இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நகரில் விரைவில் பொதுக்கூட்டத்தை நடத்திடுவதென – அதன் ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம், 20.02.2019. புதன்கிழமையன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள - கட்சியின் நகர தலைமை அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையில், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலையில் நடைபெற்றது.
முஸ்லிம் மாணவர் பேரவை நகர தலைவர் கே.ஆர்.மஹ்மூத் ஸாலிஹ் கிராஅத் ஓதினார். கட்சியின் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் வரவேற்றார். கவிஞர் ஏ.ஆர்.தாஹா, எம்.எல்.ஷேக்னா லெப்பை, என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, பீ.எஸ்.என்.அஹ்மத் ஜரூக், எம்.எச்.அப்துல் கரீம், ஷேக் அப்துல் காதிர் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ சிறப்புரையாற்றினார்.
நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) மதுரை – ஒத்தக்கடை மைதானத்தில், 16.02.2019. அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டை மிகச் சிறந்த முறையில் நடத்திட்ட கட்சியின் தேசிய தலைவர், மாநில பொதுச் செயலாளர், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை மனதாரப் பாராட்டுகிறது.
(2) மதுரை – ஒத்தக்கடையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டிற்கு காயல்பட்டினத்திலிருந்து சென்று வந்ததன் வரவு – செலவு கணக்கு விபரங்களை – நகர பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஒப்புதலுடன் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
(3) மாநாட்டிற்கு மிகக் குறுகிய கால அவகாசமே இருந்த நிலையிலும், அதற்கான செலவினங்களுக்கு முழு முயற்சியெடுத்து, கனிசமாக நிதி திரட்டிய நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் ஆகியோரை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.
(4) மாநாட்டிக்குக் காயல்பட்டினத்திலிருந்து சென்று வருவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்தமைக்காக, மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ ஆகியோரை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.
(5) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் – மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டத்தை விரைவில் நடத்திடவும், அதில் பங்கேற்க மாநில பொதுச் செயலாளரும் – சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களிடம் நாள் ஒப்புதல் கேட்கவும் தீர்மானிக்கப்பட்டது.
(6) வரும் கோடைப் பருவத்தை முன்னிட்டு, கட்சியின் நகர கிளை சார்பில் – நகரில் தேவைப்படும் இடங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நன்றியுரையைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் அவர்களது துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|