ஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக - அதிமுக கூட்டணிகளில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பங்கிடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலும் அண்மையில் அக்கட்சிகளால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தை உள்ளடக்கிய தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் அதன் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி கருணாநிதி போட்டியிடவுள்ளார். திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த – எஸ்.டி.குரியர் நிறுவனத்தின் அதிபர் நவாஸ் கனி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவ்விருவரின் வெற்றிக்காகவும் தீவிர களப்பணியாற்றிடுவதென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தேர்தல் பணிகளுக்கான கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நகரில் விரைவில் பொதுக்கூட்டத்தை நடத்திடுவதென – அதன் ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தூத்துக்குடி தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள நகர முஸ்லிம் லீக் அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், 17.03.2019. ஞாயிற்றுக்கிழமையன்று 19.00 மணியளவில், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், தெற்கு ஆத்தூர் அப்பாஸ், புறையூர் ஹனீஃபா, பேட்மாநகரம் வஜீர் அலீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்றாஹீம் அத்ஹம் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாஸுல் அஸ்ஹப் துவக்கவுரை ஆற்றினார்.
ஏரல் ஷாஹுல் ஹமீத் ஆலிம், புறையூர் அல்லாபிச்சை, சேதுக்குவாய்த்தான் பஷீர் அஹ்மத், காயல்பட்டினம் நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூசாலிஹ், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, நேஷனல் காஜா, கே.எம்.டீ.ஸுலைமான் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. வரும் ஏப்ரல் 18ஆம் நாள் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் "மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்" போட்டியிடும் திமுக வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களின் வெற்றிக்கு - இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் முழுவீச்சில் தேர்தல் களப்பணியாற்றி, பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் அவரை வெற்றி பெறச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
2. தேர்தல் பணிகளை முறைப்படுத்திச் செய்திடுவதற்காக, தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் - தொகுதி, ஒன்றிய, நகர, வார்டுகள் வாரியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் களப்பணியாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
3. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் கேரளா மலப்புரம் தொகுதி வேட்பாளர் தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக் குட்டி, பொன்னானி தொகுதியின் வேட்பாளர் இ.டி.முஹம்மது பஷீர், தமிழகத்தில் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் மாநில கௌரவ ஆலோசகர் கே.நவாஸ் கனி ஆகியோரின் வெற்றிக்காக இக்கூட்டம் துஆ செய்கிறது.
4. இராமநாதபுரம் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே. நவாஸ் கனி அவர்களது வெற்றிக்காகத் தேர்தல் களப்பணியாற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி தொண்டர்களை அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் துணைச் செயலாளர் பெத்தப்பா சுல்தான் நன்றி கூற, எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்காவின் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளிலிருந்தும் அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & படங்களுள் உதவி:
N.T.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ |