கடந்த 08-02-2019 வெள்ளியன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தெரிவு செய்யப்பட்ட புதிய அமர்வின் முதல் (மன்றத்தின் 118 – வது) செயற்குழு கூட்டம் சென்ற 01-03-2019 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பின் ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பால உணவக உள்ளரங்கில் இனிதே நடந்தேறியது.
அக்கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:
இச்செயற்குழுவிற்கு மன்ற ஆலோசகர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்றார். சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஐபு இறைமறை ஓதினார். சகோ.எஸ்.ஷெய்கு அப்துல்லாஹ் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையுரை:
"தற்போது பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் மன்றத்திற்கு புதியவர்கள் அல்ல. நல்ல திறமையானவர்கள். நம் மன்றத்தோடு இணைந்து பணியாற்றியவர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து நம் நகர் மக்களுக்கான உதவிகளை மன்றம் மூலம் சிறப்பாக செய்வார்கள். அதற்காக நாங்களும் முழு ஒத்துழைப்பு நல்குவோம். கொள்கை, அரசியல், இயக்க வேறுபாடுகளை மறந்து நகர் நலனை மட்டுமே குறிக்கோளாக்கி துடிப்புடன் செயல்பட்டு பயனாளிகளுக்கு தொடர்ந்து நம் மன்றம் சேவையாற்ற வேண்டுமென்று” கேட்டு இறையிடம் பிரார்த்தித்தார்.
அறிமுக உரை:
இம்மன்றத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சகோ.பிரபு எஸ்.ஜெ. நூருத்தீன் நெய்னா அறிமுக உரையாற்றினார். “புதிய அமர்வின் முதல் செயற்குழு கூட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் வருகை தந்தமைக்கு நன்றி கூறினார். இப்பொறுப்பு நமக்கு வழங்கப்பட்ட அமானிதமென்றும், நம் மன்றப்பணிகள் சிறப்பாக நடைபெற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது ஒவ்வொரு செயற்குழுவிலும் குறித்த நேரத்தில் வந்து கலந்து கொள்ளவேண்டும். கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்களை கவனமுடன் அவதானித்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை சுருக்கமாக தெளிவாக கூறலாம். மன்றப் பணிகளின் நிறை குறைகளை இங்கு தாராளமாக விவாதிக்கலாம்” என்று கூறி தனதுரையை நிறைவு செய்தார்.
ஷிஃபா குறித்து:
உலக காயல் நல மன்றங்களால் மருத்துவத்திற்கென்று நிறுவப்பட்ட ஷிஃபா மருத்துவ அறக்கட்டளையின் பணிகள் குறித்த விளக்கங்களையும் நகரில் இயங்கும் மக்கள் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்தும் நகரில் விரைவில் தொடங்கவிருக்கும் டயாலிசிஸ் சென்டர் பற்றிய விபரங்களையும் தெளிவாக்கினார் மன்றச்செயலர் சகோ.சீனா எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது.
இக்ரஃ குறித்து:
உலக காயல் நல மன்றங்களால் கல்விக்கென்று நிறுவப்பட்ட இக்ராஃ கல்விச் சங்கத்தின் பணிகள் குறித்து விளக்கினார் சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ். இரு மாணவர்களின் I A S தேர்வு குறித்த இக்ராஃ கல்விச் சங்கத்தின் கடிதம் கூட்டத்தில் விவரிக்கப் பட்டது. மேலும் இக்ராஃ உறுப்பினர்கள் சேர்க்கை புதுப்பித்தல் குறித்தும் ஞாபகமூட்டி சென்றார்.
பிரத்தியேக WhatsApp குழுமம்:
“நம் மன்றம் புரியும் கல்வி - மருத்துவ உதவிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய அனைத்து விதமான செயல்பாடுகளும் மன்றத்தின் அனைத்து உறுப்பினருக்கும் சென்றடையும் வகையில், பொதுக்குழு உறுப்பினர்களுக்கென்று கட்டுப்பாட்டுடன் கூடிய பிரத்தியேக whatsapp குழுமத்தின் அவசியத்தையும் அக்குழுமம் இயங்கும் முறையையும் எடுத்துக்கூறினார் மன்றச்செயலர் சகோ.எம்.டபிள்யு.ஹாமீது ரிஃபாய். அவரது அந்த கோரிக்கை அனைத்து செயற்குழு உறுப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கருத்துரை:
"விடுமுறை தினத்தில் நம் சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து நம் நகர் மக்களின் துயர் துடைக்க எல்லோரும் கலந்துள்ள இக்கூட்டத்தை பார்க்கும்போது மிக சந்தோசமாக இருக்கிறது. நாம் தத்தமது பொறுப்புகளை உணர்ந்து களப்பணியாற்ற வேண்டும். நாம் செலுத்தும் ஒவ்வொரு ரியாலுக்கும் இறைவன் புறத்தில் அதிக பலன் உண்டு. அல்லாஹ்வின் உதவியால் அளப்பரிய பணிகளை செய்த நம்மன்றம் மேலும் வீரியமாக பணிகளை தொடர்வதற்கு உங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று கேட்டு தன் கருத்துரையை முடித்தார் மன்ற ஆலோசகர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யிது மீரான்.
அடுத்து பேசிய மன்ற ஆலோசகர் சகோ.எம்.ஏ செய்யது இப்ராஹீம்;
“இந்த மன்றத்தின் மேம்பாட்டிற்காக கொள்கை, அரசியல், இயக்க வேறுபாடுகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பயனாளிகளின் நன்மைக்காக நாம் இங்கு ஒன்றுகூடி இருக்கிறோம். இதற்காக நாம் செலவழிக்கும் பணமும் நேரமும் நமக்கு பல நன்மைகளை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. கூட்டத்தின் ஒழுங்குமுறைகளை பற்றி மன்றத் தலைவர் கூறியதை கோடிட்ட அவர் நேரந்தவறாமை மற்றும் செயற்குழுவில் உறுப்பினர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் விவரித்தார். துடிப்புள்ள இளைஞர்கள் இம்மன்றத்தை பொறுப்பேற்கும் தருணத்தில் அழகிய பல மாற்றங்களை காண முடிகிறது. முன்னேற்பாட்டுடன் கூடிய பொருள் அட்டவணை (Agenda), தொலைநோக்குடன் கூடிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான பிரத்தியேக WhatsApp குழுமம் என்று நம் மன்றம் ஒரு Digital மயமாக மாறி வருகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது மனது ஆனந்தம் அடைகிறது. மாற்றம், முன்னேற்றம், நகர் நலம் என்ற முழக்கத்தோடு நாம் சேவையாற்ற வேண்டும். புதிய உத்வேகமுள்ள நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அதற்கு நாம் வழமைபோல் முழு ஒத்துழைப்பை வழங்குவது தலையாய கடமை. நம் மன்றம் தொடர்ந்து மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய இறையிடம் பிராத்திக்கிறேன்” எனக்கூறி தனது கருத்துரையிலிருந்து விடை பெற்றார்.
நிதி நிலை:
கடந்த பொதுக்குழுவின் வரவு செலவு கணக்கு மற்றும் வசூலிக்கப்பட்ட சந்தா விபரங்களை விவரித்தார் மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம். மன்றத்தின் பொதுப் பணம் மற்றும் நிலுவையிலுள்ள இதர வரவு-செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு புதிய செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.
கடந்த செயற்குழுவில் ஒதுக்கப்பட்ட மருத்துவ பயனாளிகளுக்கான உதவிகள் மற்றும் கல்விக்கென வழங்கப்பட்ட தொகை விபரங்களை மன்ற துணைப் பொருளாளர் எம்.எம்.முஹம்மது முஹ்யித்தீன் சமர்ப்பித்தார்.
மருத்துவ உதவிகள்:
ஷிஃபா மூலம் பெறப்பட்ட மருத்துவ உதவிக்கான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு. மூளை காய்ச்சல், கால் அறுவை சிகிச்சை, இருதய நோய், கர்ப்பப்பை சிகிச்சை, குடலிறக்கம், சிறுநீரகக்கல், கண் அறுவை சிகிச்சை, புற்று நோய், நீரழிவு நோய், முதுகுத்தண்டு சிகிச்சை, மனநிலை பாதிப்பு, ஆஞ்சியோகிராம், இடுப்பு எலும்பு முறிவு, மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சை என 24 காயல் சொந்தங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் நோயாளிகளின் பரிபூரண சுகத்திற்காக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
மருத்துவ உதவிகள்:கலந்துரையாடல்:
கூட்டப்பொருள் மீதான செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
நடந்து முடிந்த காயலர் குடும்ப சங்கம பொதுக்குழுவின் நிறை-குறைகள் விவாதிக்கப் பட்டது. வருங்காலங்களில் அந்த குறைகள் எப்படி நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
தீர்மானங்கள்:
1. கடந்த காயலர் குடும்ப சங்கம பொதுக்குழுவில் சிறப்பானதொரு மதிய உணவு மற்றும் தேநீர் ஏற்பாடுகளை செய்து தந்தமைக்காக அன்பு சகோ.கலவா எம்.ஏ.செய்யது இப்ராஹிம் தலைமையிலான யான்பு சகோதரர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது இம்மன்றம்.
2. காயலர் குடும்ப சங்கம பொதுக்குழுவிற்கு அனுசரணை மற்றும் ஆதரவு வழங்கிய அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது இம்மன்றம்.
3. தொழில்முறை சார்ந்த கல்வி உதவி (PROFESSIONAL COURSE APPLICATION) கோரும் மனுக்கள் இக்ரஃ கல்வி சங்கம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு (UNIFIED) அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் அனுப்பிட வேண்டுமென்று இம்மன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
4. IAS பயில விரும்பும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, இக்ரஃ கல்வி சங்கம் மூலம் அவர்களுக்கு உதவ இம்மன்றம் ஆவல் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
5. நம் நகர் மருத்துவ பயனாளிகள் மத்தியில் அரசாங்க மருத்துவ காப்பீட்டு திட்ட உதவிகள் குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
6. இன்ஷா அல்லாஹ், இம்மன்றத்தின் 119 வது செயற்குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் வெள்ளிக்கிழமை வழமைபோல் மாலை 07:௦௦ மணிக்கு ஷரஃபிய்யா – இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் நடைபெறுமென்றும் உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
செயற்குழுவில் கலந்து சிறப்பித்தோர் மற்றும் அனுசரணை வழங்கியோர் யாவருக்கும் சகோ.எஸ்.எஸ்.ஜாஃபர் சாதிக் நன்றி கூறினார்.
சகோ.தோல்சாப் எம்.ஏ.சி.முஹம்மது லெப்பையின் இறை வேண்டல் மற்றும் கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது............. அல்ஹம்து லில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
01.03.2019.
|