காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலை தொடர்பாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்து, குழுமம் சார்பில் பின்வருமாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-
DCW தொழிற்சாலை குறித்து நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்ட சில முயற்சிகள் குறித்து சில அவதூறு விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் உலாவருகின்றன. அவைகள் குறித்து - சில விளக்கங்கள் வழங்குவது அவசியம் ஆகியிருப்பதால், இவ்விளக்கம் வழங்கப்படுகிறது.
DCW தொழிற்சாலை பிரச்சனை சம்பந்தமாக காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) - 2012 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு (வழக்குகள் நிறைவுற்றபின்), இவ்வமைப்பு - பல்வேறு காரணங்களுக்காக - முழு செயல்பாட்டில் இல்லை.
இவ்வமைப்பு முழு செயல்பாட்டில் இல்லாவிட்டாலும், அவ்வமைப்பை சார்ந்தவர்கள் - தாங்கள் சார்ந்த பிற அமைப்புகள் மூலம் - இது குறித்து, சூழல்கள் எழும்போது எல்லாம் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
KEPA அமைப்பை சார்ந்த, நடப்பது என்ன? குழுமத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்கள், 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு, DCW தொழிற்சாலை குறித்து பல்வேறு தகவல்களை தொடர்ந்து சேகரித்து வந்துள்ளனர். அவைகளின் அடிப்படையில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார்களையும் தெரிவித்து வந்துள்ளனர். மேலும் - DCW தொழிற்சாலையை எதிர்த்து பிற அமைப்புகள் (2016 ஆண்டிற்கு பிறகு) நடத்திய போராட்டங்களிலும் கலந்துக்கொண்டுள்ளனர்.
கடந்த மே மாதம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகரை சார்ந்த பிரமுகர் ஒருவர், அக்கட்சியின் நிறுவனர் திரு கமல்ஹாசன் - காயல்பட்டினம் வருகை தர உள்ளதால், DCW தொழிற்சாலை குறித்த முழு விளக்கத்தை - அக்கட்சியின் உயர் மட்ட குழுவிற்கு வழங்க - நடப்பது என்ன? குழும நிர்வாகிகளிடம் - வேண்டினார். அந்த கோரிக்கை அடிப்படையில், மே மாதம் 8 ஆம் தேதி - அக்கட்சியின் உயர்மட்ட குழுவிடம், இத்தொழிற்சாலை மூலம் எழும் பிரச்சனைகள் குறித்த ஆவணங்கள் - சென்னையில் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - வழங்கப்பட்டது.
அதன் பிறகு - மே மாதம் இறுதியில், ஸ்டெர்லைட் தொழிற்சாலை பிரச்சனை சம்பந்தமாக தூத்துக்குடிக்கு வருகை புரிந்திருந்த மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர், நடப்பது என்ன? குழும நிர்வாகிகளை - தொலைபேசியில் தொடர்புக்கொண்டு - DCW தொழிற்சாலை குறித்து தாம் சட்டசபையில் பேச விரும்புவதாகவும், இது குறித்த விரிவான விபரங்களை தமக்கு தரும்படியும் கோரினார்.
அதனை தொடர்ந்து - கலந்தாலோசனை செய்த நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், இது குறித்த ஆவணங்களை - மாநிலத்தின் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும் சந்தித்து வழங்கலாம் என முடிவு செய்தனர். மேலும் - சமீப காலங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களையும் இணைத்து - ஆவணங்களை வழங்கலாம் என்றும் முடிவு செய்து - அந்த ஆவணங்களை, புத்தக வடிவில் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவங்களுக்கு பிறகு - KEPA அமைப்பின் தலைவர் (இவர் காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவையின் பொறுப்பிலும் உள்ளார்), நடப்பது என்ன? குழும நிர்வாகிகளில் ஒருவரை (இவர் KEPA அமைப்பின் இணைச்செயலாளரில் ஒருவர்) தொடர்பு கொண்டு - முஸ்லீம் லீக் கட்சியின் பொது செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.அபூபக்கர் - சட்டமன்றத்தில் பேச இருப்பதாகவும், DCW பிரச்சனை குறித்த விபரங்களை அவரிடம் தெரிவிக்கும்படியும் கோரினார்.
அவ்வேளையில் - அவரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்திடம் இது குறித்த ஆவணம் சமீபத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரியும் இது குறித்த விபரங்களை கேட்டிருப்பதாகவும், அவருக்கு வழங்குவது போல் - அபூபக்கர் உட்பட மாநிலத்தின் பல்வேறு கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் - இது சம்பந்தமான ஆவணங்கள் கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட வந்த நிலையில் - ஜூன் 1 அன்று - கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், DCW தொழிற்சாலை குறித்து, சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
அதன் பிறகே, 90 பக்க ஆவணங்கள் தயாரான பின்பு - ஜூன் 4 அன்று, அவரிடமும், தமீமுன் அன்சாரியிடமும் DCW குறித்த ஆவணங்கள் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக எழுதப்பட்ட இணைப்பு கடிதத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது.
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - நடப்பது என்ன? குழுமத்தின் கோரிக்கைப்படி - சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார் என்றும் நடப்பது என்ன? குழுமம் எங்கும் தெரிவிக்கவில்லை. இது - சில விஷமிகளால், திட்டமிட்டே மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரம் ஆகும்.
நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - தமீமுன் அன்சாரி - நடப்பது என்ன? குழுமத்தின் ஆவணங்களை பெற்றபிறகு, அதனை பார்வையிட்டபிறகு - சில விளக்கங்களையும் நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு பெற்றபிறகு - ஜூன் மாதம் இறுதியில், சட்டமன்றத்தில் - DCW தொழிற்சாலை குறித்து பேசினார்.
அதனை தொடர்ந்து - நடப்பது என்ன? குழும நிர்வாகிகளை தொடர்புக்கொண்ட முஸ்லீம் லீக் கட்சியை சார்ந்த ஹாஜி இப்ராஹிம் மக்கி, சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்களின் நேர்முக உதவியாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர், அதிகாரிகளிடம் வழங்கிட - ஆவணங்களின் கூடுதல் நகல் கோரினர். ஆவணங்களின் கூடுதல் நகல்களும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
அதன் பிறகு - நடப்பது என்ன? குழுமத்தை தொடர்புக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், அக்கட்சியின் செயலாளர்களில் ஒருவர் இப்ராஹிம் மக்கி ஆகியோர், தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மூலம் வழங்கப்பட்ட பதில் கடித விபரங்களை தெரிவித்தனர். அவர்களிடம் - அமைச்சகம் வழங்கியுள்ள பதில்களில் உள்ள குறைபாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இவைகள் - கடந்த சில வாரங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு. இவைகள் தவிர - சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இதர தகவல்கள் அனைத்தும்- வழமையான, அவதூறு பிரச்சாரங்கள் ஆகும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 19, 2018; 10:30 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|