காயல்பட்டினம் நகராட்சி சார்பில், நகரிலுள்ள 18 பள்ளிக்கூடங்களின் ‘நாட்டு நலப்பணித் திட்ட’ (NSS) ஆசிரியர்களுடன் – தூய்மை விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி, 24.07.2018. செவ்வாய்க்கிழமையன்று 14.30 மணி முதல் 17.00 மணி வரை, நகராட்சி கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.
நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். கடையக்குடி அரசுப் பள்ளியின் கல்விக் குழு தலைவர் ஜான்ஸன் ஒருங்கிணைப்பில், அப்பள்ளி மாணவர்கள் – தூய்மை விழிப்புணர்வை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்திக் காண்பித்தனர்.
தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள், மக்கும் குப்பை – மக்காத குப்பை உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் மீது மாணவர்கள் வழியாக – அவரவர் இல்லங்களுக்குச் சேர்ப்பிக்கப்பட வேண்டிய விழிப்புணர்வுத் தகவல்கள் குறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் விரிவாக விளக்கிப் பேசினார்.
நகராட்சி வருவாய் உதவியாளர் நவநீதன் நன்றி கூறினார். சுமார் 1 மணி நேர அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி, பங்கேற்ற ஆசிரியர்களின் தன்னார்வத்தைக் கருத்திற்கொண்டு 2.30 மணி நேரம் நீடித்தமை குறிப்பிடத்தக்கது. நிறைவில், பங்கேற்றோர் அனைவரும் தூய்மை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நகராட்சி சார்பில் வாரம் ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்று இதுகுறித்து நேரடியாகவே மாணவ-மாணவியரைச் சந்தித்து விழிப்புணர்வூட்டுவது பெரும் பயனளிக்கும் என கலந்துரையாடலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஆர்வம் தெரிவித்ததன் அடிப்படையில், வருங்காலங்களில் நிகழ்ச்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|