காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“இந்திய அரசியல் சாசனத்திற்கு, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு கிடைத்த வெற்றி!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 36ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அரசு திட்டங்களை - தங்கள் சுயலாபத்திற்காக - நகரின் ஜனநாயக விரோத அமைப்பு "கடத்தி" செல்வது இது முதல் முறையல்ல!
பப்பரப்பள்ளி அருகே - பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது என அறிந்தும், 2010 ஆம் ஆண்டு - அந்த குப்பைக்கொட்டும் இடத்திற்கு அடுத்தாற்போல் - பொது மக்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து, 90 சென்ட் அளவு தனியார் நிலம் வாங்கப்பட்டு - துணை மின் நிலையம் அமைக்க - அரசுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
வேடிக்கை என்னவென்றால் - இந்த இடத்திற்கு நேரெதிராகவே - காலி அரசு புறம்போக்கு நிலம் உள்ளது! அங்கு துணை மின் நிலையத்தை அமைத்திருக்கலாம்!!
சில நூறு மீட்டர் தூரத்தில், எல்.எப்.சாலையில் - பல ஏக்கர் பரப்பளவு கொண்ட - காலி அரசு புறம்போக்கு நிலம் உள்ளது! அங்கு துணை மின் நிலையத்தை அமைத்திருக்கலாம்!!
பப்பரப்பள்ளிக்கு மாற்றாக வேறு இடம் தேடும் முயற்சியில் - 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் ஈடுபட்டபோது - அந்த முயற்சிக்கு இடையூறு செய்ததும் அந்த ஜனநாயக விரோத அமைப்பும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கிய நகர்மன்ற உறுப்பினர்களும் தான் என்பதை கடந்த 35 பாகங்களில் நாம் கண்டோம்.
மூடிய அறைக்குள் இருந்துக்கொண்டு, ஜமாஅத்து கட்டுப்பாடு என்ற பெயரில், இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக, அந்த சாசனம் உருவாக்கிய தேர்தல் ஆணைய விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் விதத்தில் - ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்து, அந்த வேட்பாளர் தான் ஊர் பொது வேட்பாளர், அவருக்கு தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்த அந்த ஜனநாயக விரோத அமைப்பினை, அன்றே சட்டத்தின் முன் அடையாளம் காட்டி, அன்றே கடுமையான நடவடிக்கையும் எடுத்திருக்கவேண்டும். அதை அன்றே செய்ய தவறியதன் விளைவு?
எந்த பின்புலமும் இல்லாமல், வீடு வீடாக சென்று, மக்களின் ஆதரவை கோரி - ஏறத்தாழ 10,000 வாக்குகளை பெற்று வெற்றி அடைந்து - மக்களுக்கு நல்ல பல பணிகளை செய்யும் நோக்கில் பொறுப்பேற்ற ஒரு தலைவருக்கு - நகர்மன்ற உறுப்பினர்களை கையில் எடுத்துக்கொண்டு, பல்வேறு இடையூறுகளை செய்ய அந்த ஜனநாயக விரோத அமைப்பும், அதன் ஆதரவாளர்களும் துணிந்தனர்.
இருப்பினும் - அந்த தடைகளையும், இடையூறுகளையும் மீறி - இன்று, காயல்பட்டினத்தில், திடக்கழிவு மேலாண்மை பிரச்சனையில், இந்திய அரசியல் சாசனம் வெற்றிகண்டுள்ளது, சுற்றுச்சூழல் விதிமுறைகள் வெற்றிக்கண்டுள்ளன என்றால் அது மிகையாகாது!
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், கடந்த 2011 - 2016 காலகட்டத்தில், பல்வேறு நலப்பணிகளை அமல்படுத்தியது மட்டும் அல்லாமல், நகரின் ஆதிக்க சக்திகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும், நிலபிரபுத்துவவாதிகளுக்கும் - மக்கள் சக்திக்கு முன்னர், அவர்கள் செல்லாகாசுகள் என்ற ஒரு பாடத்தினை கற்பித்து சென்றுள்ளார்.
பொது மக்களுக்கு சிரமங்கள் ஒரு புறம் இருந்தாலும், சில பணிகள் காலதாமதம் ஆனாலும், நீண்ட நாட்கள் நிலைக்கக்கூடிய எந்த நன்மையும், போராட்டங்கள், சிரமங்கள் இல்லாமல் கிடைப்பது இல்லை என்பதை பொது மக்கள் அறிந்துள்ளார்கள்; அறியாதவர்களுக்கு அதனை உணர்த்துவது நம் அனைவரின் கடமையாகும்!
[முற்றும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 25, 2018; 12:30 pm]
[#NEPR/2018072501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|