காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“கடையக்குடியில் (கொம்புத்துறை) குப்பை கொண்ட மீண்டும் தடை ஏன் வந்தது?” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 30ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் உருவாகும் திடக்கழிவுகளை கையாளுவது குறித்தும், அதற்கான இடங்கள் குறித்தும் - நகரில் நிலவு சர்ச்சைகள் சம்பந்தமாக - தெளிவான, ஆதாரங்கள் / ஆவணங்கள் அடிப்படையிலான உண்மை நிலையினை - நடப்பது என்ன? குழுமம், நவம்பர் 30, 2017 முதல் டிசம்பர் 27, 2017 வரை, 29 பாகங்களாக தகவல்கள் வெளியிட்டது.
டிசம்பர் 2017 இறுதியில் - இவ்விஷயங்களை சுற்றி நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் குறித்து கூடுதல் தகவல் பெறுவதற்காக - அத்தொடர், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் இதர மூலங்கள் வாயிலாக தற்போது தகவல்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சி பாகங்கள் தற்போது வெளியிடப்படுகின்றன.
சர்வே எண் 278/1B (காயல்பட்டினம் தென் பாக கிராமம்) இடத்தில் குப்பைகொட்டவும், பயோ காஸ் திட்டம் அமைக்கவும் - மே 21, 2015 முதல் ஜனவரி 25, 2016 வரை (ஆக மொத்தம் 249 நாட்கள்), பால் ரோஸ் மற்றும் செந்தமிழ்செல்வன் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் தொடர்ந்த வழக்கு [Application No.100/2015] காரணமாக தடை நீடித்தது என்பதனை - பாகம் 28 இல் - கண்டோம்.
ஜனவரி 25, 2016 அன்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, புதுடில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் (SUPREME COURT OF INDIA) தொடரப்பட்ட வழக்கும் ஜூலை 15, 2016 இல் நிறைவுற்ற செய்தியையும். நாம் பாகம் 28 இல் கண்டோம்.
வழக்குகள் நிறைவுற்று - இரு ஆண்டுகள் ஏறத்தாழ ஆகியும் - ஏன் பயோ காஸ் திட்டம் இன்றைய தேதி வரை துவக்கப்படவில்லை மற்றும் ஏன் அங்கு இன்னும் - இன்றைய தேதி வரை - குப்பைகொட்டப்படவில்லை? இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்கள் மறைக்கப்பட்டு, தவறான தகவல்களும், அவதூறுகளும் நகரில் ஒரு சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.
நாம் பாகம் 29 இல் கண்டது போல் - பயோ காஸ் திட்டப்பணிகளை மேற்கொள்ள, CONSENT TO ESTABLISH (CTE) என்ற அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 24-6-2015 அன்று - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியிருந்தது. அந்த அனுமதி 21-6-2017 தேதி வரை - செல்லத்தக்கது. அதாவது சுமார் இரண்டு ஆண்டுகள் - ஆயுட்காலம் கொண்ட அனுமதி அது.
வழங்கப்பட்டுள்ள காலகட்டத்திற்குள் அந்த பணிகள் நிறைவுற்றதாக கூறிய காயல்பட்டினம் நகராட்சி, அந்த பயோ காஸ் திட்டத்தினை செயலுக்கு கொண்டு வர - CONSENT TO OPERATE (CTO) என்ற அனுமதியை பெற, அதற்கான விண்ணப்பத்தை - மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை நினைவூட்டல் செய்தும் - முறையாக சமர்ப்பிக்கவில்லை. இது சம்பந்தமான ஆவணங்களை பாகம் 29 இல் கண்டோம்.
காயல் குப்பை அரசியலின் மற்றொரு அம்சமான குப்பைகொட்டும் விஷயத்தில் - என்ன பிரச்சனைகள் உள்ளன?
காலதாமதத்திற்கு யார் காரணம்?
இது குறித்த ஆவணங்களை அடுத்து விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், காயல்பட்டினம் நகராட்சியும் கொடுத்த பல்வேறு உத்திரவாதங்களை தொடர்ந்து - சர்வே எண் 278 இடத்தை, விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்த அனுமதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம், ஜனவரி 25, 2016 அன்று தீர்ப்பு வழங்கி, தடையை நீக்கியது.
ஆனால் - அப்போதைய +காயல்பட்டினம் நகராட்சி ஆணையர்_ திரு காந்திராஜன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், தீர்ப்பாயத்திற்கும் வழங்கிய உத்திரவாதங்களை துளியும் மதிக்காமல், அவற்றை மீறி - சர்வே எண் 278 இடத்திலும், அதனை சுற்றியும் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாமலேயே உடனடியாக குப்பைகளை கொட்ட துவங்கினார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் குப்பைகளை கொட்டவேண்டாம் என வேண்டி கடையக்குடி (கொம்புத்துறை) பகுதியை சார்ந்த பால் ராஜ் என்பவர், காயல்பட்டினம் நகராட்சிக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் - 5-2-2016 & 17-2-2016 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதினார். அக்கடிதங்களை நகராட்சி அலட்சியப்படுத்தியது; மேலும், தீர்ப்பாயத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் அமல்படுத்தாமல், தொடர்ந்து அவ்விடத்தில் குப்பைகளை கொட்டியது.
மாசு கட்டுப்பாட்டு வாரியமும், இது குறித்து நகராட்சியிடம் வினவியது. அப்போதும் நகராட்சி - குப்பைகொட்டுவதை நிறுத்தவில்லை. இது சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சிக்கு எழுதிய கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி தொடர்ந்து குப்பைகளை காயல்பட்டினம் நகராட்சி சர்வே எண் 278 இடத்தில் கொட்டவே, பால் ராஜ் என்பவர் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளையில் 7-3-2016 அன்று வழக்கு [Application No.50/2016] தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளை, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் குப்பை கொட்ட, மார்ச் 7, 2016 அன்று இடைக்கால தடை உத்திரவு பிறப்பித்ததது. பசுமை தீர்ப்பாயத்தின் மார்ச் 7, 2016 தேதியிட்ட ஆணை:-
இந்த தடையை தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சி என்ன செய்திருக்கவேண்டும்?
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 22, 2018; 7:30 pm]
[#NEPR/2018072201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|