பொதுவாக வங்கிகளில் கணக்கு துவக்கும்போது Know Your Customer – KYC என்ற நடவடிக்கையின் கீழ் சில ஆவணங்கள் வாடிக்கையாளர்களிடமும், ஏற்கனவே கணக்கைத் துவக்கி, ஆவணம் சமர்ப்பிக்காதவர்களிடமும் வங்கி நிர்வாகத்தால் கேட்கப்படும்.
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சார்பில் அவ்வாறான அறிவிப்பு கடந்த 11.01.2020. அன்று ‘தினத்தந்தி’ நாளிதழில் விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தது. அதில், சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களுள் “National Population Register - NPR – தேசிய மக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்டுள்ள கடிதம்” என்ற ஓர் ஆவணமும் சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம், அதன் தொடர்பிலான NPR உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் – குறிப்பாக காயல்பட்டினத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் வெளிவந்துள்ள இவ்வறிவிப்பானது, மக்கள் எதிர்க்கும் ஒரு சட்டத்தின் கீழான ஆவணத்தை அவர்களே வேறொரு வகையில் தந்தாக வேண்டிய கட்டாயத்தை அவ்விளம்பரம் ஏற்படுத்தியிருப்பதாக சென்ட்ரல் வங்கி – காயல்பட்டினம் கிளை வாடிக்கையாளர்கள் புரிந்துள்ளனர். கூடவே, அந்த ஆவணத்தைச் சமர்ப்பிக்காவிடில் – வங்கியில் வைப்பில் இருக்கும் தொகைக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற ஒரு தகவல் நகர் முழுக்கப் பரவி, மக்களைப் பெரிதும் குழப்பியது.
இந்நிலையில், இம்மாதம் 20, 21 ஆகிய நாட்களில் - காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ள - சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் காயல்பட்டினம் நகர கிளையில் அவ்வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் தமது வைப்புப் பணத்தைத் திரும்ப எடுப்பதற்காகப் பெருமளவில் குவிந்துவிட்டனர். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாதிருக்க ஆறுமுகநேரி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இவ்விரு நாட்களிலும் சில கோடி ரூபாய் வரை வைப்புத்தொகையை வாடிக்கையாளர்கள் தம் கணக்குகளிலிருந்து எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தி வேகமாகப் பரவியதையடுத்து, சன் டீவி உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகத்தினரும், நாளிதழ் செய்தியாளர்களும் நிகழ்விடம் வந்து செய்திகளைச் சேகரிக்கவே மேலும் பரபரப்பானது. அதன் தொடர்ச்சியாக இன்னும் பல வாடிக்கையாளர்களும் வரிசையில் நின்று தமது வைப்புப் பணத்தை எடுத்து வந்தனர்.
இவ்வாறிருக்க, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை அது வழங்கி வருவதாகவும், ஆவணங்கள் கேட்கப்படுவது புதிதாகக் கணக்கைத் துவக்க மட்டுமே என்றும், கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுள் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால் போதுமானது; NPR கடிதத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், மேலும் ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர்களின் வைப்புப் பணத்திற்கு எந்த பாதிப்பும் இதனால் இல்லை என்றும் - வங்கியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நேற்று ஆட்டோ வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பரப்புரையாக அறிவிப்புச் செய்யப்பட்டது.
|