காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“சட்டவிரோத வாவு மஃதூம் / வாவு கதீஜா சாலைகளுக்கு மாற்றாக, அருணாச்சலபுரம் வழியாக மாற்று சாலை!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 34ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர்ரஹ்மான் - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கிய சர்வே எண் 278 இடத்தின், பெருவாரியான பகுதி - CRZ-1 எல்லைக்குள் வருகிறது என அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உட்பட பலர் தெரிவித்தனர்.
CRZ-1 இடங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாகவே - இந்த இடத்தில் பயோ காஸ் திட்டம் கொண்டு வருவதையும், குப்பை கொட்டுவதையும் அவர்களும் எதிர்த்தனர்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை நிராகரித்தது.
இந்த உண்மையை மறைத்த நகரின் ஜனநாயக விரோத அமைப்பும், பல நகர்மன்ற உறுப்பினர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் - ஒரு உண்மைக்கு புறம்பான தகவலை நகரில் பரப்பினர். அது என்னவென்றால் - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அதே சர்வே எண் கொண்ட வட பாக கிராம பகுதியினை பார்வையிட்டு, தவறாக நிராகரித்துவிட்டனர் என்பதாகும்.
இந்த பொய் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
இந்த இடத்தை ஏப்ரல் 2015 இல் ஆய்வு செய்ய வந்த அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களிடம், 1.5 ஏக்கர் நிலம் மறைக்கப்பட்டு, 4 ஏக்கர் நிலம் மட்டும் காண்பிக்கப்பட்டு, CRZ எல்லைக்கு அப்பாற்பட்டு உள்ளது என்ற சான்றிதழ் பெறப்பட்டது.
அதே சமயம் - அப்போதைய நகராட்சி ஆணையர் காந்திராஜன் இடமிருந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமான ஒரு உத்திரவாதத்தையும் பெற்றது. அது என்னவெனில் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தருவதாக கூறிய 1.5 ஏக்கர் நிலம், இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படாது என்றும், அந்த நிலத்தில் - வாவூ மஃதூம் சாலை (140 மீட்டர் நீளம்; 10 மீட்டர் அகலம்) மற்றும் வாவூ கதீஜா சாலை (466 மீட்டர் நீளம்; 10 மீட்டர் அகலம்) அமைக்கப்படாது என்ற உறுதிமொழியாகும்.
இந்த உண்மையையும் பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள மாற்றியமைக்கப்பட்டுள்ள திட்டத்தில், அணுகு சாலை - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் கொடுத்த இடத்தில் வராது.
அதற்கு மாற்றாக, மேற்கில் - அருணாச்சலபுரம் பகுதியில் இருந்து, 1.990 கிலோமீட்டர் தூரத்திற்கு - சுமார் 100 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அணுகு சாலை (APPROACH ROAD) அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA), கடையக்குடி (கொம்புத்துறை), அருணாச்சலபுரம் பகுதி உட்பட நகரின் பல்வேறு பகுதிகளை சார்ந்த சமூக ஆர்வலர்கள் இந்த உண்மையை - பல்வேறு அவதூறுகளுக்கு மத்தியில் வெளிகொண்டுவரவில்லை என்றால், சட்டத்திற்கு புறம்பாக, CRZ-1 இடத்தில், வாவூ மஃதூம் / வாவூ கதீஜா ஆகிய சாலைகளை - நகரின் ஜனநாயக விரோத அமைப்பும், அதன் ஆதாரவாளர்களும் கொண்டு வந்திருப்பர் என்றால் அது மிகைப்படுத்தப்படாத உண்மையாகும்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 23, 2018; 8:30 pm]
[#NEPR/2018072303]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|