இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இந்தியா முழுக்கவும் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் - 18.12.2019. புதன்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்று காலையில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 03.01.2020. வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - 650 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியைத் தலையில் சுமந்து பேரணியாகச் சென்று போராடினர்.
10.01.2020. வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகை நிறைவுற்றது முதல் - நகரின் ஆறு ஜும்ஆ பள்ளிகளில் தொழுகையை நிறைவேற்றச் சென்ற பொதுமக்கள் – குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய கண்டன அட்டையை தமது சட்டைகளில் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முஸ்லிம்களுக்கு விரோதமாகவும், நாட்டின் அனைத்து சமயங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரோதமாகவும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, 17.01.2020. வெள்ளிக்கிழமை முதல், நகரின் அனைத்து பள்ளிவாசல்களிலும் மஃரிப் தொழுகைக்குப் பின் குனூத் எனும் சிறப்புப் பிரார்த்தனை செய்யுமாறும், திங்கள் – வியாழன் கிழமைகளில் நோன்பு நோற்று இறைவனிடம் சிறப்புப் பிரார்த்தனை செய்யுமாறும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நகரின் அனைத்து ஜமாஅத் நிர்வாகங்களையும், நகர பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, 17.01.2020. வெள்ளிக்கிழமையிலும், இன்றும் (24.01.2020. வெள்ளிக்கிழமை) நகர ஜும்ஆ பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையின்போது குனூத் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதுபோல, ஒவ்வொரு நாளும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.
|