காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் மைதானத்திலிருந்த ஒரு சாராருக்கு “ஸபூர் செய்யுங்க!” என மற்றொரு சாரார் ஆறுதல் கூறிய நெகிழ்ச்சியான (???) நிகழ்வு நடைபெற்றுள்ளது. விரிவான விபரம்:-
Federation International Football Association – FIFA சார்பில் உலகக் கோப்பை கால்பந்து சுற்றுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், நிகழும் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து சுற்றுப் போட்டிகள், ரஷ்யாவிலுள்ள பல்வேறு மைதானங்களில், கடந்த ஜூன் மாதம் 14ஆம் நாள் துவங்கி, நிகழும் ஜூலை மாதம் 15ஆம் நாளன்று இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்துள்ளது. ஒரு மாத காலம் நடைபெற்ற இப்போட்டிகள் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலை செய்யப்பட்டன.
15.07.2018. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஃப்ரான்ஸ் அணியும், க்ரோஷியா அணியும் மோதின. நிறைவில், 4-2 என்ற கோல் கணக்கில் ஃப்ரான்ஸ் அணி வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைப் பெற்றது. இப்போட்டியை, உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான கால்பந்துப் பிரியர்கள் நேரிலும், தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளித்தனர்.
அந்த வரிசையில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் – KSC மைதானத்தில், இறுதிப் போட்டி தொலைக்காட்சி நேரலையைக் காண அசைபட விரிதிரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மைதான அங்கத்தினரும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கால்பந்துப் பிரியர்களும் – இப்போட்டியைக் காண நூற்றுக்கணக்கில் மைதானத்தில் திரண்டனர்.
ஆட்டத்தின் ஒவ்வொரு பரபரப்பான தருணங்களிலும் அவர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் கரவொலி எழுப்பி, சீட்டியடித்துக் கொண்டாடினர்.
இறுதிப் போட்டியில் களம் கண்ட ஃப்ரான்ஸ் அணிக்கு ஆதரவாக பாதி ரசிகர்களும், க்ரோஷியாவுக்கு ஆதரவாக மீதி ரசிகர்களும் ஆக்ரோஷத்துடன் உற்சாக ஒலியெழுப்பியதால், “இறுதிப் போட்டியே KSC மைதானத்தில்தான் நடைபெறுகிறதோ...” என நினைக்குமளவுக்கு நிலவரம் சென்றது.
ஆட்ட நேரம் முடிவடைந்த நிலையில், 4 – 2 என்ற கோல் கணக்கில் ஃப்ரான்ஸ் அணி வெல்லவே, மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்ட அதன் ஆதரவாளர்கள் க்ரோஷிய ஆதரவாளர்களுக்கு “ஸபூர் செய்யுங்க!” என ஆறுதல் கூறினர்.
இப்படி மகிழ்ச்சியாக நேரலையைக் கண்டுகளித்த அனைவருக்கும் மைதான அங்கத்தினர் சார்பில் தேனீரும், இரவுணவும் வழங்கி உபசரிக்கப்பட்டது.
செய்தித் தொகுப்பு & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
முத்து இப்றாஹீம்
|