‘நடப்பது என்ன?” குழுமம் / MEGA அமைப்பு கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் வெளியிட்ட உத்தரவு குறித்த TIMES OF INDIA நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிசெய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் அதன் இடைவிளைவான பொருட்பாடுகள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்கு 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் (Tamil Nadu Local Bodies Ombudsman Act, 2014) இயற்றப்பட்டது.
இந்த சட்டம் 2014ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்தது.
கடந்த மே மாதம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு வேண்டுகோள் ஒன்று வைக்கப்பட்டது.
அதில் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் துவக்கப்பட்ட பின்பு, உள்ளாட்சி மன்றங்கள் தொடர்பான லஞ்சம் / ஊழல் / முறைக்கேடுகள் புகார்கள் லஞ்சம் ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்படும்போது, அவைகளை அத்துறை திருப்பி அனுப்பிவிடுவதாகவும், முறைமன்ற நடுவத்தை நாடவேண்டும் என்ற தகவல் பொது மக்களை பரவலாக அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் - உள்ளாட்சி மன்றங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க, பொது மக்கள் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தை நாடவேண்டும் என்ற தகவலை, தகவல் பலகை மற்றும் இணையதளம் மூலமாக பொது மக்களுக்கு தெரிவிக்க, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்களும் வழி செய்ய உத்தரவிடும்படி - நடப்பது என்ன? குழுமம் கேட்டுக்கொண்டது.
ஜூன் 19, 2018 தேதிய கடிதம் வாயிலாக நடப்பது என்ன? குழுமத்தின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடுவம் - நடப்பது என்ன? குழுமத்தின் ஆலோசனைப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களின் துறை தலைவர்களுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இந்த உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்து அமைப்புகளும் - அவ்வமைப்புகள் குறித்து ஊழல் / லஞ்சம் / முறைக்கேடுகள் போன்ற புகார்கள் இருப்பினும், பொது மக்கள் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தை தொடர்புக்கொள்ளவேண்டும் என்ற தகவலை, தங்கள் அலுவலக வளாகத்தில் - பொதுமக்களுக்கு எளிதாக தெரியும் வகையில் தகவல் பலகை வாயிலாகவும், தங்கள் இணையதளங்களிலும் பகிர வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் இந்த உத்தரவு குறித்தும், இது குறித்து - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமத்தை நடத்தும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) எடுத்த முயற்சி குறித்தும் TIMES OF INDIA ஆங்கில நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 11, 2018; 9:30 am]
[#NEPR/2018071102]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|