தத் தொகையில் அவர் செலவழித்ததோ வெறும் 1 லட்சம் மட்டுமே!
இக்காலகட்டத்தில் தடுப்பதற்கு நகர்மன்றத் தலைவரே இல்லையே...?
ஆக, தடுக்க யாருமில்லாத இப்பருவத்தில் செலவிட்டதோ மிகக் குறைவு!
தடுத்தாரா, இல்லையா என தெரிவிக்கப்படாத வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்களது பொறுப்புக் காலத்தில் ஒரு ரூபாயும் செலவிடவில்லை!!
யார் தடுத்ததாகக் கூறப்பட்டதோ அந்த ஐ.ஆபிதா ஷேக் அவர்களது பொறுப்புக் காலத்தில்தான் இதுவரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் செலவழித்ததிலேயே கூடுதல் தொகையைச் (rs.45,90,750) செலவழித்திருக்கிறார். அதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மரியாதைக்குரிய அண்ணாச்சி அவர்களே!
எங்கள் “நடப்பது என்ன?” குழுமத்தைப் பொருத்த வரை எந்த அரசியல் கட்சியையோ, அரசியல்வாதிகளையோ, அமைப்புகளையோ தேவையின்றி விமர்சித்துக் குளிர்காய வேண்டிய எந்த அவசியத்திலும் இல்லை. அதுபோல, அவர்கள் செய்யும் நல்லவற்றைப் பாராட்டுவதிலும் எந்தத் தயக்கமும் எங்களுக்கில்லை.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக, 14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட எங்கள் ஊருக்கு – நிறைய செய்யாவிட்டால் கூட பரவாயில்லை... குறைந்தபட்சம் - இருக்கும் வாக்காளர் சதவிகித அளவுக்கேனும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செலவழித்திருக்கலாமே என நாங்கள் எதிர்பார்த்தது தவறா அண்ணாச்சி அவர்களே...?
அடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இதே காயல்பட்டினத்திற்குத் தாங்கள் வாக்கு சேகரிக்க வரும்போது, இந்த ஊருக்குச் செய்ய வேண்டிய - எஞ்சிய சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கான நலத்திட்டப் பணிகளைச் செய்து முடித்து, முகமலர்ச்சியுடன் உரிமையோடு வாக்கு கேட்க வருவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையோடு...
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 15, 2018; 4:45 pm]
[#NEPR/2018071501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|