காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“குப்பை கொட்டும் அனுமதியைப் புதுப்பிக்க மா.க.வாரியம் பலமுறை நினைவூட்டியும் புதுப்பிக்காத நகராட்சி” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 31ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நாம் முந்தைய பாகத்தில் கண்டது போல் - மார்ச் 7, 2016 அன்று, கொம்புத்துறை (கடையக்குடி) சார்ந்த பால்ராஜ் தொடர்ந்த வழக்கில், குப்பைகளை சர்வே எண் 278/1B இடத்தில கொட்ட - பசுமை தீர்ப்பாயம் - இடைக்கால தடை வழங்க கூறிய ஒரே காரணம் - அவ்விடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் நகராட்சி செய்யாமலேயே குப்பைகளை கொட்ட முற்பட்டது தான்.
அதன் பிறகு - நகராட்சி என்ன செய்திருக்கவேண்டும்? உடனடியாக - அவ்விடத்தில், சுற்றுச்சூழல் விதிமுறைப்படி, பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கவேண்டும்.
மாறாக - நகராட்சி அதிகாரிகள், 8 வகையான பணிகளை மேற்கோள்காட்டி 4 கோடி ரூபாய்க்கு ஒரு மதிப்பீட்டினை தயாரித்தனர்.
|| பாதுகாப்பு சுவர் கட்டுதல் - 52 லட்சம்
|| இணைப்பு சாலை அமைத்தல் - 106 லட்சம்
|| உள்பகுதியில் சிமெண்ட் கல் சாலை அமைத்தல் - 30 லட்சம்
|| குப்பைகளை பிரித்தறியும் தளங்கள் அமைத்தல் - 82 லட்சம்
|| உள்பகுதியில் மின்விளக்கு வசதி செய்தல் - 35 லட்சம்
|| பாதுகாப்பு அறை கட்டுதல் - 15 லட்சம்
|| மரங்கள் வளர்த்தல் மற்றும் குடிநீர் வசதி செய்தல் - 11 லட்சம்
|| LANDFILL வசதி செய்தல் - 69 லட்சம்
அதனை ஜூலை 1, 2016 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் - ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் - நிதியாக கோரி - தீர்மானம் நிறைவேற்றினர். (தீர்மானம் எண் 1180).
உண்மை என்னவென்றால் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய 4 ஏக்கர் நிலம் - இரு திட்டங்களுக்கும் பொருத்தமான இடம் இல்லை என்பது மட்டுமல்ல, போதுமான இடமும் கிடையாது.
குப்பைக்கு மட்டும் 5 ஏக்கர் தேடிவந்த நிலையில், வெறும் 4 ஏக்கரில் - பயோ காஸ் திட்டம் மற்றும் குப்பைக்கிடங்கு என இரண்டும் அமைப்பது முடியாத காரியம் ஆகும்.
மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நகர்மன்றத்தின் ஆயுட்காலம் முடியும் வரை - மத்திய அரசிடம் இருந்தோ, மாநில அரசிடம் இருந்தோ, அந்த நிதி வரவில்லை.
இது ஒரு புறம் இருக்க, சர்வே எண் 278 / 1 B இடத்தில், குப்பைகொட்ட - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி (AUTHORISATION) மார்ச் 31, 2016 அன்றோடு - காலவிதியாகிவிட்டது. பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் இது சம்பந்தமாக நினைவூட்டல் கடிதம் எழுதியும், அதனை புதுப்பிக்கும் முயற்சியில் - நகராட்சி இறங்கவில்லை.
இது சம்பந்தமாக - மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் (திருநெல்வேலி) ஆகியோருக்கு இடையில் நடந்த கடித போக்குவரத்து நகல்கள் வருமாறு:-
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 22, 2018; 10:30 pm]
[#NEPR/2018072202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |