காயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க அரசைக் கோரி, 24.08.2018. வெள்ளிக்கிழமையன்று மாலையில் – போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. அதில் நகரிலுள்ள மத்ரஸா, பள்ளிக்கூடங்களின் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் – அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
வரலாற்றுச் சிறப்பும், புனிதமும் நிறைந்த காயல்பட்டினம் நகரில் – சமூக விரோதிகள் சிலரின் சதிச்செயல் காரணமாக, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில், நல்ல குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் சிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கவலைகொண்டு, “போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக் குழு” எனும் பெயரில் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நிறைவில், போதைப் பொருள் நடமாட்டத்தை நகரிலிருந்து முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் பொதுமக்கள் அனைவரையும் திரட்டி – போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, 24.08.2018. வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் பெரிய சதுக்கைத் திடலிலிருந்து பேரணி துவங்கியது. பேரணி தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. தலைமையேற்க, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வி.கே.தீபு பச்சைக் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.
சதுக்கைத் தெரு, முதன்மைச் சாலை, ஸீ-கஸ்டம்ஸ் சாலை வழியாகக் கடந்து சென்ற பேரணி, 05.30 மணியளவில் கடற்கரையில் நிறைவுற்றது. காயல்பட்டினத்திலிருந்து போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் இல்லாமலாக்க அரசை வலியுறுத்தி பேரணியில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
பின்னர் மேடை நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார், பேரணி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, சாளை ஸலீம் வரவேற்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமையுரையாற்றினார்.
காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மதிமுக மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
காயல்பட்டினம் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் – அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வி.கே.தீபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
காயல்பட்டினத்தின் புனிதம், நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக விரோதிகளால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும், அதில் பள்ளி, மத்ரஸாக்களில் பயிலும் மாணவர்கள் உட்பட பலர் அறியாமையால் சிக்கிச் சீரழியும் நிலை அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை காவல்துறையிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும், அண்மையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் – சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கூறினார்.
நகரின் இளைஞர்களையோ, மாணவர்களையோ கேவலப்படுத்துவது தமது நோக்கமல்ல என்றும், அவர்களது வாழ்வும் – அவர்களது குடும்பத்தாரின் நிம்மதியும் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும், காயல்பட்டினத்திலிருந்து போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை இடைவிடாமல் அனைவரும் தொடர்ந்து களப்பணியாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வி.கே.தீபு, புகைப்பழக்கம், புகையிலை, கஞ்சா, மது உள்ளிட்ட அனைத்துமே போதைப் பழக்கங்கள்தான் என்றும், தம் மக்கள் கெட்டுப்போகாதிருக்க முதலில் பெற்றோர் அவற்றை விட்டும் ஒதுங்கிப் பேணிக்கையுடன் வாழ வேண்டும் என்று கூறினார்.
போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, பரப்புவது, விற்பது அனைத்தும் சட்டப்படி குற்றம் என்றும், விற்பனை செய்பவருக்கு மரண தண்டனை வரை வழங்க சட்டம் உள்ளதாகவும் கூறிய அவர், இனி வருங்காலங்களில் காயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் வலிமையுடன் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிப்பதாகவும் கூறினார்.
போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, பின்வருமாறு அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்:-
எங்கள் ஊர் காயல்பட்டினத்தின் வரலாறு, அதன் புனிதம் அனைத்தையும் உணர்ந்துள்ள நாங்கள், அவற்றை வலுப்படுத்தும் செயல்களில் மட்டுமே ஈடுபடுவோம்... அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தச் செயலிலும் நாங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம்.
சமூக விரோதிகள் சிலரால் எங்கள் ஊரில் அண்மைக் காலமாக திட்டமிட்டு பரப்பப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை, சட்டத்தின் துணை கொண்டு கட்டுப்படுத்துவோம். அத்தீமையைச் செய்யும் யாராக இருந்தாலும், அவர்களை தயவுதாட்சண்யமின்றி சட்டத்தின் முன் நிறுத்துவோம்...
வரலாற்றுச் சிறப்புமிக்க எங்கள் ஊர் காயல்பட்டினத்தின் புனிதத்தை எங்கள் வாழ்நாளெல்லாம் பாதுகாப்போம். இந்நகரிலிருந்து தீமைகள் அடியோடு அகற்றப்படவும், நன்மைகள் நிகழ்த்தப்படவும் நாங்கள் தனிப்பட்ட முறையிலும், ஒற்றுமையுடன் கூட்டாக இணைந்தும் எல்லா வகையிலும் பாடுபடுவோம். இதே நோக்கத்தில் பாடுபடுவோருடன் இணைந்தும் நாங்கள் எங்களால் இயன்ற வரை களப்பணியாற்றுவோம் என மனதார உறுதி கூறுகிறோம்.
காயல்பட்டினம் நகர்மன்ற 18ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் இ.எம்.சாமி நன்றி கூற, அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
பேரணியிலும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திலும் – காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, காயல்பட்டினம் மாணவர் சமூக நலச் சங்கம் (KSSWA) ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், அனைத்து ஜமாஅத்துகள் – பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், அங்கத்தினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக் குழு சார்பாக...
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
படங்கள்:
‘தினகரன்’ ப்ரவீன்
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 11:15 / 27.08.2018.] |