கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் செயல்களமாகக் கொண்டு இயங்கி வரும் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் 2019 – 2022 பருவத்திற்கான செயற்குழுவைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில், 15 பேர் புதிய செயற்குழுவினராகவும், அவர்களுள் ஐவர் நிர்வாகிகளாகவும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் புதிய செயலாளர் ஏ.எஸ்.ஐ.முஹம்மத் ஸிராஜ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
தேர்தல்:
அல்லாஹ்வின் உதவியால், எமது மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் – 2019 முதல் 2022 வரையுள்ள பருவத்திற்கான புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், 24.02.2019 ஞாயிற்றுக்கிழமையன்று கேரள மாநிலம் கோழிக்கோடு கோட்டப்பரம்பாவிலுள்ள நெய்னா காக்கா வீட்டு மாடியில் சிறப்புற நடைபெற்று முடிந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...
உறுப்பினர்கள் வருகை:
தேர்தலை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே துவங்கிவிட்டது. தேர்தல் நாளன்று - கோழிக்கோடு, கண்ணூர், தலச்சேரி, வடகரா, தலிப்பேரம்பா, எடப்பால், பைய்யனூர் பகுதிகளிலிருந்து உறுப்பினர்கள் குறித்த நேரத்திற்குள் நிகழ்விடத்தில் திரளாக வந்து குவிந்தனர்.
நடத்தை விதிமுறைகள்:
இந்தப் பருவத்தில் மன்றப் பணியாற்ற மொத்தம் 26 உறுப்பினர்கள் முன்வந்ததால், அவர்களுள் 15 பேரைத் தேர்வு செய்வதற்காக இத்தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்குப்பதிவு செய்வதற்கான வழிமுறைகள், தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களின் விபரங்களை உள்ளடக்கிய வாக்குப்பதிவு மாதிரிச் சீட்டு ஆகியன நிகழ்விட நுழைவாயிலிலேயே அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது.
முன்னேற்பாடுகள்:
தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளை, எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் தலைமையில், தேர்தல் அலுவலர்களான முஹம்மத் இஸ்மாஈல், முஹம்மத் ஹுஸைன், ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் – கவனம் பிசகாமல் முனைப்புடன் செய்தனர்.
வாக்குப் பதிவு:
வாக்குப்பதிவு திட்டமிட்ட படி 10.30 மணிக்குத் துவங்கியது. மன்றத்தின் நடப்பு நிர்வாகிகள், தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்கள் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து வாக்களித்தனர். முன்னதாக - தவிர்க்கவியலாத காரணங்களால் வாக்குப் பதிவுக்கு நேரில் வர இயலாத உறுப்பினர்கள் தொலைபேசி வழியே வாக்குகளைப் பதிவு செய்யலாம் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததையொட்டி, அவ்வாறானவர்கள் தொலைபேசி வழியேயும் வாக்குகளைப் பதிவு செய்தனர். 13.45 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுற்றதாக தேர்தல் அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். வாக்குப்பெட்டி பூட்டிய அறைக்குள் தேர்தல் அலுவலர்களால் பாதுகாக்கப்பட்டது.
மதிய உணவு – களரி விருந்து:
வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே – அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, நாவில் எச்சிலை ஊறச் செய்யும் வகையில் நிகழ்விடத்தின் கிழ்ப்பகுதியில் தேர்தல் விருந்தாக காயல்பட்டினம் பாரம்பரிய களரி சாப்பாடு சமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.
தங்கள் குடும்பத்திற்காக முன்பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மக்வா பெயர் பொறிக்கபட்ட சிறப்புக் கொள்களனில் பவுத்தி சாப்பாடு பகிரப்பட்டது. நெய்னா காக்கா வீட்டின் மொட்டை மாடி வளாகத்தில் மதிய உணவாக – களரி கறி, கத்தரிக்காய் - மாங்காய், புளியானம், தண்ணீர் புட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய காயல் பாரம்பரிய களறி சாப்பாடு ஸஹன் முறையில் விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை:
26 பேர் போட்டியிட்ட இத்தேர்தலில் 15 பேருக்கு அல்லது அதற்கும் குறைவானவர்களுக்கு முத்திரையிட்டால் மட்டுமே அந்த வாக்கு செல்லும் என்றும், இந்த வரையறையைத் தாண்டுவோரின் வாக்குகள் செல்லாத வாக்குகளாகக் கருதப்படும் என்றும் முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. 14.45 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
தேர்தல் அலுவலர்களால் வாக்குப் பெட்டி முறைப்படி திறக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்பட்டு, கணினி மென்பொருள் உதவியுடன் மொத்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது.
நேரில் 108 பேரும், தொலைபேசி வழியே 6 பேரும் என மொத்தம் 114 பேர் வாக்களித்ததாகவும், மொத்தம் 86.36 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும், செல்லாத வாக்குகள் எதுவுமில்லை என்றும் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.
மன்றப் பணிகள் உறுப்பினர் பார்வைக்கு...
நிகழ்விடத்தின் கீழ் தளத்தில் வாக்கு எண்ணிக்கை ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மொட்டை மாடியில் மன்ற உறுப்பினர்கள் – தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக - பொதுக்குழுக் கூட்டத்திற்காக அமர்ந்திருந்தனர். 2016-2019 பருவத்தில் மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகளும், அவற்றின் நிழற்படங்களும் தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அனைத்து உறுப்பினர்களும் அதை ஆர்வமுடன் பார்வையிட்டு, மன்றப் பணிகள் சிறக்க வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
உடல் நல சிறப்புரை:
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலான நேரத்தில், காயல்பட்டினத்திலிருந்து மன்ற அழைப்பையேற்று வருகை தந்திருந்த – தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், ‘உடலே மருத்துவர்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பசி, தாகம், உறக்கம், ஓய்வு ஆகியவற்றை அனைவரும் முறையாகக் கடைப்பிடித்து ஒழுகினாலே நோய் – நொடியின்றி வாழலாம் என்ற கருத்தை உள்ளடக்கி அவர் விளக்கிப் பேசினார்.
பொதுக்குழுக் கூட்டம்:
பொதுக்குழுக் கூட்டம் 16.30 மணிக்குத் துவங்கியது. எஸ்.என்.மீரான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
வரவேற்புரையைத் தொடர்ந்து, தேர்தல் தலைமை அதிகாரியின் ஒப்புதலுடன் – துணைத் தேர்தல் அலுவலர் முஹம்மத் இஸ்மாஈல் – வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற விதம் குறித்து விளக்கிப் பேசினார்.
புதிய செயற்குழு:
தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகளையும், 2019 – 2022 பருவத்தைக் கொண்ட புதிய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரின் பெயர் பட்டியலையும் அவர் முறைப்படி அறிவித்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களது பெயர் பட்டியல் வருமாறு:-
(01) எஸ்.ஷேக் ஸலாஹுத்தீன்
(02) என்.எம்.அப்துல் காதிர்
(03) ஏ.எஸ்.ஐ.முஹம்மத் ஸிராஜ்
(04) ஜெ.நாகூர் மீரான்
(05) என்.மொகுதூம் மீரா ஸாஹிப்
(06) யு.எல்.செய்யித் அஹ்மத்
(07) எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ்
(08) எச்.ஏ.ஜெய்னுல் ஆப்தீன்
(09) எம்.ஜி.செய்யித் இப்றாஹீம்
(10) எம்.எஸ்.அஹ்மத் மரைக்கார்
(11) டீ.எஸ்.ஸாஹிப் தம்பி
(12) எம்.முஹம்மத் ஸுலைமான்
(13) எஸ்.ஜெ.ஜமால் முஹம்மத்
(14) எச்.ஏ.அஹ்மத் மதார்
(15) என்.எம்.முஹம்மத் இஸ்மாஈல்
புதிய நிர்வாகிகள்:
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய செயற்குழுவினர் அறிவிக்கப்பட்ட பின், அந்த 15 செயற்குழு உறுப்பினர்களும் உடனடியாகத் தனியே சென்று, தமக்குள் கலந்தாலோசித்து, மன்றத்தின் புதிய பருவத்திற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து, அப்பட்டியலைத் தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க, அது ஏற்கப்பட்டு – புதிய நிர்வாகிகள் – மக்வா முன்னாள் தலைவரும், ஷிஃபா செயலாளருமான எஸ்.எம்.மஸ்ஊத் அவர்களால் முறைப்படி அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம்:-
தலைவர்:
எஸ்.ஷேக் ஸலாஹுத்தீன்
துணைத் தலைவர்:
என்.எம்.அப்துல் காதிர்
செயலாளர்:
ஏ.எஸ்.ஐ.முஹம்மத் ஸிராஜ்
துணைச் செயலாளர்:
ஜெ.நாகூர் மீரான்
பொருளாளர்:
என்.மொகுதூம் மீரா ஸாஹிபு.
வாழ்த்துரை:
புதிய செயற்குழுவினரை வாழ்த்தி – மன்றத்தின் முன்னாள் செயலாளரும் – ஷிஃபாவின் அறங்காவலருமான சாளை எம்.ஏ.கே.உஸ்மான் ‘லிம்ரா’, மக்வா முன்னாள் தலைவர் எஸ்.எம்.மஸ்ஊத் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
ஏற்புரை:
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய செயற்குழுவின் சார்பில், மன்றத்தின் புதிய நிர்வாகிகள் ஏற்புரையாற்றினர். மொத்த அமைப்பின் தலைமை நிர்வாகம் என்ற இவ்வளவு பெரிய பொறுப்பைத் தங்களை நம்பி ஒப்படைத்தமைக்காக உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். தங்களது பணிகள் நல்ல முறையில் சிறப்புற நடந்தேற அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கணக்குகள் ஒப்படைப்பு:
மன்றத்தின் கணக்கு விபரங்கள் அடங்கிய கோப்பை - முன்னாள் பொருளாளரான - புதிய தலைவர் எஸ்.ஷேக் ஸலாஹுத்தீன், புதிய பொருளாளர் மொகுதூம் மீரா ஸாஹிபிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, அனைவரின் துஆக்களுடனும் - வாழ்த்துகளுடனும் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அவர்கள் குழுப்படம் எடுத்துக் கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வடிவமைப்பு:
ஸிராஜ் |