காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“சர்வே எண் 278/1B நிலத்தில் குப்பைகள் கொட்டப்படாது!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 35ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அரசு நிலங்கள் பல இருக்க, அந்த பல நிலங்களில் சிலவற்றை - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் அவர்களின் பரிந்துரையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஷ் குமார் IAS பார்வையிட்டு, சில இடங்களை சாத்தியமான இடங்கள் என பட்டியலிட்ட பின்பும், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தர முன்வந்த இடத்தில் தான் - பயோ காஸ் திட்டம் மற்றும் குப்பைகள் கொட்டும் திட்டங்களை கொண்டு வரவேண்டும் என சிலர் சொல்லிவந்தனர்.
அந்த இடம் - கடலுக்கு அருகில் உள்ளது, ஏற்கனவே DCW கழிவுகளால் மாசுப்பட்டுள்ளது, 4 ஏக்கர் நிலம் என்பது இரு திட்டங்களுக்கும் சேர்த்து போதுமானது அல்ல என பல்வேறு ஆட்சேபணைகளை திருமதி ஐ.ஆபிதா சேக், எழுத்துப்பூர்வமாகவே - தீர்மான புத்தகத்தில் அப்போதே பதிவு செய்தார்.
அந்த ஆட்சேபணைகள் எதையும் - அதிகார வர்க்கம் - அன்று கண்டுக்கொள்ளவில்லை.
ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. தற்போது என்ன நடந்துள்ளது?
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய திட்டத்தின்படி - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய 4 ஏக்கர் இடத்தில், நிலத்தில் குப்பைகள் கொட்ட செய்யவேண்டிய பணிகளுக்கு (LANDFILL ARRANGEMENT) எந்த நிதியையும் அரசு ஒதுக்கவில்லை. இந்த பணிகளுக்கு என காயல்பட்டினம் நகராட்சி - 69 லட்சம் ரூபாய், அரசிடம் இருந்து கோரியிருந்தது நினைவிருக்கலாம்.
இதற்கான காரணம் என்ன?
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய இடம் -
குப்பைகளை கொட்ட உகந்த இடம் அல்ல;
பயோ காஸ் திட்டம் இடத்தை சுற்றியே பல சென்ட் இடம் - பாதுகாப்பு காரணமாக - விதிமுறைப்படி காலியிடமாக விடப்படவேண்டும்.
அது போக, அதே இடத்தில், குப்பைகள் கொட்டும் இடம் வந்தால், அதற்கும் போதுமான காலியிடம் விடவேண்டும்.
இவ்விடங்களை சுற்றி - பல ஏக்கர் அளவில் மரங்கள் நடவேண்டும். எனவே - குப்பை கொட்ட அங்கு இடம் இருக்காது
என மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) மற்றும் முன்னாள் நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் ஆகியோர் பல ஆண்டுகளாக சொல்லிவந்துள்ளார்கள்.
இந்த காரணங்களுக்காக - தற்போது, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தந்த இடத்தில் - குப்பைகள் கொட்ட அமல்படுத்தவேண்டிய பணிகளுக்கு (LANDFILL ARRANGEMENTS) எந்த நிதியும் தமிழக அரசு ஒதுக்கவில்லை.
மாறாக - சிவன் கோவில் தெரு அருகில் உள்ள, முன்னாள் காயல்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் ஹாஜி எம்.கே.டி.அபூபக்கர் அவர்கள் பதவிக்காலத்தில், குப்பைகள் கொட்ட திட்டமிட்ட சர்வே எண் 392/5 இடத்தில் - தற்போது அமைக்கப்படும் 3 MTD கொள்ளளவு MICRO COMPOST CENTRE (MCC) அமைப்பு போல், இன்னொரு 3 MTD கொள்ளளவு MICRO COMPOST CENTRE (MCC) அமைப்பு சுற்றுச்சுவருடன் - 211.18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், சர்வே எண் 278/1B இடத்தில் உருவாக்கப்படுகிறது.
அது போக - குப்பைகள் பிரிக்க, SORTING CENTRE என்ற கட்டமைப்பும் - சர்வே எண் 278/1B இடத்தில் - 18.76 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் - உருவாக்கப்படுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் பெறப்பட்ட வரைபடம்:-
இந்த நிதர்சன உண்மைகளை - முன்னாள் நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) ஆகியோர் - ஐந்தாண்டுகளுக்கு முன்பு சொல்லும்போதே - நகரின் ஜனநாயக விரோத அமைப்பும், அவர்களால் தவறுதலாக வழிகாட்டப்பட்ட உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டிருந்தால், நகரின் திடக்கழிவு பராமரிப்பு பிரச்சனைக்கு அன்றே எளிதான தீர்வு கிடைத்திருக்கும்.
குப்பைகள் கொட்டப்படும், அதற்காக ஒதுக்குபுறமான இடம் வேண்டும் என காரணம் கூறப்பட்டு, தற்போது 1 கோடி ரூபாய் செலவில் - தனியார் நிலங்கள் வழியாக, சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
சர்வே எண் 278/1B இடத்தில் குப்பைக்கொட்டும் இடம் வராது என்றால் - தற்போது அங்குள்ள பயோ காஸ் பிளான்ட் கட்டமைப்பும், MICRO COMPOST CENTRE கட்டமைப்பும், SORTING CENTRE கட்டமைப்பும், நகரில் உள்ள ஏதாவது ஒரு அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்.
ஏன் தனியார் இடத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும்?
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 24, 2018; 2:30 pm]
[#NEPR/2018072401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |