சிங்கப்பூரில் 22.08.2018. புதன்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் – காயலர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுகையிலும், குத்பா பேருரையிலும் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துர்ரஹ்மான், ஜாமிஆ சூலியா ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில், சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன், ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன், முன்னாள் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், அங்குள்ள காயலர்கள் ஒன்றுகூடி கட்டித் தழுவி, கைலாகு செய்து, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டதுடன், குழுப்படமும் எடுத்துக்கொண்டனர்.
அன்றிரவு, சிங்கப்பூர் பிடோக் பகுதியிலுள்ள - சிங்கை காயல் நல மன்ற துணைத் தலைவர் மொகுதூம் முஹம்மத், பொருளாளர் ரிஃபாய் ஆகியோரது இல்லங்களில் – மன்றத்தின் சார்பில் ஹஜ் பெருநாள் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக நடத்தப்பட்ட பின், வந்திருந்த அனைவரையும் வரவேற்கும் வகையில் தேனீர், சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக அனைத்து உறுப்பினர்களிடமும் உறை வழங்கப்பட்டது. அனைவரும் தாராளமாக நிதியுதவி செய்தனர்.
இஷா ஜமாஅத்தைத் தொடர்ந்து, அனைவருக்கும் நெய்ச்சோறு, களறிக் கறி, கத்திரிக்காய் மாங்காங் பருப்பு, மஞ்சள் சோறு, மாசி ஆகியன ஸஹன் முறையில் பரிமாறப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில் – எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், ஹாஃபிழ் ஃபழ்ல் இஸ்மாஈல் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 22.30 மணிக்கு அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
தகவல் & படங்கள்:
சிங்கப்பூரிலிருந்து...
ஹிஜாஸ் மைந்தன் & ஹாஃபிழ் ஃபழ்ல் இஸ்மாஈல்
|